பாடசாலையில் சுகயீனமுற்ற மகனைப் பார்க்க வந்த தந்தை சுட்டுக்கொலை!

காலி, அக்மீமன பாடசாலை ஒன்றுக்குள் பிரவேசிக்க முயன்ற ஒருவர் மீது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவச் சிப்பாய் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதன்போது படுகாயமடைந்த 39 வயதுடைய குறித்த நபர், கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டை நடத்திய இராணுவச் சிப்பாய் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் நடத்திய விசாரணையின்போது , பாடசாலையில் சுகயீனமுற்ற மாணவனைப் பார்க்க வந்த அவரின் தந்தையே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
இன்று பகல் தனது மகன் சுகயீனமுற்றிருப்பதாக பாடசாலையில் இருந்து சென்ற தொலைபேசி அழைப்பு ஒன்றையடுத்து அவரைப் பார்ப்பதற்காக மேற்படி தந்தை பாடசாலைக்கு வந்துள்ளார். அவர் உட்பிரவேசிக்க முற்பட்டபோது வாசலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவச் படைச்சிப்பாய் அவருடன் தர்க்கம் புரிந்து பின்னர் உட்பிரவேசிக்க அனுமதி மறுத்து இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார்.
கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவச் சிப்பாயிடம் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் நடத்தி வருகின்றனர்.


--- Advertisment ---