"குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால் ஷாபியை தடுத்துவைக்க முடியாது!"

குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் ஷாபியை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் தடுத்து வைக்க முடியாது எனப் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கையிடுவதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வைத்தியர் ஷாபிக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
குருணாகல் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றிய வைத்தியர் ஷாபி, கடந்த மே மாதம் 24ஆம் திகதி இரவு மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.
பயங்கரவாதக் குழுவிடம் பணம் பெற்று அந்தக் குழுவின் நோக்கங்களை நிறைவேற்றியமை, அந்த நிதியூடாக சொத்துக்களை கொள்வனவு செய்தமை, பிரதேசத்தில் காணப்படும் அமைதியற்ற நிலைமையில் இனங்களுக்கிடையில் பிரச்சினை ஏற்படுவதைத் தடுக்காமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைதுசெய்யப்பட்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், 90 நாட்கள் தடுத்து வைக்கும் உத்தரவுக்கமைய, அவரைத் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால், பி-210 அறிக்கையுடன் குருணாகல் நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.
எனினும், வைத்தியருக்கு, பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புடையதாகத் தெரியவரவில்லை எனப் ‘பி’ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மற்றும் அவரின் குடும்பத்தினரின் சொத்துக்களை அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது முறையற்ற வகையில் பணம் சம்பாதித்துள்ளமை குறித்து தெரியவரவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த மகப்பேற்று வைத்தியர் ஷாபி, சிசேரியன் சத்திர சிகிச்சை என்ற போர்வையில் சிங்களப் பெண்களுக்குக் கருத்தடை சத்திர சிகிச்சை செய்தார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளூடாக தகவல்கள் வெளியாகவில்லை என்றும் குற்றப்புலனாய்வுப் திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
வைத்தியர் ஷாபி ,தொடர்ந்தும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணையின் முன்னேற்ற அறிக்கை அடுத்த மாதம் 11ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.


--- Advertisment ---