‘’வென்றது இந்தியா; ஆனால், கவர்ந்தது வங்கதேசமே’’


2019 ஐசிசி உலகக்கோப்பை லீக் போட்டியில் வங்கதேசம் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அரை இறுதியில் நுழைந்துள்ளது.
இலங்கையுடன் சனிக்கிழமை நடக்கும் லீக் போட்டியின் முடிவு, நடப்பு தொடரில் இரு அணிகளுக்கும் பெரிய அளவில் மாற்றம் ஏற்படுத்தாது என்ற நிலையில் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியாவின் வாய்ப்புகள் குறித்த உரையாடல்களை சமூக ஊடகங்களில் பரவலாக பார்க்க முடிகிறது.
அதேவேளையில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுடன் நடந்த போட்டிகளில் இந்தியாவின் பங்களிப்பு குறித்த விமர்சனங்கள் மற்றும் கேள்விகள் முன்னிலை பெற்றுள்ளன.
இங்கிலாந்திடம் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்தியா செவ்வாய்க்கிழமையன்று வங்கதேசம் அணியுடன் நடந்த போட்டியில் தொடக்கத்தில் மிகவும் அதிரடியாக விளையாடியது.
ஒரு கட்டத்தில் எளிதில் 350 ரன்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதியில் இந்தியாவால் 314 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
படத்தின் காப்புரிமைANDY KEARNS/GETTY IMAGE
இந்திய பேட்டிங்கின் பிற்பகுதியில் வங்கதேசம் அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது ஒரு காரணம் என்றாலும், இந்த தொடரில் இந்திய அணியின் பேட்டிங்கில் பலவீனமான அங்கமாக கருதப்பட்ட நடுத்தரவரிசை பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு இம்முறையும் சிறப்பாக அமையவில்லை.
இங்கிலாந்துடனான போட்டிக்கு பிறகு அதிக விமர்சனத்துக்கு உள்ளான தோனி நேற்றைய போட்டியில் 33 பந்துகளில் 35 ரன்கள் குவித்தார். கேதார் ஜாதவுக்கு பதிலாக அணியில் இடம்பெற்ற தினேஷ் கார்த்திக் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
ஹர்திக் பாண்ட்யா ரன் எதுவும் எடுக்கவில்லை. பின்வரிசை ஆட்டக்காரார்கள் முகமது ஷமி, புவனேஸ்வர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
38 ஓவர்களில் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்த இந்தியா, 50 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் மட்டுமே எடுத்தது அணியின் பேட்டிங்கில் உள்ள பலவீனங்களை வெளிக்கொணர்வதாக அமைந்துள்ளது.
இது ஒருபுறமிருக்க, இந்திய அணியின் பந்துவீச்சும் ஏராளமான கேள்விகளை எதிர்நோக்குகிறது.
உலகக்கோப்பையை வெல்லுமா இந்தியா?படத்தின் காப்புரிமைREUTERS
இங்கிலாந்துடன் நடந்த முந்தைய போட்டியில் அதிக அளவு ரன்களை விட்டுக்கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் விமர்சனங்களை சந்தித்தனர். அந்த போட்டியில் குறிப்பாக சுழல் பந்துவீச்சாளர்கள் அதிக அளவு ரன்களை கொடுத்தனர்.
இந்நிலையில் வங்கதேசத்துடன் நடந்த போட்டியில் சுழல் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவுக்கு பதிலாக அணியில் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டார்.
நேற்றைய போட்டியிலும் இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. ஒருகட்டத்தில் வங்கதேசம் வென்றுவிடும் என்ற நிலை இருந்தது. பும்ராவின் பந்துவீச்சு மட்டுமே இந்தியாவின் வெற்றியின் உறுதி செய்தது எனலாம்.
அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணியின், தற்போதைய பங்களிப்பு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகியவற்றை கொண்டு உலகக்கோப்பையை வெல்ல முடியுமா அல்லது இறுதி போட்டிக்கு செல்லுமா என்ற கணிப்புகள் தொடங்கிவிட்டன.
48849740படத்தின் காப்புரிமைCLIVE MASON
வங்கதேசம் அணியுடன் நடந்த போட்டி மற்றும் அரையிறுதியில் இந்தியாவின் வாய்ப்புகள் ஆகியவை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கிரிக்கெட் வீரர் சக்தி கூறுகையில், ''கடந்த 2 போட்டிகளாக இந்திய அணியின் பங்களிப்பில் ஒரு தொய்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நடுவரிசை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகியவை சற்று கவலை அளிக்கின்றன'' என்று கூறினார்.
''வங்கதேசம் அணியின் போராட்டம் நேற்றைய போட்டியில் பாராட்டும்படியாக இருந்தது. இறுதி விக்கெட் விழும்வரை இந்தியா வெல்லும் என்று நிச்சயமாக கூறமுடியாத நிலையே இருந்தது. போட்டியை வென்றது இந்தியாவாக இருந்தது ரசிகர்களை கவர்ந்தது வங்கதேசம் அணியின் பேட்டிங் மற்றும் இறுதிக்கட்ட பந்துவீச்சு ஆகியவைதான்'' என்று அவர் கூறினார்.
உலகக்கோப்பையை வெல்லுமா இந்தியா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
''முகமது ஷமி நேற்றைய போட்டியிலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் இறுதி ஓவர்களிலும் அதிக அளவு ரன்களை கொடுத்துள்ளார். அவர் நல்ல ஃபார்மில் இருப்பது அவசியம். மேலும் சாஹல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் ரன்களை கட்டுப்படுத்தும் வகையில் பந்துவீச வேண்டும்'' என்றார்.
''ஆனால் இனிவரும் முக்கிய போட்டிகளில் இந்தியா சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கலாம்'' என்று அவர் கூறினார்.
உலகக்கோப்பை தொடரின் ஆரம்ப போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற இந்தியாவின் பங்களிப்பு ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுடன் நடந்த போட்டிகளில் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட வேண்டும், பும்ராவுக்கு உறுதுணையாக மற்ற பந்துவீச்சாளர்கள் செய்லபட வேண்டும். அப்போதுதான் இந்தியாவால் உலகக்கோப்பையை வெல்ல முடியும் என்பது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வல்லுனர்களின் கருத்து.