பாராளுமன்ற உறுப்பினரின் மகன் விளக்கமறியலில்


பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர அபேசேகரவின் மூத்த மகனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஜூலை மாதம் 4 ஆம் திகதி வரையில் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குறித்த நபர் இன்று (01) சிலாபம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

26 வயதுடைய இசான் சதுரங்க அபேசேகர எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் தொடர்ந்தும் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த போது ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக பாராளுமன்ற உறுப்பினரின் மகன் பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தடியினால் தாக்குதல் நடத்தியுள்ளார். 

அமைச்சர்களின் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சுசந்த அருண குமார என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். 

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

பின்னர் இது தொடர்பில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர அபேசேகரவும் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.