தந்தைக்கு அர்ப்பணம்

கிங்ஸ்டனில் நடந்து வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர் ஹனுமா விஹாரி 111 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். தனது 6-வது டெஸ்டில் ஆடும் ஹனுமா விஹாரிக்கு இதுவே முதல் சர்வதேச சதமாகும். ஆந்திராவைச் சேர்ந்த 25 வயதான விஹாரி 2-வது நாள் ஆட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த டெஸ்டில் முதல் நாள் ஆட்டம் முடிவில் நான் 42 ரன்களுடன் இருந்தேன். அன்றைய நாள் இரவு நான் சரியாக தூங்கவில்லை. இதை எப்படி பெரிய ஸ்கோராக மாற்றப்போகிறேன் என்ற நினைப்பு தான் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. 2-வது நாளின் முதல் பகுதியில் அவர்கள் முழு முயற்சியோடு கடினமாக பந்து வீசுவார்கள் என்பது தெரியும். முதல் பந்திலேயே ரிஷப் பந்த் ஆட்டம் இழந்ததும், பொறுமையை கடைபிடித்து, ஏதுவான பந்துகளை மட்டும் அடிக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கு ஏற்ப செயல்பட்டேன்.
ஒரு வழியாக சதத்தை எட்டியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதுவும் இது போன்ற கடினமான சூழலில் சாதித்தது மனநிறைவை தருகிறது. ஆனால் எல்லா பெருமையும் இஷாந்த் ஷர்மாவுக்கு தான் வழங்க வேண்டும். ஏனெனில் அவர் பேட்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது. அவர் இல்லாவிட்டால் இந்த சதத்தை என்னால் அடித்திருக்க முடியாது. சொல்லப்போனால் என்னை விட அவர் தான் கைதேர்ந்த பேட்ஸ்மேன் போல் காணப்பட்டார். எங்களுக்குள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தது. யாருடைய பவுலிங்கை அடித்து ரன் எடுப்பது என்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து விளையாடினோம். அவரது அனுபவம் உதவிகரமாக இருந்தது. அது எனது நெருக்கடியை தணித்தது.

எனக்கு 12 வயதாக இருந்த போது, எனது தந்தை மரணம் அடைந்து விட்டார். எனவே முதல் சர்வதேச சதத்தை எனது தந்தைக்கு தான் அர்ப்பணிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். இந்த சதம் அவருக்குரியது. இன்றைய நாள் எனக்கு மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. அவர் எங்கிருந்தாலும் அவரை பெருமைப்படுத்தி விட்டதாக நினைக்கிறேன்.

இவ்வாறு விஹாரி கூறினார்.


Advertisement