தவறான தகவல்களால், கவலை


 


வி.சுகிர்தகுமார்  


  அம்பாரை மாவட்டத்தில் முதல் முதலாக காரைதீவு சமுர்த்தி வங்கியும் பொத்துவில் தெற்கு சமுர்த்தி வங்கியும் கணிணி மயப்படுத்தப்பட்டு ஒன்லைன் நடவடிக்கையினை கடந்த மாதம் முதல் ஆரம்பித்துள்ளதுடன் சமுர்த்தி வங்கிச்சங்கங்களின் அடிப்படையில் ஆலையடிவேம்பு சமுர்த்தி வங்கிச்சங்கம் முதலாவதாக ஒன்லைன் வேலைத்திட்டத்தை செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பித்த நிலையில் தொடர்ந்து அட்டாளைச்சேனை சமுர்த்தி வங்கிச்சங்கமும் இந்நடவடிக்கையில் இணைந்து கொண்டது.

இது இவ்வாறிருக்க சில வங்கிச்சங்கங்கள் தாமே முதலில் இப்பணியினை ஆரம்பித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான தவறான செய்தி தொடர்பில் வேலைத்திட்டத்தை ஏற்கனவே பல சிரமங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்கு மத்தியில் ஆரம்பித்த வங்கி மற்றும் வங்கிச்சங்க உத்தியோகத்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஆகவே இது தொடர்பில் செய்தி வெளியிடும்போது மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரையோ அல்லது குறித்த அதிகாரிகளையோ தொடர்பு கொண்டு தகவலை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேநேரம் நாடளாவிய ரீதியில் சமுர்த்தி வங்கிகள் வங்கிச்சங்கங்கள் யாவும் கணிணி மயப்படுத்தப்பட்டு மக்களுக்கான இலகு சேவையினை வழங்கும் முயற்சியில் அரசாங்கமும் அமைச்சும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளரும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும் சமுர்த்தி பணிப்பாளர் நாயகம், வங்கி நிதி நடவடிக்கை பணிப்பாளர், மாவட்ட செயலாளர் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பிரதேச செயலாளர்கள்; மற்றும் ஒன்லைன் செயற்பாட்டிற்காக சமுர்த்தி திணைக்களத்தால் நியமிக்கப்பட்டு தகுந்த நேரத்தில் சிறந்த ஆலோசனை வழங்கிவரும் உத்தியோகத்தர் மற்றும் அவரது குழுவினர், மாவட்ட செயலத்தில் இருந்து ஆலோசனைகளை வழங்கிய வங்கி மேற்பார்வை உத்தியோகத்தர்கள் கணிணி மயப்படுத்தலில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் கணிணி பயற்சி ஊழியர்கள் உள்ளிட்ட குழுவினருக்கும் வங்கி மற்றும் வங்கிச்சங்க முகாமையாளர்கள்,  உத்தியோகத்தர்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றனர்.