"மலையக மக்கள் முன்னணி போலி தகவல் பரப்பி வருகின்றனர்"
 (க.கிஷாந்தன்)

 

" எம்மால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு மலையக மக்கள் முன்னணி உரிய பதில்களை வழங்குவதில்லை. இதன்காரணமாக அவ்வமைப்புக்கான ஆதரவை கடந்தவருடமே விலக்கிக்கொண்டுவிட்டோம்.இந்நிலையில் எம்மை விலக்கிவிட்டதாக தற்போது போலி தகவல் பரப்பிவருகின்றனர்." - என்று மலையக ஆசிரியர் முன்னணியின் பொதுச்செயலாளர் சின்னையா ரவீந்திரன் தெரிவித்தார்.

 

நுவரெலியாவில் 12.09.2020 அன்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

 

" மலையக மக்கள் முன்னணியிலிருந்து, மலையக ஆசிரியர் முன்னணியை விலக்கிவிட்டதாக கடந்த 31 ஆம் திகதி லோரன்ஸ் அறிவிப்பு விடுத்துள்ளார். இது முற்றிலும் தவறான தகவலாகும். ஏனெனில் முன்னணிக்கான ஆதரவை நாம் கடந்த வருடமே விலக்கிக்கொண்டுவிட்டோம். இது தொடர்பில் எழுத்துமூலம் அறிவித்துவிட்டோம்.

 

2016 ஆம் ஆண்டு முதல்  மலையக மக்கள் முன்னணியின் துணை அமைப்பாக மலையக ஆசிரியர் முன்னணி செயற்பட ஆரம்பித்தது. எனினும், அம்முன்னணியுடனான பயணத்தை தொடரமுடியவில்லை. எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பல தடவைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. எழுத்துமூலம் பல அறிவித்தல்களைவிடுத்தும் பதில்கள் கிடைக்கவில்லை. எனவே, தனித்து செயற்படபோவதாக கடந்த 2019 ஜுலை மாதமே எழுத்துமூலம் அறிவித்துவிட்டோம். எனவே, கடிதம் கிடைக்கவில்லை என கூறப்படுவதெல்லாம் அப்பட்டமான பொய்யாகும்.

 

மலையக ஆசிரியர் முன்னணி கடந்த பொதுத்தேர்தலின்போது அனுசா சந்திரசேகரனுடன் இணைந்து செயற்படவில்லை. தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களுக்கே ஆதரவு வழங்கியிருந்தது. சமுகப்பிரச்சினை, அரசியல் பிரச்சினை ஆகியவற்றை மையப்படுத்தியே எமது முடிவுகள் அமையும். எனவே, இவ்விரு பிரச்சினைகளையும் தீர்க்ககூடிய தரப்பொன்று வருமானால் எதிர்காலத்தில் ஆதரவு வழங்கப்படும்.

 

மலையக ஆசிரியர் முன்னணி, மலையக மக்கள் முன்னணிக்கு கட்டுப்பட்டு நடக்கவில்லை என கூறப்படுவதெல்லாம் பொய்யாகும்." - என்றார்.
Advertisement