20 குழந்தைகள், பெண்களை பிணைக்கைதியாக பிடித்த நபர்


உத்தரப்பிரதேசம் ஃபரூக்காபாத் மாவட்டம் மொகம்மதாபாத் வட்டம் கார்சியா என்ற கிராமத்தில் சுமார் 20 குழந்தைகள் மற்றும் சில பெண்களை ஒரு வீட்டில் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்துள்ள நபர் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தியதோடு, கையெறி குண்டும் வீசியுள்ளார் என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.
வியாழக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் 3 போலீசார், கிராமவாசிகள் காயமடைந்துள்ளனர்.
குறிப்பிட்ட நபர் தமது வீட்டுக்கு, தமது மகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக குழந்தைகளை அழைத்துள்ளார் என்றும் ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது.
பிணைக்கைதிகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர்.
"உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றுவிட்டனர். குழந்தைகளை விடுவிக்கும் பணிக்காக பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) கமாண்டோக்கள் அழைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளை பிணையாகப் பிடித்துவைத்துள்ள நபர் இதுவரை கோரிக்கை எதையும் வைக்கவில்லை. எனவே, இந்த செயலுக்கான நோக்கம் என்ன என்பதை உடனடியாக அறிய முடியவில்லை" என்று பிபிசியிடம் தெரிவித்தார் கான்பூர் ஐ.ஜி. மோஹித் அகர்வால்.
பிணைக் கைதிகளாக குழந்தைகள் பிடித்துவைக்கப்பட்டுள்ள இடம்.படத்தின் காப்புரிமைSAMEER/BBC
பிணைக் கைதியாக குழந்தைகளை பிடித்துவைத்துள்ள நபர் வீசிய வெடிகுண்டால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அதனால் போலீசார் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
குழந்தைகள் பிணையாக பிடித்துவைக்கப்பட்டுள்ள வீட்டின் உரிமையாளர் சுபாஷ் பாதம் என்பவர் மீது கொலை உட்பட பல கொடுங்குற்றங்கள் தொடர்புடைய வழக்குகள் உள்ளன. இவர் பல முறை சிறை சென்றவர் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.