அதிரடியாக செயற்பட்ட பிரதேச சபை தலைவர்


(க.கிஷாந்தன்)
கொட்டகலை பிரதேச சபைக்கு சொந்தமான கொட்டகலை பொது மைதான இடங்களை கடந்த பல வருடகாலமாக ஆக்கிரமிப்பு செய்து அங்கு அனுமதியற்று அமைக்கப்பட்டிருந்த  கட்டடங்களை கொட்டகலை பிரதேச சபை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு இடங்களை மீட்டுள்ளதுடன், அனுமதியற்ற கட்டடங்களையும் ஜே.சி.பி இயந்திர வாகனம் கொண்டு தகர்த்துள்ளதாக தவிசாளர் ராஜமணி பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ள தவிசாளர் மேலும் தெரிவித்ததாவது,
கொட்டகலை பொது மைதானத்தை சிலர் பல வருடகாலமாக ஆக்கிரமிப்பு செய்திருந்த நிலையில் இவ்வாறு ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டவர்களுக்கு எதிராக இப்பிரதேச இளைஞர், யுவதிகள் மற்றும்  விளையாட்டு வீரர்கள் கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் என்ற வகையில் எனது கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
இதனையடுத்து இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களின் கவனத்திற்கு கடித மூலம் பிரதேச சபை அண்மையில் கொண்டு வந்தது.
இருந்த போதிலும் சபை மூலமாக அனுப்பிவைக்கப்பட்ட கடிதங்களை ஆக்கிரமிப்பாளர்கள் கவனத்திற்கு கொள்ளவில்லை என தவிசாளர் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, இந்த விவகாரம் சம்பந்தமாக பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் கொண்டு வந்து உறுப்பினர்களின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டது என தெரிவித்த அவர், இது தொடர்பில் சபை அமர்வில் கலந்துரையாடப்பட்டு மைதானத்தில் இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை தகர்ப்பதற்கும் ஏகமானதான முடிவும் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
பின் இவ்விடங்களை கொட்டகலை பிரதேச சபைக்கு சொந்தமாக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அந்தவகையில் இது தொடர்பாக கொட்டகலை பொது  விளையாட்டு மைதானத்திற்கு அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளும் வகையில் பிரதேச சபை தவிசாளர்  ராஜமணி பிரசாத் உள்ளிட்ட சபை உறுப்பினர்கள் பலரும் அங்கு சென்றதாக தெரிவித்தார்.
அத்துடன் சபையின் தொழிநுட்ப உதவியாளர்களுடன் மைதானத்திற்கு சென்ற இவர்கள் தொழில்நுட்பம் உதவியாளர்களின் உதவியுடன் ஜே.சி.பி வாகனத்தின் உதவியினூடாக பொது விளையாட்டு மைதானத்திற்கு சொந்தமான இடங்களை பிரதேச சபையின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததுடன் இவ்விடங்களில் பலாத்காரமாக அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த  கட்டடங்களையும் தகர்க்கப்பட்டு அவ்விடங்களையும் பிரதேச சபையின் கட்டுப்பாட்டுக்கு சொந்தமாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.