ஓட்டமாவடி முன்னிலை,புகைத்தல் பாவனையில்

புகைத்தல் பாவனையில் ஓட்டமாவடி பிரதேசம் முதன்மை வகிப்பது பெரும் கவலையான விடயமாகும்- பிரதித் தவிசாளர் அஹமட் லெப்பை

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

'புகைத்தல் பாவனையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி பிரதேசமே முதன்மை வகிப்பது பெரும் கவலையான விடயமாகும்' என ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதித்தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதே சபையின் பதினேலாவது அமர்வு தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு உறுப்பினர் கொண்டு வந்த தீர்மானங்கள் மீண்டும் மீண்டும் வேறு உறுப்பினர்களால் பிரேரணையாகக் கொண்டு வருவதனை இச்சபையானது தடை செய்ய வேண்டுமென்பதையும், அவ்வாறு செய்யும் போது தான் ஒரு உறுப்பினருக்கான கௌரவமும் சபையின் ஒழுங்கும் பேணப்படுவதுடன், தீர்மானத்திற்கான பெறுமானம் உறுதி செய்யப்படும். ஆகவே, இப்பிரேரணையினை இச்சபை ஏகமனதாகத் தீர்மானித்து நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இதுவரை சுமார் 16 சபை அமர்வுகள் இடம்பெற்றுள்ளது. அதில் என்னால் கொண்டு வரப்பட்ட பிரேரணைகளுக்களுக்கான நடவடிக்கைகளின் விபரங்களைத் தருமாறும், அமீர் அலி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டரங்கானது மிகவும் ஆபத்தாக இடிந்து விழும் நிலையில் காணப்படுவதனால், அதனை பொது மக்களோ விளையாட்டு வீரர்களோ பயன்படுத்துவதை முற்றாகத்தடை செய்து அனர்த்தம் ஏதும் இடம்பெறாமலிருக்க முன்னச்சரிக்கை நடவடிக்கையாக இத்தீர்மனத்தை நிறைவேற்றி இது விடயமாக நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.

அத்துடன் போதைப்பாவனை எமது நாட்டில் மூலை முடுக்குகளில் மாத்திரமல்ல, பாடசாலைகள், பாராளுமன்றம் மற்றும் அதிமேதகு ஜனாதிபதி வரைக்கும் பேசப்பட்ட விடயமாகும். ஆனால் இதுவரைக்கும் காத்திரமான நடவடிக்கை மூலமாக அவற்றைக் குறைத்ததற்கான தரவுகளோ எட்டப்படவில்லை.

புகைத்தல் பாவனையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி பிரதேசமே முதன்மை வகிப்பது பெரும் கவலையான விடயமாகும். மேலும் வெற்றிலைக் கடைகள் எல்லாம் தற்போது போதைக்குரிய பொருட்கள் விற்பனை செய்யும் தளமாகவுள்ளது. இது விடயமாக ஏற்கனவே தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டும் இதுவரைக்கும் அது தீர்மானமாகவே உள்ளது என்பது தான் கவலையான விடயமாகும். எனவே இது விடயத்தில் இச்சபை கவனஞ்செலுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் குடிநீருக்காக குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள குறுகிய வீதிகளில் வடிகான்களை குழாய்களுக்கு மேலாக அதிகமாக இடப்பட்டுள்ளது. இதனால் அப்பிரதேசத்திலுள்ள மக்களால் குடி நீரிணைப்புக்களைப் பெற முடியாத துர்ப்பாக்கிய நிலையேற்றபட்டுள்ளது. மக்களில் ஆரோக்கியத்திற்கும் உயிர் வாழ்வதற்கும் வடிகான்களை விட குடிநீரே மிகவும் பிரதானமானதாகும். வடிகாலமைப்புச் சபையானது இது விடயமாக பிரதேச செயலகம், பிரதேச சபைகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியும் கண்டும் காணாமல் பொடுபோக்குத்தனமாக இருப்பதையிட்டு கவலையினையும் கண்டனத்தையும் தெரிவிக்கின்றேன்.

இத்தகைய செயற்பாடானது பொது மக்களுக்கு நன்மைகளை விட அசௌகரியங்களையும் அதிகமான பொருளாதார செலவீனங்களையுமே எதிர்காலத்தில் ஏற்படுத்தவுள்ளது. எனவே பொது மக்களின் நன்மைகருதி குடிநீர் இணைப்புக்களைப் பெற்றுக் கொண்டதன் பின்னரே வடிகான்களை இடுவதற்கு தடை விதிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.Advertisement