தவறான தீர்ப்பால் பஞ்சாப் அணியின் வெற்றி பறிபோனதா?





 ஐபிஎல் 2020 தொடரின் இரண்டாம் ஆட்டத்தில் டெல்லியும், பஞ்சாப் அணியும் நேற்று மோதிக் கொண்டன.

பரபரப்பான சூப்பர் ஓவரில் முடிந்தது நேற்றைய ஆட்டம். சூப்பர் ஓவர் ஆட்டத்தின் முடிவை தலைகீழாக மாற்றியது என்றே சொல்ல வேண்டும். முதல் 10 பத்து ஓவர்களில் தடுமாறிய டெல்லி அணி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

சூப்பர் ஓவரில் முடிந்த ஆட்டம்

சூப்பர் ஓவரில் முதலில் வந்து ஆடிய பஞ்சாப் அணி வெறும் இரண்டு ரன்களையே எடுத்து டெல்லி அணிக்கு மூன்று ரன்களை மட்டுமே இலக்காக வைத்தது. அந்த அணியின் கே.எல்.ராகுல் இரண்டு ரன்களை எடுத்து ரபாடாவின் பந்தில் அவுட் ஆனார்.

மூன்று ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியை நோக்கி பந்து வீசிய முகமத் ஷமி 'வயிட்' பந்தை வீசினார். அதன்பின் டெல்லியின் ரிஷப் பந்த் இரண்டு ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.

ரபாடாவின் சிறப்பான பந்து வீச்சு

டெல்லி மற்றும் பஞ்சாப் அணி போட்டி

பெரும் அழுத்தத்திற்கு மத்தியிலும் தன்னால் சிறப்பாக பந்து வீச முடியும் என்பதை ரபாடா நிரூபித்துள்ளார். சூப்பர் ஓவரில் உள்ள அழுத்தத்தை தாண்டி முதலில் கே.எல்.ராகுலை அவுட் ஆக்கினார். பின் நிக்கோலஸ் புரானாவை அவுட் செய்தார்.

இந்த தருணம் மட்டுமல்ல இதற்கு முன்பும் இம்மாதிரியான பல தருணங்களில் ரபாடா தனது திறமையை காட்டியுள்ளார்.

நேற்றை ஆட்டத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு வீரர் ஸ்டோனிஸ்.

டெல்லியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது ஸ்டோனிஸின் பேட்டிங்தான். முதல் 10 ஓவர்களில் ஐம்பது ரன்களைகூட எடுக்க முடியாமல் தடுமாறியது டெல்லி அணி. அதன்பின் கடைசி ஐந்து ஓவர்களில் ஸ்டோனிஸ் தனது அணிக்காக ரன்களை சேர்த்தார். டெல்லி அணி இந்த ஐந்து ஓவர்களில் மட்டும் 64 ரன்களை எடுத்தது.

ஸ்டோனிஸ் 21 பந்துகளில் ஏழு பவுண்டரிகள், மூன்று சிக்ஸர்கள் அடித்து 53 ரன்களை எடுத்தார்.

பஞ்சாப் அணியின் மாயங்க் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் பஞ்சாப் அணியின் வெற்றி விதியை மாற்றியது சூப்பர் ஓவர்.

ஆட்டத்தின் முடிவை மாற்றிய ஷார்ட் ரன்

டெல்லி மற்றும் பஞ்சாப் அணி போட்டி

பஞ்சாப் அணியின் மாயங்க் அகர்வால் நின்று ஆடி பஞ்சாப் அணிக்கு 89 ரன்களை சேர்த்தார். 19ஆவது ஓவரில் அவரும் க்றிஸ் ஜோர்டனும் ஆடிக் கொண்டிருந்தபோது டெல்லி அணியின் ரபாடா பந்து வீசினார். ஓவரின் மூன்றாவது பந்து வீச்சில் இரண்டு ரன்களுக்கு ஓடினர்.

ஆனால் கிறிஸ் ஜோர்டன் க்ரீஸை தொடாமல் ரன் எடுத்ததாக நடுவர் தெரிவித்தார். அதாவது ஓடப்பட்ட இரு ரன்னில் ஒன்று ஷார்ட் ரன் என நடுவர் தெரிவித்தார். ஆனால் அதன்பின் அந்த காட்சி மறுஒளிபரப்பு செய்யப்பட்டபோது அது ஷார்ட் ரன் இல்லை என்பது தெரியவந்தது. ஷார்ட் ரன் என்றால் கோட்டை தொடாமல் ஓடி ரன் எடுப்பது என்று அர்த்தம்.

அந்த ஒரு ரன் பஞ்சாப் அணியின் வெற்றியை மாற்றியதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆம் போட்டி டையில் முடிந்தது. அதாவது இரு அணிகளுமே 157 ரன்கள் எடுத்து சூப்பர் ஓவர் நடைபெற்றது.

அதில் டெல்லி அணி வெற்றியை தன் வசமாக்கியது.

`ஷார்ட் ரன் இல்லை`

போட்டியின் விதியை மாற்றிய அந்த நடுவரின் முடிவு குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த ஒரு ரன் இருந்திருந்தால் சூப்பர் ஓவரின் தேவை இருந்திருக்காது என்றும், பஞ்சாப் அணி வெற்றி பெற்றிருக்கும் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்.

அது ஷார்ட் ரன் இல்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதானும் இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார்.