“போதைப்பொருள் வியாபாரம் நடத்தவேண்டிய தேவை பிரபாகரனுக்கு இருக்கவில்லை”

போதைப்பொருள் வியாபாரம் நடத்தவேண்டிய தேவை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இருந்திருக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வியாபாரம் நடத்தியே தமிழர் ஆயுதப் போராட்டம் நடத்தியதாக ஜனாதிபதி கூறியிருப்பது தமிழர் போராட்டத்தையே கொச்சைப்படுத்தும் செயற்பாடு என்றும் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நடத்திய போராட்டத்திற்கு தமிழ் மக்களின் ஆதரவு இருந்தது.
குறிப்பாக புலம்பெயர் தேசங்களில் இருந்து தமிழர்கள் அதற்கு பெருமளவான நிதிப் பங்களிப்பை செய்திருக்கிறார்கள். இந்த வரலாறு தெரியாமல் ஜனாதிபதி இப்படி கூறுவது முற்று முழுதான தவறு. அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இது ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஒரு பொய்த்தகவல். இப்படி ஒரு குற்றச்சாட்டு முன்னர் ஒருபோதும் இருந்ததில்லை” என தெரிவித்தார்.


--- Advertisment ---