இஸ்லாமியர்கள் போராட்டம்


குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும் அதனை செயல்படுத்த மாட்டோம் என மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனக் கோரியும் சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. மாநிலத்தில் பிற பகுதிகளிலும் பெரும் எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், புதன்கிழமையான இன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், அந்தப் போராட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இருந்தபோதும் போராட்டத்தை நடத்தப்போவதாக இஸ்லாமியக் கட்சியினர் அறிவித்தனர்.
தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம்
இந்தப் போராட்டம் சென்னை வாலாஜா சாலையில் நடக்குமென்றும் அறிவிக்கப்பட்டது. காலை ஒன்பதரை மணி முதலே இஸ்லாமியர்கள் அந்தச் சாலையில் குவிய ஆரம்பித்தனர். பத்தே முக்கால் மணியளவில் பெரும் எண்ணிக்கையில் திரட்ட போராட்டக்காரர்கள் வாலாஜா சாலையில் ஊர்வலமாகச் செல்ல ஆரம்பித்தனர்.
தேசியக் கொடிகளைக் கைகளில் ஏந்தியிருந்த அவர்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். சேப்பாக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், இஸ்லாமியக் கட்சிகளின் தலைவர்களும் தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.ஐ., சி.பி.எம்., தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தச் சட்டத்தைக் கண்டித்துப் பேசினர்.
இந்தப் போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் பெண்களும் பங்கேற்றிருந்தனர். 12.30 மணியளவில் இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டத்தின் காரணமாக, வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, சேப்பாக்கம், கடற்கரைச் சாலை, தலைமைச் செயலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலங்களில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி இஸ்லாமியர்கள் பேரணியாகச் சென்றனர். இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு அருகில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக வந்த இஸ்லாமியர்கள் பாதி வழியிலேயே காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, போராட்டக்காரர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் கைதுசெய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காவல்துறையினர் தங்கவைத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி ஐக்கிய ஜமாத் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் அருகே உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதில் பெண்கள் உட்பட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ராமநாதபுரத்தில் இஸ்லாமியர்கள் போராட்டம்
ராமநாதபுரம் மாவட்ட உலமாக்கள் சபையின் நடத்தப்பட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் இஸ்லாமிய இயக்கங்கள், பல்வேறு அரசியல்கட்சிகள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.