அக்கரைப்பற்றில் பலர் குணமடைந்துள்ள வேளையில், எப்போது விடுவிக்கப்படும்?


 வி.சுகிர்தகுமார் 0777113659 


  அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் 20ஆவது நாளாகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் எங்கள் பிரதேசம் எப்போது விடுவிக்கப்படும் ? எனும் கேள்வியே பலமாக இங்கு வாழும் மக்களிடம் எழுந்துள்ளது.
இந்நிலையில் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் இதுவரை ஒரு மரணம் பதிவாகியுள்ளதுடன் 11587 அன்ரிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதில் 468 பேர் தொற்றுடையவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 80 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் எனவும் அத்தகவல்களில் குறிப்பிடப்படுள்ளது.

மேலும் புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாத நிலையில் குறித்த பிரதேசம் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக அறிய முடிகின்றது. இதற்கான ஒத்துழைப்பை மக்களே வழங்கவேண்டும் என்பதும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதேநேரம் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அ.லதாகரனின் பணிப்புரையில் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜ.சுகுணனின் வழிகாட்டலில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் கடமையாற்றும் பிரதேச சுகாதார பணிப்பாளர்களான எஸ்.அகிலன் மற்றும் பாறுசா நக்பர் ஆகியோர் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்காக இங்கு உள்ள வைத்தியர்கள் தாதியார்கள் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரும் அர்ப்பணிப்போடு இரவு பகல் பாராது கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இங்கு வாழும் மக்கள் சார்பில் சுகாதாரத்துறை சார்ந்த அனைவருக்கும் மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க அவர்களின் ஆலோசனையின் பேரில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் சமுர்த்தி பெற தகுதியுடையவர்கள் என கருதப்படும் 22387 பயனாளிகளுக்கு உலர் உணவுப்பொதிகள் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக அரசாங்கம் 22கோடி ரூபாவிற்கும் மேற்பட்ட தொகையை ஒதுக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதனை நடைமுறைப்படுத்தும் பொருட்டு பிரதேச செயலாளர்கள் தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கொரோனா அச்சுறுத்தலுக்கும் மத்தியிலும் செயற்பட்டு வருகின்றனர். இந்நடவடிக்கை இரு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இரு கட்டங்களும் நிறைவும் தறுவாயில் உள்ளதாக பிரதேச செயலாளர் வி.பபாகரன் தெரிவித்தார்.
இந்நிலையில் நிவாரணம் பெற்றுவருகின்ற பயனாளிகளுக்குள் உள்வாங்கப்படாத தொழில் பாதிக்கப்பட்டவர்கள் வாகன உரிமையாளர்கள் என ஆட்டோ சங்கத்தினர் என பலரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தமக்கும் இந்நிவாரணம் அரசாங்கத்தினால் வழங்கப்படவேண்டும் எனும் கோரிக்கையினை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.