சுஜித்தை மீட்கும் பணி 63 மணி நேரத்தை கடந்து தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியிருக்கும் 2 வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 63 மணி நேரத்தை கடந்து தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த நிலையில், 4வது நாளாக மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.
சிறுவன் சுஜித்தை மீட்க மற்றொரு குழியை தோண்ட பயன்படுத்தப்பட்ட 'ரிக்' இயந்திரத்தின் செயல்திறன் இதற்கு போதவில்லை என்பதால் நேற்று இரவு இரண்டாவது 'ரிக்' இயந்திரம் மீட்பு பணி நடக்கும் இடத்துக்கு வந்தது.
இந்நிலையில், இரண்டாவது இயந்திரத்தை பயன்படுத்தும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Image copyrightகு. மதன் பிரசாத்62 மணிநேரத்தை கடந்த மீட்புப்பணி
அந்த இடத்தில் கடினமான பாறைகள் இருப்பதால் துளையிடுவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது என்று எமது செய்தியாளர் மு.ஹரிஹரன் களத்தில் இருந்து தெரிவித்தார். இதனால் சிறுவன் சுஜித்தை மீட்க மற்றொரு குழி தோண்டும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இரவு பகலாக மீட்பு பணிகள் நடந்து வந்தாலும் கடினமான பாறைகள் இருப்பதால் மீட்புப்பணிகள் தாமதமாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (திங்கள்கிழமை) காலையில் மீட்புப்பணி நடக்கும் இடத்திற்கு வந்த நடிகர் தாமு, அங்கு சிறுவன் சுஜித் மீட்புக்காக பிரார்த்தனை மேற்கொண்டார்.
Image copyrightகு. மதன் பிரசாத்நடிகர் தாமு
முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு மீட்புப்பணி நடக்கும் இடத்திற்கு வந்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், செய்தியாளர்களை சந்தித்தார்.
சுஜித்தை மீட்க தோண்டப்பட்டு வரும் மற்றொரு குழியில் இதுவரை 35 அடிதான் தோண்டியிருப்பதாகவும், இன்னும் 45 அடி தோண்ட வேண்டியுள்ளது என்றும் மீட்புப்பணி பற்றி குறித்து ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.
''தண்ணீர் தேவைக்காக தோண்டப்பட்ட இந்த ஆழ்துளை கிணறு, நீரின்றி போனதால் முடப்பட்டது. ஆனால், தற்போது மழை பெய்வதால், மண்ணால் மூடப்பட்டிருந்த இந்த ஆழ்துளை கிணற்றை மூடியிருந்த மண் அகன்றுள்ளது. அப்போது, அங்கு விளையாடி கொண்டிருந்த சுஜித் உள்ளே விழுந்துள்ளான்," என்று சம்பவத்தை ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு விளக்கினார்.
முன்னதாக, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நவீன கேமரா பொருத்திய கருவியை பயன்படுத்தி மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.