குழந்தைகளின் தனியுரிமையை மீறுவதாக குற்றச்சாட்டு


 


தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விளம்பரங்களை காண்பிப்பதை கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறுத்த வேண்டுமென்று என்று வலியுறுத்தி அந்த நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், குழந்தைகள் நல ஆர்வலர்கள் உள்ளிட்டோர் திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளனர்.


இணையப் பயன்பாட்டாளருக்கு ஏற்ற விளம்பரத்தைக் காட்டுவது அவர்களது தனியுரிமையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதோடு மட்டுமல்லாமல், "பாதிக்கப்படக்கூடிய" இளம் தலைமுறையினரை நியாயமற்ற சந்தைப்படுத்துதலின் அழுத்தத்தின் கீழ் கொண்டுவருவதாக அந்தக் கடிதத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


உலகம் முழுவதும் திறன்பேசி மற்றும் இணையப் பயன்பாடு முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளம் தலைமுறையினரின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக மாறிவரும் தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடு தனியுரிமை சார்ந்த கவலைகளை எழுப்புவதாக உள்ளது.

இதுபோன்ற விடயங்களை வலியுறுத்தும் வகையிலேயே கூகுள், அமேசான், ஆப்பிள், ஃபேஸ்புக் மற்றும் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.


அதே சமயத்தில், மற்றொரு நடவடிக்கையின் ஒருபகுதியாக கூகுளுக்கு சொந்தமான யூடியூப் நிறுவனம் சட்டவிரோதமான வகையில் பிரிட்டனை சேர்ந்த 13 வயதுக்கும் குறைவான ஐம்பது லட்சம் குழந்தைகள் குறித்த தரவுகளை திரட்டியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவு பாதுகாப்பு சட்டங்கள் இளம் வயதினர் குறித்த தரவுகளை தொழில்நுட்ப நிறுவனங்கள் திரட்டுவதை தடைசெய்யும் நிலையில், இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


குழந்தைகள் எவ்வளவு நேரம் மின்னணு திரைகளில் செலவிடலாம்?

அலைபேசி பயன்பாடு குழந்தைகளின் உடல்நலனை பாதிக்குமா?

"ஒரு குழந்தைக்கு 13 வயதாகும்போது அது குறித்த 7.2 கோடி தரவுகள் இணையத்தில் விளம்பரம் செய்யும் தொழில்நுட்ப நிறுவனங்களின் வசம் இருப்பது என்பது எந்த அளவுக்கு சட்டத்திட்டங்கள் மீறப்படுகின்றன என்பதற்கு ஆதாரமாக உள்ளன. மேலும், இது பதின்ம வயதை தொடுவதற்கு முன்னரே குழந்தைகள் எந்தளவிற்கு கடுமையான கண்காணிப்பு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதை வெளிக்காட்டுகிறது" என்று பல்துறை வல்லுநர்கள் எழுதியுள்ள அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


"இணைய உலகில் அசாத்திய பலம் கொண்ட நிறுவனங்களாக விளங்கும் உங்களுக்கு, உங்களது பயன்பாட்டாளர்களை பாதுகாக்கும் பொறுப்பும் உள்ளது" என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


யூடியூபின் சட்டப்போராட்டம்


யூடியூபின் சட்டப்போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்த கடிதத்தை எழுதிய 23 பேரில் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரான கரோலின் லூகாஸ் மற்றும் மருத்துவ உளவியலாளர் டாக்டர் எலி ஹான்சன் ஆகியோரும் அடங்குவர். பிரண்ட்ஸ் ஆஃப் எர்த் அமைப்பும் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளது.


ஆன்லைன் விளம்பரம் நுகர்வோரை துரிதப்படுத்துகிறது என்றும், இது உலகுக்கும் தேவையற்ற அழுத்தத்தை சேர்க்கிறது என்றும் அந்த அணியை சேர்ந்த குளோபல் ஆக்சன் பிளான் என்ற அமைப்பு வாதிடுகிறது.


உங்களைப் பற்றி கூகுள் தெரிந்து வைத்திருப்பதை அழிப்பது எப்படி?

யூடியூபில் பணம் சம்பாதிப்பதற்கான ஐந்து வழிகள்

இது ஒருபுறமிருக்க, தனியுரிமை குறித்த வழக்குரைஞரான டங்கன் மெக்கான், யூடியூப் நிறுவனம் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவுப் பாதுகாப்பு சட்டங்களை மீறி பிரிட்டனை சேர்ந்த 50 லட்சம் குழந்தைகளின் இணைய பயன்பாட்டை கண்காணித்ததாக குற்றஞ்சாட்டி தனியே அந்த நிறுவனத்தின் மீது சட்டரீதியிலான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.


கடந்த ஜூலை மாதம் இது தொடர்பாக பிரிட்டனின் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், யூடியூப் தளம் 13 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்காக கட்டமைக்கப்படவில்லை என்ற வலுவான பதிலை அந்த நிறுவனம் முன்வைத்தது.


சட்டவிரோதமாக தரவுகள் பெறப்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் இழப்பீடாக குறைந்தபட்சம் 100 முதல் 500 பவுண்டுகள் ( இந்திய மதிப்பில் சுமார் பத்து ஆயிரம் ரூபாய் முதல் ஐம்பதாயிரம் ரூபாய்) வரை அளிக்கப்பட வேண்டுமென்று மெக்கான் வாதிடுகிறார்.