நெடுந்தூர பயணம், அதீத சோர்வு, சாலை விபத்துகள் - உயிரிழக்கும் தொழிலாளர்கள்

இந்தியாவில் கடந்த மார்ச் 25ஆம் தேதி முடக்க நிலை தொடங்கியதில் இருந்து இதுவரை ஒவ்வொரு நாளும் சராசரியாக நான்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்து வருவது தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நாடு தழுவிய முடக்க நிலையை அறிவித்து 50க்கும் மேற்பட்ட நாட்கள் கடந்துவிட்டன. ஆனால், பிரதமரின் திடீர் அறிவிப்பால், கால அவகாசம் ஏதும் கொடுக்கப்படாமல் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால், நாடு முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டது.

கடந்த மார்ச் 24ஆம் தேதியிலிருந்து இதுவரை எண்ணற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் முதல் முடக்க நிலை அறிவிக்கப்பட்டது முதல் இதுவரையிலான காலம் வரை, சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும்போது ஏற்பட்ட விபத்துகள் மற்றும் மருத்துவ அவசர நிலைகளின் காரணமாக இதுவரை மொத்தம் 208 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்துவதற்காகவே முடக்க நிலை அறிவிக்கப்பட்டது. மக்கள் வீட்டிலேயே தங்கி, ‘சமூக விலகலை’ கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோதி கேட்டுக்கொண்டார். இருப்பினும், இந்த திடீர் அறிவிப்பால் ஏற்பட்ட குழப்பத்தால் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் குவிந்தனர்.

குறிப்பாக, மார்ச் 29ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக இருந்தது. ஆனால், அதே காலகட்டத்தில் முடக்க நிலையின் காரணமாக ஏற்பட்ட சாலை விபத்துகள் மற்றும் மருத்துவ அவசர நிலையின் காரணமாக 20 பேர்களின் உயிர் பறிபோனது.

தரவுகள்

மே 20ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், சாலை விபத்துகள் அல்லது தீவிர சோர்வின் காரணமாக 200க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

பல்வேறு ஊடக செய்திகளை அடிப்படையாக கொண்டு பிபிசி மேற்கொண்ட பகுப்பாய்வு ஒன்றில், இந்தியாவில் முடக்க நிலை அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 42 பேர் சாலை விபத்துகளிலும், 32 பேர் நீண்ட தூரம் நடந்ததன் விளைவாக ஏற்பட்ட மருத்துவ அவசர நிலையின் காரணமாகவும் உயிரிழந்துள்ளனர். இதை தவிர்த்து ஐந்து ரயில் விபத்துகளில் எண்ணற்றவர்கள் உயிரிழந்துள்ளனர்.

சாலை விபத்துகளே பெரும்பாலானோரின் இறப்பிற்கு காரணமாக உள்ளது.

தரவுகள்

சாலை விபத்துகளுக்கு அடுத்ததாக, நீண்டதூரம் நடந்ததன் விளைவாக ஏற்பட்ட மருத்துவ அவசர நிலையால் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். சோர்வின் காரணமாக உயிரிழந்தவர்களில் இளையவர்கள், முதியவர்கள் என அனைத்து வயதுப்பிரிவினரும் அடக்கம்.

ராம் கிருபால் என்பவருக்கு 65 வயது, மும்பையில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு நடந்தே செல்ல அவர் முடிவு செய்திருந்தார். 1,500 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தும், வழிநடுகே வாகனங்களில் உதவி கேட்டும் பயணித்த அவர் தனது சொந்த ஊரை அடைந்தவுடன் சோர்வு மிகுதியின் காரணமாக உயிரிழந்துவிட்டார்.

மற்றொரு நிகழ்வில், 12 வயது சிறுமி ஒருவர் தெலங்கானாவின் முல்கு மாவட்டத்திலிருந்து சத்தீஸ்கரிலுள்ள தனது சொந்த ஊருக்கு அடர்ந்த காடுகளின் வழியாக மூன்று நாட்களுக்கு நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்த பிறகு சோர்வு மிகுதியில் இறந்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முடக்க நிலைக்கு முன்னதாக தெலங்கானாவில் மிளகாய் பயிரிடுவதற்காக சென்ற அவர் தனது மாமா உள்ளிட்ட 13 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் சொந்த ஊருக்கு திரும்புகையில் இறந்துவிட்டார்.

ரயில் விபத்துகள்

மகாராஷ்டிராவின் ஒளரங்காபாத் அருகே மே மாதத்தின் தொடக்கத்தில் 16 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தியின்படி, கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றபின், சோர்ந்துபோன தொழிலாளர்கள் ரயில்கள் ஏதும் வரவில்லை என்று கருதி தண்டவாளத்தில் படுத்துறங்கினர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ரயில் அவர்கள் மீது ஏறி சென்றதில் 20இல் 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

மற்றொரு நிகழ்வில், சத்தீஸ்கரின் கோரியா மாவட்டத்தில் தங்கள் சொந்த ஊரை நோக்கி நடந்து கொண்டிருந்த இரண்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது ரயில் மோதியதில் அவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்தது. முன்னதாக மார்ச் மாதத்தில், குஜராத்தின் வாபி மாவட்டத்தில் இதேபோல் இரண்டு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விபத்துகள் அனைத்தும் குறைந்தது இரண்டு ஊடக செய்திகளுடன் ஒப்பிட்டு உறுதிப்படுத்தப்பட்டன.Advertisement