உமர் அக்மல் மீது குற்றச்சாட்டு பதிவு



பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி வீரர் உமர் அக்மல் மீது ‘ஸ்பாட்பிக்சிங்’ என்ற சூதாட்ட புகார் எழுந்தது. பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட வைக்க சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலர் இவரிடம் அணுகி உள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு விசாரித்து, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எந்த ஒரு கிரிக்கெட் விளையாட முடியாதபடி உமர் அக்மலை இடைநீக்கம் செய்தது. மேலும் பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிக்காக விளையாட இவர் வாங்கியிருந்த தொகை திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில் அவர் மீது ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக இரண்டு பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின் முடிவில் அவர் தண்டனைக்குறியவர் என்று தீர்ப்பு வந்தால் ஆறு மாதம் முதல் ஆயுட்காலம் வரை தடைபெற வாய்ப்பு உள்ளது. இந்தக் குற்றச்சாட்டிற்கு வரும் 31ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உடல் பரிசோதனையின்போது கிரிக்கெட் அகாடமியில் இருந்த பயிற்சியாளரிடம், தனது ஆடையை கழற்றி காட்டி, எங்கு எனக்கு தொப்பை இருக்கிறது? என்று கேட்டு சர்ச்சையில் சிக்கிக் கொண்டவர் உமர் அக்மல். இதுபோல் பல சர்ச்சைக்குரிய செயல்களைச் செய்துள்ள உமர் அக்மல், தற்போது சிக்கலான நிலையில் உள்ளார்.

ஏற்கனவே பாகிஸ்தான் வீரர்கள் பலர் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கி வருவதால், சர்வதேச ரசிகர்களும் அந்த அணி குறித்து பலவாறாக விமர்சித்து வருகின்றனர்.