ரஞ்சன் நாமநாயக்க, சட்டம் பயிலுவதற்காக 38 ஆண்டுகளின் பின்னர்,உயர்தரப் பரீட்சை எழுதுகின்றார்


கல்வி கற்பதற்கு வயது கிடையாது என பலரும் கூறிய வருவதையும், பல முதியவர்கள் இன்றும் கல்வி பயின்று வருவதையும் நாம் வாழும் சமூகத்தில் நாள்தோறும் பார்த்து வருகின்றோம்.
சிறு வயது முதல் முதுமைஅடையும் வரை பலர் இன்றும் கல்வி பயின்று வருகின்றனர்.
இலங்கையை பொறுத்தவரை, தனிநபர் ஒருவர் கல்வி பொதுதராதர சாதாரண தரம் மற்றும் உயர்தர தேர்வுகளை எழுதுவது அத்தியாவசியமாகும்.
உயர்தர தேர்வில் வெற்றிபெறும் ஒருவரே, சிறந்த தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் இலங்கையில் நிலவுகிறது.
இந்நிலையில், முதல் தடவையாக 1981ஆம் ஆண்டு உயர்தர தேர்வு எழுதிய ஒருவர், 38 ஆண்டுகளுக்கு பின்னர் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர்தர தேர்வு எழுத இருப்பது வியப்புக்குரிய விடயமாகவே பார்க்கப்படுகிறது.
1981ஆம் ஆண்டு முதல் தடவையாக உயர்தர தேர்வு எழுதி, அதில் வெற்றி பெறாத நிலையில், மீண்டும் உயர்தர தேர்வு எழுதுவதற்காக இலங்கை சினிமா மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் சிறந்த விளங்கும் ஒரு முக்கிய பிரமுகர் இப்போது தயாராகி வருகின்றார்.
இவ்வாறு கல்வி பயின்று வருபவர் வேறு யாருமல்ல. பெருந்தெருக்கள் ராஜாங்க அமைச்சராகவும், இலங்கை சினிமாவின் முன்னிலை நட்சத்திரமாகவும் சிறந்த விளங்கும் ரஞ்ஜன் ராமநாயக்கவே ஆகும்.
38 வருடங்களின் பின்னர், உயர்தர பரீட்சைக்கு தோற்றும் இராஜாங்க அமைச்சர்படத்தின் காப்புரிமைROBERT ALEXANDER
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர்தர பரீட்சை எழுதுவதற்காக மேலதிக நேர வகுப்புக்கள் மற்றும் உயர்தர ஆசிரியர்களிடம் கல்வி பயின்று வருவதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
''அமைச்சுக்கு காலையில் செல்வேன், நாடாளுமன்றத்தில் மாலை உரை நிகழ்த்துவேன், இரவு வேளைகளில் கல்வி பயில்வேன். இதுவே இந்த நாட்களில் எனது கடமைகள்" என ரஞ்ஜன் ராமநாயக்க குறிப்பிட்டார்.
1979ஆம் ஆண்டு கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைக்கு தோன்றியதாகவும், அதில் D-1, C-5, S-1 மற்றும் F-1 ஐ பெற்றுக் கொண்டு வெற்றிபெற்றதாகவும் அவர் கூறினார்.
அதன் பின்னர், 1981ஆம் ஆண்டு தான் உயர்தர தேர்வு எழுதி, ஒரு பாடத்தில் மாத்திரமே வெற்றி பெற்றதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

38 ஆண்டுகளுக்கு பிறகு உயர்தர தேர்வு எழுத காரணம்

தன்னால் வெளியிடப்பட்ட சில கருத்துக்கள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவிக்கின்றார்.
இந்த வழக்கு விசாரணைகளுக்கான வாதங்களை தானே செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
38 வருடங்களின் பின்னர், உயர்தர பரீட்சைக்கு தோற்றும் இராஜாங்க அமைச்சர்படத்தின் காப்புரிமைFACEBOOK
சட்ட கல்வி பயில்வதற்கு, உயர்தர பரீட்சையில் வெற்றி அடைந்திருக்க வேண்டியது கட்டாயம் என கூறிய அவர், அதனாலேயே உயர்தர தேர்வு எழுத எண்ணியதாகவும் குறிப்பிட்டார்.
அடிப்படை சட்டத்தைகூட தெரியாததால், பலர் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாகவும் ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க கூறினார்.
தான் உயர்தர தேர்வு எழுதுவதை கேள்வியுற்ற நண்பர்கள் பலர் தன்மை பார்த்து சிரித்ததாகவும், அரசியல்வாதி என்பதனால் மக்கள் இதனை பார்த்து சிரிப்பார்கள் என அவர்கள் கூறியதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
தனக்கு அறிவை வளர்த்துக் கொள்ளும் நோக்கம் மாத்திரமே காணப்படுவதால், இது பற்றி எதையும் தான் சிந்தித்து பார்க்கவில்லை என அவர் தெரிவிக்கின்றார்.
உயர்தர தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெறுவதற்காக மேலதிகமாக கொழும்பு பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பட்டப்படிப்பொன்றையும் ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க பயின்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.