கடாரம் கொண்டான்: மலேசியாவில் தடை


விக்ரம் நடிப்பில், கமல்ஹாசனின் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான 'கடாரம் கொண்டான்' படம் இந்தியாவிலும், பிற நாடுகளிலும் திரையிடப்பட்டு கணிசமான வரவேற்பைப் பெற்றிருந்த போதிலும், மலேசியாவில் மட்டும் தடை விதிக்கப்பட்டது ஏன்?
மலேசிய காவல்துறையை தரக்குறைவாக விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைந்திருப்பதே இதற்கு மலேசிய தணிக்கைத் துறை தடை விதித்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
இதற்கு முன்பு விஜய் சேதுபதி நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' படத்திலும் சில ஆட்சேபகரமான காட்சிகள் இருந்ததாகக் கூறி மலேசியாவில் அதற்கு தடை விதிக்கப்பட்டது. வேறு சில படங்களுக்கும் இது போன்ற சிக்கல் எழுந்துள்ளது என்றாலும், ஒருசில காட்சிகள் வெட்டப்படுமே தவிர இப்படி மொத்த படமும் முடங்கியதில்லை.
மலேசியாவில் உரிய அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்றும், விக்ரம் படக்குழுவினர் இவ்வாறு அனுமதி பெறாமல் சில இடங்களில் காட்சிகளைப் படமாக்கியது சட்டப்படி தவறு என்றும் 'கடாரம் கொண்டான்' படத்தின் மலேசிய வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் நிறுவனம் விளக்கம் அளித்ததாக ஒரு செய்தி வெளியானது.
இது குறித்து அந்நிறுவனத்தை நாம் தொடர்பு கொண்டு பேசிய போது, தடை குறித்து அதிகம் பேச விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டது.
கடாரம் கொண்டான்
"மலேசிய தணிக்கைத்துறை தடை விதித்த பிறகு ஒரு படத்தை வெளியிட இயலாது. தணிக்கைத்துறையினர் அனுமதித்தால் படத்தை வெளியிடுவோம். அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை," என்று அந்நிறுவனம் முடித்துக் கொண்டது.

தணிக்கைத்துறை என்ன சொல்கிறது?

இதற்கிடையே, 'கடாரம் கொண்டான்' என்பதன் மூலம் சில வரலாற்றுத் தகவல்களை மலேசிய இந்தியர்களும் பிற இனத்தவர்களும் மீண்டும் அசை போடுவதை சில தரப்பினர் விரும்பவில்லை என்றும், அதனால் தான் அத்தலைப்பைக் கொண்டு வெளியான படத்தை தடை செய்துள்ளது என்றும் ஒரு பேச்சும் எழுந்தது.
ஆனால் மலேசிய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவர் முகமத் ஸம்பேரி அப்துல் அசீஸ் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
காவல்துறை குறித்து மோசமாக சித்தரித்ததாலேயே தடை விதிக்கப்பட்டதாக அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.
"தலைப்புக்காக தடை விதிக்கவில்லை. அப்படம் முழுவதும் மலேசிய காவல்துறையின் மதிப்பு சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஒரேயொரு காட்சி எனில் அதை அகற்றிவிட்டு ஒப்புதல் அளித்திருக்கலாம். ஆனால் படம் முழுவதும் மலேசிய காவல்துறை குறித்து மோசமாக சித்தரித்துள்ளனர். அத்தகைய காட்சிகளை நீக்கிவிட்டால் ஒருவருக்கும் படத்தின் கதை புரியாது" என்றார் முகமத் ஸம்பேரி அப்துல் அசீஸ்.

தடையால் அதிகரித்த கெடுபிடியும், லாபமும்

'கடாரம் கொண்டான்' படத்துக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக தற்போது மலேசியாவில் தயாராகும் உள்நாட்டு திரைப்படங்களுக்கும் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. காவல்துறை சம்பந்தப்பட்ட கதைகள், காட்சிகளுடன் புதுப்படம் ஏதும் உருவாகிறது எனில், முன்கூட்டியே போலீஸ் தலைமையகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடாரம் கொண்டான்படத்தின் காப்புரிமைAFP
அக்குறிப்பிட்ட திரைப்படங்களின் கதை, காட்சி அமைப்பு, வசனங்கள் ஆகியவற்றை முன்கூட்டியே அளித்து காவல்துறையின் ஒப்புதலைப் பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேசமயம் 'கடாரம் கொண்டான்' வெளியாகாதது மலேசிய கலைஞர்களுக்கு ஒரு வகையில் மறைமுகமாக நிம்மதி அளித்துள்ளது எனலாம்.
மலேசிய உள்ளூர் தயாரிப்பான 'காளிமுனி தரிசனம்' என்ற படம் இவ்வாரம் வெளியாகியுள்ளது. வழக்கமாக தமிழ்ப் படங்கள் வெளியீடு காணும் சமயங்களில், மலேசிய தமிழ்க் கலைஞர்கள் தங்கள் படத்தை வெளியிடுவதில்லை. போதிய திரையரங்குகள் கிடைக்காதது, வசூல் குறைவது ஆகியவே இதற்கு முக்கியக் காரணம்.
தற்போது விக்ரம் படம் வெளியாகாததால் 'காளிமுனி தரிசனம்' படத்தை திரையிட வழக்கத்தைவிட இரு மடங்கு திரையரங்குகள் கிடைத்துள்ளதாம்.
மலேசிய காவல்துறையின் மதிப்பைக் குறைக்கும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிகளை ஏற்றுக் கொள்ள இயலாது என்கிறார் மூத்த ஊடகவியலாளரும் சினிமா விமர்சகருமான சின்னராசு.
ஊடகவியலாளர் சின்னராசு
Image captionஊடகவியலாளர் சின்னராசு
"கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்நாட்டில் ஊடகப் பணியில் ஈடுபட்டுள்ளதால் தமிழ்ச் சினிமாவின் போக்கை நன்கு அறிந்துள்ளேன். 'கடாரம் கொண்டான்' படத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த சராசரி ரசிகர்களில் நானும் ஒருவன். படம் மலேசியாவில் வெளியாகவில்லை என்பது எனக்கும் வருத்தம் அளிக்கிறது.
"அதே வேளையில் காவல்துறையைச் சீண்டும் வகையில் காட்சிகளும் கதையோட்டமும் இருப்பதை ஏற்க இயலாது. இது தொடர்பாக அந்தப் படத்தின் மலேசிய விநியோகஸ்தர் தரப்பு அளித்ததாக ஊடகங்களில் வெளியிடப்பட்ட விளக்கம் சரியானது. இத்தகைய போக்கை தமிழ்த் திரையுலகத்தினர் தவிர்க்க வேண்டும்," என்கிறார் சின்னராசு.

மாறியது இரட்டை நிலைப்பாடு

இதற்கிடையே மலேசிய இந்திய கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் விஜய் எமர்ஜென்சியிடம் பேசியபோது, அந்நாட்டின் தணிக்கைத்துறை முன்பு இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகவும், அது தங்களுக்கு வருத்தம் அளித்ததாகவும் குறிப்பிட்டார்.
தற்போது 'கடாரம் கொண்டான்' படத்துக்கு விதிக்கப்பட்ட தடையின் மூலம், அந்த நிலை மாறியிருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.
ஏற்கெனவே விக்ரம் நடித்த 'இருமுகன்' படத்திலும் மலேசிய போலீஸார் மோசமாக சித்தரிக்கப்பட்டதாக விஜய் சுட்டிக்காட்டுகிறார்.
மலேசிய கலைஞர்கள் சங்கம் - விஜய் எமர்ஜென்சி
Image captionமலேசிய கலைஞர்கள் சங்கம் - விஜய் எமர்ஜென்சி
"மலேசியாவில் திரைப்படம் தொடர்பாக அரசாங்கம் பல்வேறு விதிமுறைகளை வைத்துள்ளது. அனைத்துப் படங்களும் இவற்றைப் பின்பற்றியே ஆக வேண்டும். உதாரணமாக மசூதிகள் முன்பு நடனமாடுவது கூடாது. போலிஸார் சட்டையைக் கழற்றிவிட்டு, எதிரிகளுடன் மோதும் காட்சிகளுக்கும் அனுமதி இல்லை. இதையெல்லாம் நாங்கள் நூறு விழுக்காடு பின்பற்றுகிறோமா எனத் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவோம்.
"ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்படும், குறிப்பாக தமிழ்ப் படங்களில் இடம்பெறும் பாடல் காட்சிகளில் மலேசிய மசூதிகள் பின்னணியில் தெரியும். மலேசியாவில் எடுக்கப்பட்ட அந்தப் பாடல் காட்சியை மட்டும் முன்பு தணிக்கைத்துறையினர் அனுமதித்தனர். எனவே எங்களுக்கு வருத்தம் இருந்தது. 'சாமி' படத்தில் விக்ரம் கதாபாத்திரம் செய்வது போன்றெல்லாம் மலேசிய போலீஸாரை சித்தரிக்க இயலாது.
"இதற்கு முன்பு வெளியான 'இருமுகன்' படத்திலும் கூட ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் உள்ளன. இவற்றைத் தவிர்க்க வேண்டும். ஒரு சக கலைஞனாக ஒரு படம் வெளியீடு காணவில்லை என்பது வருத்தம் அளித்தாலும், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தணிக்கைத் துறையின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறேன்," என்கிறார் விஜய் எமர்ஜென்சி.

தயாரிப்பாளர்தான் கவனமாக இருக்க வேண்டும்

ஒரு சக தயாரிப்பாளராக 'கடாரம் கொண்டான்' படத் தயாரிப்பாளருக்காக வருந்துவதாகச் சொல்கிறார் நந்தினி. இவர் 'ஜாங்கிரி' என்ற படத்தைத் தயாரித்தவர். தற்போது 'ஐவர்' என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.
"மலேசியாவைப் பொறுத்தவரை சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்பதில் அரசு எப்போதுமே உறுதியாக உள்ளது. எனது படங்களில் காவல்துறை சம்பந்தப்பட்ட காட்சிகள் பெரிதாக இடம்பெற்றதில்லை. அவ்வாறு காட்சிகள் இருக்கும் பட்சத்தில் ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில் நிச்சயம் கவனமாக இருப்பேன்.
திரைப்பட தயாரிப்பாளர் நந்தினி
Image captionதிரைப்பட தயாரிப்பாளர் நந்தினி
"தமிழகத்தில் படப்பிடிப்பின் போது தயாரிப்பாளர்கள் உடன் இருப்பதில்லை என்றே கேள்விப்பட்டிருக்கிறேன். நான் அப்படி அல்ல. என் படத்தின் ஒவ்வொரு நகர்வின் போதும் நான் உடன் இருப்பேன். இதன் மூலம் பிரச்சனைக்குரிய அம்சங்கள் ஏதும் இருப்பின் அவற்றை தொடக்கத்திலேயே சரிசெய்துவிட முடியும்," என்கிறார் நந்தினி.

கொச்சைப்படுத்துவதை ஏற்க இயலாது

பிற நாடுகளின் காவல்துறை குறித்து எதிர்மறையான எண்ணத்தை விதைப்பது தவறு என்கிறார் மலேசிய பாடலாசிரியர் ஃபீனிக்ஸ்தாசன். மேலும் தாம் ஒரு கதாசிரியர் என்பதால் இப்படிப்பட்ட தவறைச் செய்ய வாய்ப்பே இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
"காவல்துறை சம்பந்தப்பட்ட காட்சிகள், கதைகள் என்றால் அவற்றை மலாய் மொழியில் மொழிபெயர்த்து காவல்துறை தலைமையகமான புக்கிட் அம்மானில் அளிப்போம். அதை முழுவதுமாக ஆராய்ந்த பிறகே படமெடுக்க அனுமதி கிடைக்கும். சிறு ஆட்சேபனை இருந்தாலும் அதை மாற்றி அமைக்கச் சொல்வர்.
"காவல்துறை என்பது மக்களை பாதுகாக்கும் மேன்மையான பணியைச் செய்கிறது. ஒருசில போலிசார் சரியில்லை என்பதற்காக ஒட்டுமொத்த துறையையும் மோசமாகச் சித்தரிப்பதை, கொச்சைப்படுத்துவதை ஏற்க இயலாது.
கடாரம் கொண்டான்
"விக்ரம் படத்தை நான் பார்க்கவில்லை. எனினும் விதிமீறல்கள் இல்லாமல் தணிக்கைத்துறை தடை விதிக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். உள்ளூர் திரைப்படங்களுக்கான விதிமுறைகளை அன்னிய நாட்டுப் படங்களுக்கும் நடைமுறைப்படுத்தியது வரவேற்கத் தகுந்தது தான்," என்கிறார் ஃபீனிக்ஸ்தாசன்.

எல்லோருக்கும் ஒரே மாதிரியான கெடுபிடிதானா?

தமிழ்ப் படங்களுக்கு மட்டும் தான் இத்தகைய கெடுபடி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினால், அப்படி இல்லை என்பதே பலரது பதிலாக உள்ளது.
மலேசிய தணிக்கைத்துறை பாரபட்சமின்றி செயல்படுவதாகச் சொல்கிறார் மலேசிய தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் மோகன்ராவ்.
"கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பே கூட சர்ச்சைக்குரிய படங்களுக்கு தணிக்கைத்துறை தடை விதித்துள்ளது. மணிரத்னம் இயக்கிய `பம்பாய்' படம் இந்திய, இஸ்லாமிய சமூகத்துக்கிடையே மோதலை ஏற்படுத்திவிடக் கூடாது என்ற நோக்கில் தடை செய்யப்பட்டது.
"அண்மையில் கூட விஸ்வரூபம் படத்துக்கு தொடக்கத்தில் அனுமதி கிடைக்கவில்லை. படம் வெளியான இரண்டொரு தினங்களில் தணிக்கைத்துறை அனுமதி அளித்தது. பல சீன, ஆங்கில, மலாய் படங்களும் கூட தடை செய்யப்பட்டதுண்டு," என்கிறார் மோகன்ராவ்.