மக்களை பகடக்காய்களாக பயன்படுத்தி நடத்துகின்ற அரசியலை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்


(க.கிஷாந்தன்)

மக்களை அடகு வைக்கின்ற அல்லது மக்களை பகடக்காய்களாக பயன்படுத்தி நடத்துகின்ற அரசியலை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் அவர்களை அந்த நிலையில் இருந்து வெளியேற்றுவதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் அது நானாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாண வலப்பனை ஹைய்பொரஸ்ட் இலக்கம் 3 தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2 மாடி கட்டிடத்தை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

பாடசாலையின் அதிபர் டி திலகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வலப்பனை கல்வி பணிப்பாளர் டி.பி .நவரத்ன கல்வி திணைக்கள அதிகாரிகள் பெற்றோர்கள் பாடசாலை பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர் இதற்காக கல்வியமைச்சு 9 மில்லியன் ரூபாவை ஒதுக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் 

ஒரு காலத்தில் மலையகத்தில் வாழ்ந்த எங்களுடைய மக்களுக்கு நாட்டிலே என்ன நடக்கின்றது என்பதை தெரிந்துகொள்ள முடியாத ஒரு நிலை இருந்தது அதற்கு காரணம் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சியோ வானொலிகளும் அல்லது சமூக வலைதளங்களில் அதிகமாக பாவனையில் இருக்கவில்லை இதன் காரணமாக நாட்டு நடப்புகளையும் உலக நடப்புகளையும் அறிந்து கொள்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்தது அந்த சந்தர்ப்பத்தில் அரசியல்வாதிகள் தங்களுக்கு தேவையானவர்களுக்கு வாக்குகளை வழங்குமாறு மக்களை பணித்தார்கள் அதனை எங்களுடைய மக்களும் ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால் இன்று நிலைமை முற்றாக மாற்றமடைந்து இருக்கின்றது எங்களுடைய மலையக மக்கள் அன்றாடம் இலங்கையிலும் சரி சர்வதேசத்திலும் சரி நடைபெறுகின்ற அரசியல் பொருளாதார கலாச்சார மாற்றங்களையும் அந்த செய்திகளையும் பார்த்தவண்ணமும் செவிமடுத்த வண்ணம் இருக்கின்றார்கள் அவர்களுக்கு இன்று அரசியல் நன்றாகப் புரிகின்றது அவர்களுக்கு இன்று பொருளாதாரம் கலை கலாச்சாரம் என்பன எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அவர்கள் தெரிந்து கொள்கிறார்கள் எனவே இனிமேலும் அரசியல்வாதிகள் தாங்கள் கைநீட்டி நின்றவர்களுக்கு அல்லது தாங்கள் அடையாளப்படுத்துகின்ற அவருக்கு வாக்குகளை வழங்காமல் உண்மையிலேயே எங்களுடைய மக்களுக்கு சேவை செய்ய கூடியவர்களுக்கு கடந்த காலங்களில் அவர்கள் செய்த சேவையை எண்ணிப் பார்த்து சிறப்பான சேவைகளை செய்தவர்களை மாத்திரம் அவர்கள் தெரிவு செய்ய வேண்டும் அப்படி செய்தால் நிச்சயமாக எங்களுடைய மலையகத்தில் இன்னும் பல மாற்றங்களை செய்ய முடியும்.

உங்களுக்குத் தெரியும் நாங்கள் முற்போக்கு கூட்டணி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அந்த கூட்டணி மூலமாக பல்வேறு வெற்றிகளை பெற்று கொண்டிருக்கின்றோம் கடந்த காலங்களில் அரசியல் என்பது மலையகத்தில் பல்வேறு பிரிவாக பிரிந்து செயல்பட்டதன் காரணமாக நாம் எமக்கு கிடைக்க வேண்டிய பல அபிவிருத்திகளையும் நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டது.

இந்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு நாங்கள் ஒரு கூட்டணியாக செயல்பட வேண்டும் என்று தீர்மானித்து அந்த முன்னெடுப்புகளை செய்து இருந்தோம் அதற்கு மக்கள் முழுமையான அங்கீகாரத்தை வழங்கியிருந்தார்கள் எனவே எந்த ஒரு தேர்தலாக இருந்தாலும் சரி அல்லது எந்த ஒரு செயற்பாடாக இருந்தாலும் சரி எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரே வழியில் பயணிக்க முடியுமாக இருந்தால் நிச்சயமாக அந்த செயல்பாடு வெற்றியை தரும் என்பதில் நாங்கள் கடந்த காலங்களில் கண்கூடாக பார்த்து இருக்கின்றோம்.

அதேநேரத்தில் எங்களுடைய மக்கள் சுதந்திரமாக அவர்கள் விரும்பியவர்களுக்கு வாக்குகளை வழங்குவதற்கும் நாங்கள் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் அது தொடர்பான தெளிவான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் இன்று எங்களுடைய இளைஞர்கள் மிகவும் பிரகாசமாக பல்வேறு துறைகளிலும் தங்களுடைய திறமைகளை காட்டி வருகின்றார்கள் குறிப்பாக நுவரெலியா தொண்டர்களை தோட்டத்திலே பிறந்து அங்கேயே வளர்ந்த ராஜகுமாரன் என்ற இளைஞர் ஆணழகன் போட்டிகளில் பங்குபற்றி பல்வேறு தேசிய சர்வதேச வெற்றிகளைப் பெற்று எதிர்வரும் 24ஆம் திகதி சீனா நோக்கி பயணமாகிறார் அவருடைய பயணம் வெற்றியாக அமைந்து இந்த நாட்டிற்கும் மலையக மக்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் அதற்கான அனைத்து வெற்றிகளையும் அவர் பெற்றுக் கொள்ள வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் வாழ்த்துவதில் நான் பெருமைப்படுகின்றேன் அவன் வெற்றியோடு திரும்பி வரவேண்டும் என நான் அவனை வாழ்த்துகின்றேன்.