பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்கும் மத்திய கிழக்கு நாடுகள்


 முகமது நபியின் கேலிச்சித்திரத்தை காண்பிக்கும் உரிமை குறித்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங்கின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, குவைத், ஜோர்டான் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளிலுள்ள சில அங்காடிகளில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பிரான்ஸ் அதிபரின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து லிபியா, சிரியா, காசாவில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில், பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்கும் முடிவை மத்திய கிழக்கு நாடுகள் கைவிட வேண்டுமென்று பிரான்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது.

பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்கும் "அடிப்படை அற்ற" அழைப்புகள் "ஒரு தீவிர சிறுபான்மை குழுவால் மேற்கொள்ளப்படுவதாக" பிரான்சின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்கும் மத்திய கிழக்கு நாடுகள்

முகமது நபியின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் காட்டிய காரணத்திற்காக பிரான்சில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி ஆசிரியர் ஒருவர் தலை வெட்டி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக மக்ரோங் தெரிவித்த கருத்துக்கு எதிராக இந்த புறக்கணிப்பு போராட்டத்தை மத்திய கிழக்கு நாடுகள் கையிலெடுத்துள்ளன.

முன்னதாக, "இஸ்லாமியவாதிகள் நமது எதிர்காலத்தை பறிக்க நினைப்பதால் ஆசிரியர் சாமுவேல் பேட்டி கொல்லப்பட்டார். ஆனால் பிரான்ஸ் கேலிச்சித்திரங்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது" என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் எதிர்வினையாற்றியிருந்தார். இதே கருத்தை நேற்றும் (ஞாயிற்றுக்கிழமை) அவர் உறுதிப்படுத்தினார்.

முகமது நபி அல்லது அல்லாஹ்வின் (கடவுள்) சித்தரிப்புகள் அல்லது உருவங்களை இஸ்லாமிய பாரம்பரியம் வெளிப்படையாக தடைசெய்கிறது.

ஆனால், மதச்சார்பின்மையை நாட்டின் அடையாளத்தின் மையமாக கொண்டுள்ள பிரான்ஸ் அரசு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளைப் பாதுகாக்க கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பது, ஒற்றுமையைக் குறைத்து மதிப்பிடும் செயல் போன்றது என கூறுகிறது.

துருக்கி மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மக்ரோங், முஸ்லிம்களின் மத அல்லது "நம்பிக்கை சுதந்திரத்தை" மதிக்கவில்லை என்றும் இதன் மூலம் பிரான்சில் உள்ள லட்சக்கணக்கான முஸ்லிம்களை ஓரங்கட்டியதாகவும் குற்றம் சாட்டினர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இதுதொடர்பாக மக்ரோங்கை தொடர்ந்து இரண்டாவது முறையாக விமர்சித்த துருக்கியின் அதிபர் ரிசெப் தயிப் எர்துவான், இஸ்லாம் குறித்த தனது கருத்துக்களுக்காக மக்ரோங் "மனநல பரிசோதனைகளை" பெற வேண்டும் என்று கூறினார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் மக்ரோங்கின் கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக்குக்கு இம்ரான் கான் கடிதம்

மக்ரோங்கின் கருத்து மூலம் அவர், "இஸ்லாத்தை தாக்கியுள்ளதாக" இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்சில் நிலவி வரும் சூழ்நிலையை குறிப்பிட்டு இம்ரான் கான் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இம்ரான் கான்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி மார்க் சக்கர்பெர்க்கு எழுதிய அந்த கடிதத்தில் இஸ்லாமியத்துக்கு எதிரான வெறுப்பை தூண்டும் உள்ளடக்கங்களை ஃபேஸ்புக் தடைசெய்ய வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இஸ்லாமியத்துக்கு எதிராக அதிகரித்து வரும் வெறுப்பு, தீவிரவாதம் மற்றும் வன்முறையை உலகம் முழுவதும் தூண்டி வருவதாகவும், குறிப்பாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக இதுபோன்ற செயல்கள் நடப்பதாகவும் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

"யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை (ஹோலோகாஸ்ட்) மறுக்கும் உள்ளடக்கங்களுக்கு தடைவிதிக்கப்பட்டதை போல, இஸ்லாமியத்துக்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டும் உள்ளடக்கங்களுக்கும் ஃபேஸ்புக்கில் தடைவிதிக்க வேண்டுமென்று நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

தனது கடிதத்தில், பிரான்சில் நிலவி வரும் சூழ்நிலையையும் குறிப்பிட்டுள்ள இம்ரான் கான், அங்கு இஸ்லாம் தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதை மறுக்கும் அல்லது திரிக்கும் வகையிலான உள்ளடக்கங்களுக்கு தடைவிதிக்கும் வகையில் தங்களது சமூக ஊடகத்தின் கொள்கையை மாற்றியமைப்பதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஃபேஸ்புக் அறிவித்தது.

இதுதொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய ஃபேஸ்புக்கை சேர்ந்த அதிகாரியொருவர், ஃபேஸ்புக் அனைத்து வகையான வெறுப்புகளுக்கும் எதிரானது என்றும், இனம், நாடு அல்லது மதத்தின் அடிப்படையில் தாங்கள் தாக்குதல்களை அனுமதிப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

"வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் உள்ளடக்கங்களை எங்களது பார்வைக்கு வந்தவுடன் நீக்கிவிடுவோம். எனினும், இதுதொடர்பாக நாங்கள் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது."

அக்டோபர் 16இல் நடந்தது என்ன?

சாமுவேல் பேட்டி
படக்குறிப்பு,

சாமுவேல் பேட்டி

பிரான்சில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதியன்று தலை வெட்டி கொல்லப்பட்ட ஆசிரியர், முகமது நபியின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் காட்டிய காரணத்திற்காக தொடர்ந்து மிரட்டல்களை எதிர்கொண்டு வந்தார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் பாரிஸின் வடமேற்கில் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூஃப்லா செயின்ட் ஹொனோரின் எனும் நகரில், உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, தாம் பணியாற்றிய பள்ளிக்கு அருகே 47 வயதாகும் சாமுவேல் பேட்டி என்னும் வரலாறு மற்றும் புவியியல் பாடங்களுக்கான ஆசிரியர் கொல்லப்பட்டார்.

இந்த கொலை நடந்தபோது தாக்குதலாளி 'அல்லாஹு அக்பர்' என்று கத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொலையாளி ஆசிரியர் சாமுவேலை கொல்லும் முன் அவர் யார் என்று அடையாளம் காட்டுமாறு மாணவர்களிடம் கேட்டார் என பிரான்ஸ் தீவிரவாத தடுப்பு காவல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.Advertisement