விஜய் ரசிகர்களால் யாழ்ப்பாணம் திரையரங்கம் சேதம்


பிகில் திரைப்படம் வெளியான நாளான இன்று சிறப்பு காட்சிகள் திரையிடப்படுவதில் தாமதம் ஆனதால் தமிழகத்தின் சில பகுதிகளில் விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் சூழலில், இலங்கையிலும் இதே போன்றதொரு சம்பவம் நடந்துள்ளது.
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள ராஜா திரையரங்கம் பிகில் முதல் காட்சியை பார்ப்பதற்கு முண்டியடித்த விஜய் ரசிகர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் அட்லியின் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் இலங்கையில் உள்ள திரையரங்குகளிலும் இன்று அதிகாலை முதல் திரையிடப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள ராஜா திரையரங்கிலும் இன்று அதிகாலை 4.30 மணிக்கு முதற்காட்சி ஒளிபரப்பு செய்யப்படவிருந்த நிலையில் அதிகளவில் வந்த விஜய் ரசிகர்கள் பலர் தங்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் போன விரக்தியில் திரையரங்கை சேதப்படுத்தியுள்ளனர்.
எனினும் போலீசாரின் உதவியுடன் நிலைமை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன் தொடர்ந்து பிகில் திரைப்படம் திரையிடப்பட்டு வருகின்றது.
பிகில் திரைப்படம் சுமார் 180 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டிருப்பதாக, படத்தைத் தயாரித்திருக்கும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் க்ரியேட்டிவ் இயக்குனரான அர்ச்சனா கல்பாத்தி தனது பேட்டிகளில் கூறிவருகிறார்.
விஜய்யின் முந்தைய இரண்டு படங்களான சர்கார், மெர்சல் ஆகிய இரு திரைப்படங்களைவிட பிகில் திரைப்படம் அதிக தொகையை திரையரங்குகளில் வசூலிக்கும் என படத்தோடு தொடர்புடையவர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்போதுதான், திரையரங்க உரிமைத் தொகையான 80 கோடி ரூபாயை திரும்பப் பெற முடியும்.
நடிகர் விஜய் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபாவளிக்கு படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த 2017ஆம் ஆண்டு மெர்சல் திரைப்படமும் 2018ஆம் ஆண்டு சர்கார் திரைப்படமும் வெளியானது.
ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் - பொழுதுபோக்குத் திரைப்படத்தை விரும்புபவர்கள் நிச்சயம் ஏமாற்றமடைய மாட்டார்கள்.