தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம்


(க.கிஷாந்தன்)

‘கொரோனா’ எனப்படுகின்ற கொவிட் – 19 வைரஸ் வேகமாகப் பரவுவதை கட்டுப்படுத்தி நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு கட்சி மற்றும் தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் மலையகத்திலுள்ள அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையகத்தில் வாழும் அனைவருக்கும்
   நிச்சயம் நிவாரணம் கிடைக்கும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாளை (25) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் இன்று (24.03.2020) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

“சீனாவில் கோரத்தாண்டவத்தை ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று முழு உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றது. இதனை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் பலம்பொருந்திய நாடுகள் கூட விழிபிதுங்கி நிற்கின்றன.

இவ்வைரஸ் காரணமாக இதுவரையில் உலகளவில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கையிட்டுள்ளது.

எமது நாட்டிலும் 100 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 200 இற்கும் மேற்பட்டோர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கின்றனர்.இவர்கள் அனைவரும் விரைவில் குணமடையவேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

அதேபோல் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் அசுர வேகத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து அவற்றை வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்றது.

ஜனாதிபதியால் 16 அம்ச நிவாரணத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் நலன்கருதி எதிர்காலத்தில் மேலும் சில முடிவுகளை அவர் எடுப்பார் என நம்புகின்றோம்.

எனவே, கொரானா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு மலையகத்திலுள்ள அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

ஆனால், கொரோனாவிலும் அரசியல் நடத்தும் நிலையிலேயே இங்கு ஒரு சிலர் காணப்படுகின்றனர். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 5000 ஆயிரம் ரூபா முற்பணம் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காலையில் அறிவித்தவர்கள், ஜனாதிபதி மலையக மக்களை புறக்கணிக்கிறார் என மாலையில் கருத்து வெளியிடுகின்றனர்.
இது சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவதற்கான நேரம் அல்ல. அரசியலில் ஆரோக்கியமான போட்டியும், நேர்கொண்ட பார்வையிலான விமர்சனங்களும் இருக்கவேண்டும். எனவே, ‘கொரோனா’ வைரஸ் ஒழிப்புச் சமரை எப்படி வெற்றிகரமாக எதிர்கொள்வது, எமது மக்களுக்கு எப்படியான திட்டங்களை வழங்குவது போன்ற ஆலோசனைகளை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன், மலையகத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட அனைவரினதும் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் காத்திரமான நடவடிக்கைகளை தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனையின் பேரில் முன்னெடுத்துள்ளது. எனவே, மக்களுக்கான நிவாரணத் திட்டம் நிச்சயம் கிடைக்கும். நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும்போது இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும்." -என்றுள்ளது.