யாழ்ப்பாணத்தில் 90 வீதமான காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தேன்


யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கு 90 வீதமான காணிகளை உரிமையாளர்களிடம் தான் ஒப்படைத்ததாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் றக்கா வீதியில் அமைந்துள்ள இளங்கதிர் சனசமூக நிலைய மைதானத்தில் இன்று (28) நண்பகல் 12 மணியளவில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் நல்லை ஆதினம், நாகவிகாரை உள்ளிட்ட மத தலங்களிற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் சுமார் 1.30 மணியளவில் கோட்டபய ராஜபக்ஷ தேர்தல் பிரசார மேடைக்கு வருகை தந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, யாழ்.மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியினர், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

பிரசாரக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த மக்கள், பலத்த சோதனையின் பின்னரே, மைதானத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டதுடன், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் பலத்த பாதுகாப்பின் மத்தியில் மைதானத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

கோட்டாபயவின் வருகைக்காக சுமார் 3 மணித்தியாலயங்கள் பொது மக்கள் காத்திருந்ததுடன், கோட்டாபய வருகை தந்த போது, விசில் அடித்தும், கைகளை அசைத்தும் தமது வரவேற்பை அளித்ததுடன், கோசங்களும் இட்டனர்.

கோட்டாபயவின் வருகைக்காக, றக்கா வீதி போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டிருந்ததுடன், கச்சேரி வீதி, நல்லூர் வீதி, கண்டி வீதி, பழைய பூங்கா வீதிகள் உள்ளிட்ட தேர்தல் பிரசார மைதானத்தைச் சுற்றிய பகுதிகள் வீதித் தடைகள் போடப்பட்டிருந்ததுடன், முப்படை மற்றும் பொலிஸார், பொலிஸ், இராணுவ புலனாய்வாளர்களும், பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா உட்பட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட பலர் உரையாற்றினார்கள்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவின் வருகையின் பின்னர், எதிர்க்கட்சி தலைவரும், பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபயவிற்கான ஆதரவு கோரி, தேர்தல் பிரசாரத்திற்காக யாழ்ப்பாணத்திற்காக வருகை தந்ததுடன், தேர்தல் பிரசார உரையும் ஆற்றியதுடன், நாட்டை அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்ல பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு அளிக்குமாறும் கோரினார்.

தேர்தல் பிரசார கூட்டத்தில், பொதுஜன பெரமுவின் ஆதரவு கட்சிகளான, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள், சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், தான் ஆட்சிக்கு வந்ததும் வட மாகாண மக்களின் பிரச்சினைகளை முழுமையாக தீர்த்து வைப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்களில் சில அரசியல்வாதிகள் உங்களை இன்னும் கடந்த காலத்திலேயே வைத்தே அரசியல் செய்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, இந்த அரசாங்கத்தை தொடர்ந்து நடத்திச் செல்ல பக்கபலமாக இருந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பே என தெரிவித்துள்ளார்.

வடக்கில் உள்ள விவசாயிகளுக்கு நல்ல காலமாக இருந்தது முன்னாள் பிரதமர் ஶ்ரீமாவே பண்டார நாயக்கவின் காலத்தில் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

(யாழ் நிருபர்கள் சுமித்தி, பிரதீபன்)