சுஜித்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது


திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து, இன்று (செவ்வாய்கிழமை) சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் சுஜித்தின் உடல் பாத்திமா புதூர் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
82 மணிநேர மீட்புப்பணிக்கு பின், குழந்தை சுஜித்தின் உடல் செவ்வாய்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டது
அதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்ய மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சுஜித்தின் சடலம் கொண்டு செல்லப்பட்டது.
காலை சுமார் 7 மணியளவில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட சுஜித்தின் உடல், அவனது வீட்டிற்கு கொண்டு செல்லப்படவில்லை. நேரடியாக மருத்துவமனையில் இருந்து 8.15 மணி அளவில் நடுக்காட்டுப்பட்டி அருகில் உள்ள பாத்திமா புதூர் கல்லறைக்கு கொண்டு செல்லப்பட்ட சுஜித்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
சுஜித்தின் உடல் அடக்கம்
கடும் முயற்சிகளுக்கு பின்னரும் ஆழ்துறை கிணற்றில் விழுந்த சுஜித்தை உயிருடன் மீட்க முடியாமல் போய்விட்டதே என்று சுஜித்தின் குடும்பத்தினரும், உறவினர்களும், கிராம மக்களும் பெருங்கவலை அடைந்துள்ளனர்.
சுஜித் விழுந்த ஆழ்துளை கிணறு இப்போது காங்கிரீட் நிரப்பி மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுஜித்தை மீட்பதற்கு தோண்டப்பட்ட பெரிய குழியில் மழை பெய்து தண்ணீர் நிரம்பி விட்டதால், தண்ணீர் அகற்றும் பணிகள் நடைபெற்றன. தற்போது தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டுள்ளதால் அதையும் காங்கிரிட் நிரப்பி அடைக்கும் பணி தொடங்கியுள்ளது.

சுஜித் யார்? உள்ளே விழுந்தது எப்படி?

திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ். இவரது மனைவி கலாராணி. இவர்களின் இரண்டு வயது மகன் சுஜித் வில்சன்.
கட்டடத் தொழிலாளராக வேலை பார்த்துவரும் பிரிட்டோ, தனது வீட்டின் அருகில் உள்ள தனது வயல்காட்டில் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பாக ஆள்துளை கிணறு ஒன்றைத் தோண்டியுள்ளார்.
ஆனால், அந்தக் கிணற்றில் தண்ணீர் வராததால், அதனை இப்போது பயன்படுத்துவதில்லை. அந்த ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி தற்போது விவசாயம் பார்த்துவருகிறார் பிரிட்டோ.
சுஜித் யார்? உள்ளே விழுந்தது எப்படி?
இந்தக் ஆழ்துளைக் குழாய் கைவிடப்பட்டிருந்த நிலையில், மண் விழுந்து மூடியிருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த மழையில் அந்த மண் உள்வாங்கியது.
இந்த நிலையில், வயல்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சுஜித் வெள்ளிக்கிழமையன்று மாலை ஐந்தரை மணியளவில் எதிர்பாராத விதமாக அந்தக் குழாய்க்குள் விழுந்தான்.
பிற செய்திகள்: