பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதி கிஹான் பிலபிட்டிய மனுத்தாக்கல்


பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதி கிஹான் பிலபிட்டிய தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு ஒன்றை வௌியிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், கொழும்பு குற்றவியல் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த மனு பரிசீலனைக்காக இன்று (19) முற்பகல் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.நவாஸ் மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச பிரதி மன்றாடியார் நாயகம் மிலிந்த குணதிலக இந்த கோரிக்கையை நிராகரிக்குமாறு தான் அடிப்படை ஆட்சேபனை எழுப்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

தன்னை கைது செய்யுமாறு சட்டமா அதிபரால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாக மனுதாரர் தனது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் பொய்யானதும் மற்றும் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்திய பிரதி மன்றாடியார் நாயகம் அவ்வாறான உத்தரவொன்றை சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு பெற்றுக் கொடுக்கவில்லை என குறிப்பிட்டார்.

உரிய நீதிமன்றத்திற்கு விடங்களை அறிவித்து பிடியாணை ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு மாத்திரமே சட்டமா அதிபரால் இதன்போது பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அரச பிரதி மன்றாடியார் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கோரிக்கைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்த கிஹான் பிலபிட்டிய சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, மனுதாரரை கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஊடங்களில் வாயிலாக வௌியிடப்பட்டிருந்தாக தெரிவித்தார்.

பின்னர் குறித்த மனுவை இன்று மதியம் பரிசீலனை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் நீதிமன்ற செயற்பாடுகள் தொடர்பில் தொலைப்பேசி உரையாடல்களில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரால் வழங்கப்பட்டுள்ள உத்தரவினை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி கிஹான் பிலபிட்டியவால் குறித்த ரிட் மனு தாக்கல் செய்யுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.