சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்!

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத – இதுவரை பொது எதிரணியில் அங்கம் வகிக்காத 10 அரசியல் கட்சிகள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் கூட்டணி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
கொழும்பு – 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இன்று காலை 9 மணியளவில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் எதிர்காலத் தேர்தல்களை இலக்குவைத்து இந்தக் கூட்டணி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
தென் மாகாண முன்னாள் ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தலைமையிலான மவ்பிம ஜனதாக் கட்சி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி, முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, முபாரக் அப்துல் மஜீத் தலைமையிலான முஸ்லிம் உலமாக் கட்சி, எஸ்.ஜே.துஷ்யந்தன் தலைமையிலான ஈழவர் ஜனநாயக முன்னணி, கமல் நிஷ்சங்க தலைமையிலான லிபரல் கட்சி, சரத் மனமேந்திர தலைமையிலான நவ சிஹல உறுமய, சரத் விஜேரத்ன தலைமையிலான பூமிபுத்திர கட்சி, ஜயந்த குலதுங்க தலைமையிலான ஐக்கிய இலங்கை மகா சபை, அருண சொய்சா தலைமையிலான ஜனநாயக தேசிய இயக்கம் ஆகிய கட்சிகளே தாமரை மொட்டுக் கட்சியுடன் கூட்டணி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
கூட்டணி அமைப்பது தொடர்பில் 29 அரசியல் கட்சிகளுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கலந்துரையாடல்களை நடத்தியது எனவும், அவற்றில் 10 கட்சிகள் மாத்திரம் இதுவரை இணக்கம் தெரிவித்து உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.