சந்திப்பு


இதுவரை காலமும் முஸ்லிம் தலைவர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் முழு முஸ்லிம் சமூகத்தினையும் தவறான முறையில் வழிநடத்தியுள்ளார்கள் என்பது தற்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் முஸ்லிம் உலமாக்களுக்குத் தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்வொன்று நேற்று (16) குருநாகல் மாவட்டம் சியம்பலகஸ்கொடுவா பிரதேசத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கொலபகம புராண விஹாரையின் விகாராதிபதி கல்லெஹபிடிய பேமரத்ன தேரர், குருநாகல் மாவட்ட அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா  தலைவர் மௌலவி எம். ஐ.எம். சுஹைப் (தீனி) , செயலாளர் மௌலவி எஸ்.ஐ.எம். ஹாபீல் (ரவ்லி), முன்னாள் குளியாபிட்டிய வளையக் காதி நீதிபதி மௌலவி ஸித்தீக், ஓய்வுபெற்ற கிராம சேவகர் அபூபக்கர் பஹ்ஜி, முன்னாள் இராணுவ அதிகாரி முஹம்மட் றாசிக் உள்ளிட்ட குருநாகல் மாவட்ட உலமாக்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

அங்குத் தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர்:
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் பல வதந்திகள் பரப்பப்பட்டன. ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் இலங்கை நாடு மற்றுமோர் மியன்மார் ஆகிவிடும், முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படும். முஸ்லிம்கள் நசுக்கப்படுவார்கள் என மேடை மேடையாகக் கூவித் திரிந்தார்கள். ஆனால் தற்பொழுது கோட்டாபயவின் ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் எவ்வளவு நிம்மதியாக வாழ்கிறார்கள் என்பதை அனைவரும் உணர்வீர்கள்.  72ஆவது சுதந்திர தின நிகழ்வில் கூட ஜனாதிபதியின் உரை சிறுபான்மை, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எவ்வளவு ஆறுதலாக இருந்தது என்பதை நாம் அனைவரும் உணர்த்தோம்.

நான்கு இராசதானிகளைக் கொண்ட, பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய இந்த வடமேல் மாகாணத்தில் முஸ்லிம் ஒருவரை ஆளுநராக நியமித்தமையும், ஜனாதிபதி முஸ்லிம்களுக்குச் செய்த ஒரு கௌரவமாகவே நாம் பார்க்கிறோம்.

தற்பொழுது இதனையும் தாண்டி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த குருநாகல் மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் தலைவரையும், ஜனநாயக ரீதியில் பெற்று அழகுபார்க்க ஜனாதிபதி ஆர்வமாகவுள்ளார். இதன் அடிப்படையிலேயே இம்முறை பொதுத் தேர்தலில் என்னைப் போட்டியிடுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாற்பது வருடகால அரசியல் அனுபவம் மிக்க நான், தூதுவர், மேயர் உள்ளிட்ட பல அரசியல் அதிகாரங்களிலிருந்துள்ளேன், எனக்கு அரசியலில் உழைப்பதற்கு எந்தவித அவசியமும் இல்லை. என்னுடைய குடும்பத்திற்கான கடமைகள் அனைத்தும் முடிந்துவிட்டன. அதைப்பற்றிச் சிந்திப்பதற்கும் எனக்கு தற்பொழுது அவசியம் இல்லை.

நான் குருநாகல் மாவட்டத்தின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு கொழும்புக்குப் போய்விடுவேன் என சிலர் விமர்சிக்கின்றனர். எனக்குக் கொழும்பில்  கட்டிப் பாதுகாக்க எதுவும் இல்லை. எனது ஒரே எதிர்பார்ப்பு, தற்பொழுது முஸ்லிம் சமூகம் இழந்துள்ள முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பெற்று மக்களுக்கு செய்வை செய்வது.

ஆகவே நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள் நான் உங்களுக்கு ஒரு வாக்குறுதியை இன்று வழங்குகிறேன். என்னை குருநாகல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பினால், எனது ஜனாஸா இந்த குருநாகல் மண்ணில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

- ஊடகப் பிரிவு -