முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி



 இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து உருவாகியுள்ள 800 படம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ள நிலையிலும் எதிர்ப்புகள் தொடர்ந்து வருகின்றன.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இந்தப் படத்தில் முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

முரளிதரனின் குழந்தைப் பருவத்தில் துவங்கி, அவரது பந்து வீசும் முறை சர்ச்சையானது, அவர் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தது வரை பேசுகிறது இத்திரைப்படம்.

'800' படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

விஜய் சேதுபதி

இப்படத்தை இந்தி, வங்காளம், சிங்களம் எனப் பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், ஈழத் தமிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் விதத்திலான காட்சிகள் இந்தப் படத்தில் இருக்காது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் 800 திரைப்படம் பல்வேறு வகையில் அரசியல் ஆக்கப்பட்டு வருவதை அறிகிறோம். 800 திரைப்படம் முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிர இதில் எந்த வித அரசியலும் கிடையாது. தமிழகத்தில் இருந்து தேயிலைத் தோட்டக் கூலியாளர்களாக இலங்கைக்கு குடிபெயர்ந்த ஒரு சமூகத்தில் இருந்து வந்த முரளிதரன் எப்படி பல தடைகளைத் தாண்டி உலக அளவில் சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதையம்சம்.

    இத்திரைப்படம் இளைய சமுதாயத்துக்கும் வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் எவ்வளவு தடைகள் வந்தாலும் தடைகளைக் கடந்து சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் படமாக இருக்கும். இத்திரைப்படத்தில் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் விதத்திலான காட்சியமைப்புகள் கிடையாது" என்று தெரிவித்துள்ளனர்.

    ஆனால், தமிழ்நாட்டில் இது தொடர்பாக பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

    பிச்சை எடுத்தாவது அட்வான்ஸை திருப்பித்தருகிறோம்: எழுத்தாளர் ஜெயபாலன்

    பிரபல எழுத்தாளர் ஜெயபாலன், "நடிகர் விஜய் சேதுபதி "800" படத்தில் நடிக்க ஒப்பந்தமான தகவல் கவலை தருகிறது. ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் உறுதியாக இருப்பவர் முத்தையா முரளிதரன். அவர் எந்த எண்ணத்தில் படத்தில் நடிக்க ஒப்பமானார் என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் விஜய் சேதுபதிக்கு ஒரு நல்ல பெயர், அவரது இளம் வயதிலேயே ஏற்பட்டிருக்கிறது. அதை இதுபோன்ற படத்தில் அவர் நடிப்பதன் மூலம் வீணாகி விடக்கூடாது. ஒருவேளை படத்தில் நடிக்க அட்வான்ஸ் பணம் வாங்கி விட்டதாக விஜய் சேதுபதி கருவாரானால், அந்த பணத்தை வீதி, வீதியாக பிச்சை எடுத்தாவது நாங்கள் திருப்பித் தருகிறோம். எனவே, அவர் படத்தில் நடிக்கும் முடிவை திரும்பப்பெற வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

    விஜய் சேதுபதிக்கு சீமான் அறிவுரை

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், இனத்துரோகி முரளிதரன் வாழக்கை படத்தை தமிழகத்திலேயே திரையிட்டு விடலாம் எனும் எண்ணம் எங்கிருந்தது வந்தது? முரளிதரன் எனும் சிங்கள கைக்கூலியை கொண்டாடினால் தமிழர்களின் மனங்களில் இருந்து தூக்கி எறியப்படுவோம் என்பதை உணர வேண்டாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    "முரளிதரனின் வாழ்க்கையை காட்சிப்படுத்தி கொழும்பு வீதிகளில் வேண்டுமானால் திரையிடலாம். தமிழக வீதிகளில் ஒருநாளும் அது நடக்கப்போவதில்லை. ஆகவே, உலகெங்கும் வாழும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக இப்படத்தில் இருந்து முற்றிலுமாக விலகும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தம்பி விஜய் சேதுபதிக்கு அன்போடு அறிவுறுத்துகிறேன்" என்று சீமான் கூறியுள்ளார்.

    பாரதிராஜா

    இது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன். நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்தபோது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர். எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளீதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான். இனத்துரோகம் செய்த ஒருவரின் முகம் காலகாலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா? எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.

    விஜய் சேதுபதியின் பெயர் எட்டப்பனின் பெயருக்கு இணையானதாக மாறிவிடக்கூடாது. அந்தப் படத்தில் நடிப்பதைத் தவிருங்கள் என கவிஞர் தாமரையும் கூறியிருக்கிறார்.

    தாமரை

    "முரளிதரன் வெறும் கிரிக்கெட் வீரர், சாதனையாளர் என்றால் அதில் நீங்கள் நடிப்பதை யாரும் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர் இலங்கையிலிருந்து இலங்கை அணிக்காக விளையாடி வந்ததுகூட, தமிழர்களால் நடுநிலையாகவே பார்க்கப்பட்டுவந்தது.

    முரளிதரன் சிங்களவர்க்கிடையே ஒற்றைத் தமிழராக இருந்தது கூட பெரும் நெருக்கடியாக இருந்திருக்கலாம். தன் வாழ்விருப்பிற்காக அவர் சிங்களராகவே மாறியிருந்ததைக் கூட புரிந்து கொள்ளலாம். ஆனால், சிங்களராக மாறியதோடல்லாமல் சிங்கள அரசியல்வாதியாகவும் மாறினார். தமிழ்மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றுபோட்ட ராசபக்சேக்களின் ஒலிபெருக்கியாக அவதாரமெடுத்தார்.

    வரலாறு பலகதைகள் சொல்லும் வி.சே அவர்களே! எட்டப்பன் ஒரேயொரு குட்டிவேலைதான் செய்தான், இன்றளவும் 'எட்டப்பன்' என்கிற பெயர் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்று தெரியுமல்லவா? உங்கள் பெயர் அப்படியொன்றாக மாறிவிடக் கூடாது. மக்கள் செல்வன் விஜயசேதுபதி அவர்களே, நல்ல முடிவாக எடுங்கள்" என்று அவர் கூறியிருக்கிறார்.

    முத்தையா முரளிதரன்

    தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகுவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

    அவர் விஜய் சேதுபதிக்கு எழுதியுள்ள திறந்த மடலில், "விஜய் சேதுபதி அவர்களே! முத்தையா முரளிதரன் பற்றிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்த பின் எப்படிப் பின்வாங்குவது? என்று நீங்கள் தயங்கத் தேவையில்லை. அறிவியலர் ஸ்டீபன் ஹாக்கிங் 2013ஆம் ஆண்டு இஸ்ரேலில் ஒரு கல்வி ஒன்றுகூடலுக்கு வந்த அழைப்பை ஏற்றுக் கொண்டிருந்தார். இஸ்ரேல் நாட்டின் அதிபரும் அதில் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் கொடுமைகளைக் கண்டித்து அவர் இம்மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று பல நண்பர்களும் கேட்டுக்கொண்டபோது அதை ஏற்று இஸ்ரேல் செல்வதில்லை என்று அறிவித்தார். இனவழிப்புக்கு நீதி கோரித் தமிழினம் கடினமான நீண்ட போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு இனக் கொலைக் குற்றவாளிகளுக்குத் துணைபோகும் இரண்டகருக்கு ஊக்கமளிப்பதாக இருந்துவிடக்கூடாது என விரும்புகிறேன், "