ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுவதற்கு முக்கிய காரணம் எது?


சீனாவில் கதை ஒன்று சொல்லுவார்கள். மிகப்பெரும் செல்வந்தன் தனது பிறந்த நாளன்று, சாமியார் ஒருவரிடம் ஆசி வாங்க சென்றானாம். அப்போது சாமியார் “முதலில் நீ இறப்பாய். அதன்பின் உன் மகன் இறப்பான். அதற்கு பின் உன் பேரன் இறப்பான்” என்று சொன்னாராம். அதனை கேட்டு மனமுடைந்த செல்வந்தன், “ஆசி வாங்க வந்த என்னை இப்படி சொல்லலாமா” என்று கேட்டானாம். அதற்கு சாமியார், “நான் உன்னை வாழ்த்த தான் செய்து இருக்கிறேன். நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை. பிறந்த அனைவரும் ஒரு நாள் இறக்க தான் போகிறோம். நமது சந்ததிகள் நமக்கு பின் தான் மரணம் அடைய வேண்டும். நமக்கு முன் அவர்கள் மரணம் அடைய கூடாது” என்று சொன்னாராம்.

இந்த கதை சீனர்களுக்கு மட்டுமல்ல. உலகில் உள்ள அனைவருக்கும் பொதுவானது. தனக்கு முன் தனது வாரிசுகள் இறப்பது என்பதனை எந்த மனிதனாலும் தாங்கி கொள்ள முடியாது. அது அவனுக்கு வாழும் போதே நரகத்தை கொடுக்கும். இதில் தான் பெற்ற பிள்ளை என்பதில்லை. அடுத்தவர் பிள்ளையாக இருந்தாலும், “குழந்தைகள் மரணம்” என்ற செய்தியை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே தான் திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க வேண்டும் என்று ஒட்டு மொத்த தமிழகமும் வேண்டி கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 12 குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளனர். அதில் 2 குழந்தைகள் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியில் உள்ள 600 அடி ஆழ்துளை கிணற்றில் குணா என்ற 3 வயது சிறுவன் விழுந்து விட்டான். நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவன் உயிருடன் மீட்கப்பட்டான். 2014-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி நெல்லை குத்தாலப்பேரி கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் ஹர்சன் என்ற 3 வயது சிறுவன் 400 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டான். 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான்.

இங்கு ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாதது தான். இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் 100 ஆழ்துளை கிணறுகள் தோண்டினால் அதில் 30 ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் போய் விடுகிறது. இவை அனைத்தும் குழந்தைகளின் உயிரை காவு வாங்க காத்து கொண்டு இருக்கின்றன என்பதனை நாம் உணர வேண்டும்.

ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும் சம்பவங்களை எல்லாம் ஒப்பிட்டு பார்த்தால் அதில் சில ஒற்றுமைகள் புதைந்து இருப்பதை உணர முடியும். முதலாவது, விவசாயத்திற்கு போடப்படும் 6 அங்குலம் ஆழ்துளை கிணற்றில் தான் குழந்தைகள் விழும் சம்பவம் நடக்கிறது. அதுவும் 1½ வயது முதல் 3 வயது உள்ள குழந்தைகள் தான் அதில் விழுகின்றனர். 2-வது குழாய் இல்லாத ஆழ்துளை கிணற்றில் தான் குழந்தைகள் விழுகின்றனர் என்பது தான் அதில் முக்கிய அம்சம்.

அதாவது ஆழ்துளை போடும் போது, அதில் மணல் கீழே விழக்கூடாது என்பதற்காக சுமார் 20 அடி முதல் 60 அடி வரை குழாய் பதிப்பார்கள். ஆழ்துளையில் தண்ணீர் இல்லாவிட்டால், அந்த குழாயை எளிதாக மூடி போட்டு மூடி விடலாம். ஆனால் சிலர் இந்த குழாய்களை வெளியே எடுத்து விடுகிறார்கள்.

ஆழ்துளைக்காக லட்சக்கணக்கில் செலவழித்து விட்டு தண்ணீர் இல்லாததால் ஆயிரம் ரூபாயை சேமிக்க அந்த குழாயை வெளியே எடுத்து வேறு உபயோகத்திற்கு பயன்படுத்துகின்றனர். குழாயை வெளியே எடுத்த ஆழ்துளை கிணற்றை மூடவே முடியாது. மேலும் அதில் மண்ணும், நீரும் தொடர்ச்சியாக செல்லும். அதன்பின்னர் ஒரு கட்டத்தில் அதன் மீது மண்மேவி நமது கண்ணில் இருந்து மறைந்து விடும். அது தெரியாமல் குழந்தைகள் அங்கு விளையாடும் போது தவறி விழுந்து விடுகின்றனர். எனவே ஆழ்துளை அமைத்து தண்ணீர் இல்லாவிட்டால் உடனே ஆழ்துளை குழாய் மீது மூடி போட்டு மூடி விட வேண்டும்.

ஒருவேளை குழாய் மீது நாம் மூடி போடா விட்டாலும், அதில் குழந்தைகள் விழுவதற்கு வாய்ப்புகள் குறைவு. குழாயை எடுத்து விட்டால், அது குழந்தைகளை எந்த நேரமும் காவு வாங்க காத்திருக்கும் என்பதனை நாம் உணர வேண்டும். வரும்முன் காப்போம் என்பதனை உணர்ந்து ஆழ்துளைகளின் மீது மூடி போட்டு மூடும் பழக்கம் நமக்கு இருக்க வேண்டும். இது அனிச்சை செயலாக மாறவேண்டும். இல்லையென்றால் இது போன்ற சம்பவம் தொடர்ந்து அரங்கேறி கொண்டு தான் இருக்கும்.