ஆலையடிவேம்பு பிரதேச சபை வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

 வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செல்வுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

பிரதேச சபையின் தவிசாளர் த.கிரோஜாதரன் தலைமையில் சபை இன்று கூடியபோது வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.

16 உறுப்பினர்களை கொண்ட பிரதேச சபையில் தவிசாளரால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்திற்கு சமூகம் அளித்திருந்த 15 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் வாக்கெடுப்பின்றி வரவு செல்வுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

 சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் மீண்டுவரும் வருமானம் மற்றும் மூலதன வருமானமாக 81,056,780 ரூபா எதிர்பார்க்கப்படுவதுடன்; மீண்டுவரும் செலவீனம் மற்றும் மூலதன செலவீனமாக 81,046,609.68 சதம் மொத்த செலவீனமாக சுட்டிக்காட்டப்பட்டது. .இதன் அடிப்படையில் 10170.32 சதம் மிகையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் ஆண்டில் பிரதேச அபிவிருத்தி ,நலன்புரிச்சேவை, திண்மக்கழிவகற்றல், மற்றும் பிரதேச நில அளவை வேலைத்திட்டம், வீதி மின்விளக்கு பொருத்துதல், தொற்றுநோய் தடுப்பு செயற்பாடு உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு குறித்த வரவு செலவுத்திட்டத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளன

இதேநேரம் பல வருடங்களின் பின்னர் 2021 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது 

சபைக்கூட்டத்தில் பிரதேச சபை உபதவிசாளர் விக்டர் ஜெகன் உள்ளிட்ட உறுப்பினர்கள் செயலாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement