பயிலுநர்கள் மக்களின் தேவையறிந்து கடமையாற்ற வேண்டும்!


 பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கு இணைக்கப்பட்டுள்ள பயிலுநர்கள் மக்களின் தேவையறிந்து கடமையாற்ற வேண்டும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எல் பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

 நாடளாவிய ரீதியான ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அம்பாறை  மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட   பயிலுநர்களுக்கான தொழில் பயிற்சி தொடர்பான ஆரம்ப நிகழ்வு தேசிய இளைஞர் படையணி கேட்போர் கூடத்தில்   திங்கட்கிழமை(14)  இடம்பெற்றது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு என்னும் தொனிப் பொருளில் வேலைவாய்ப்பற்றவர்களுக்கு வேலை வழங்குதல் நிகழ்ச்சி திட்டத்தில் கல்வியை பூர்த்தி செய்யாத 35,000 பயிலுநர்கள் முதற்கட்டமாக நாடாளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டார்கள் இவற்றுள் அம்பாறை மாவட்டத்திலும்  பயிலுநர்கள் பயிற்சி நெறிக்காக தெரிவு செய்யப்பட்டு அவர்களிற்கான தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது. 


குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய  அரசாங்க அதிபர்

ஜனாதிபதியினுடைய கொள்கைப் பிரகடனமான சுபிட்சத்தின் நோக்கு அடிப்படையிலே வேலைவாய்ப்பற்ற வறிய குடும்பத்தினருக்கு வேலை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வறுமை நிலையினை  அடிப்படையாகக் கொண்டு குறிப்பாக கல்வியை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருக்கின்ற ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட குடும்பங்களை அவர்களுடைய வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதனை இலக்காகக் கொண்டே இந்த ஒரு இலட்சம் குடும்பங்களில் இருந்து முதல் கட்டமாக நாடு பூராகவும் 35,000 பயிலுநர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த பயிற்சியானது பயிலுநர்களை தொழில் ரீதியாக வலுப்படுத்தி அவர்களுடைய திறமைகளை மேலும் மேம்படுத்தி தொழில்வாண்மை உள்ளவர்களாக மேம்படுத்தி வளப்படுத்தி தெரிவு செய்த தொழிலை திறம்பட செய்வதற்கும்  அந்த தொழிலை நேர்த்தியாக செய்வதற்கும் இந்த பயிற்சிகள் நிச்சயம் கைகொடுக்கும்.

உங்கள் ஒவ்வொருவருக்கும் பல திறமைகள் இருக்கின்றன ஆனால் அந்த திறமைகளை சரியாக இனங்கண்டு அவற்றை செயற்படுத்த இந்த பயிற்சிள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் ஒவ்வொருவரும்  தெரிவுசெய்யப்பட்ட துறையில் நீங்கள் சிறப்பாக வரவேண்டுமாக இருந்தால் உங்கள் பயிற்சிக் காலத்தின் போது இடையுறாது வருகை தந்து குறித்த பயிற்சியினை திறம்படச் செயற்படுத்திக் கொள்ள வேண்டும்.


அரச உத்தியோகத்தர்களாகிய எமக்கு வழங்கப்படுகின்ற சம்பளமானது மக்களுடைய வரிப் பணத்தில் இருந்து கிடைக்கின்றது எனவே மக்களுடைய வரிப் பணத்தில் நாம் சம்பளம் பெறும் நாங்கள் மக்களுக்கு  நேர்த்தியாகவும் மக்களின் தேவைகளை நிறைவேற்ற கூடியவாறும் சேவையாற்ற முன்வர வேண்டும் அதற்கு ஏற்றவாறு நமது மனப்பாங்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஏற்கனவே உங்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது அதன்மூலம் நீங்கள் பல்வேறுபட்ட அனுபவங்களை பெற்றிருப்பீர்கள் எனவே தங்களுக்கு வழங்கப்படும் அனைத்து பயிற்சிகளும் உங்களை வளபடுத்துவதற்காகவே வழங்கப்படுகின்றது.

ஏனையவர்களுக்கு கிடைக்காத இந்த சந்தர்ப்பம் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவே குறித்த பயிற்சிகளை நீங்கள் திறம்பட செயற்படுத்தி எதிர்காலத்தில் சமூகத்திற்கு சிறப்பாக சேவையாற்றி நீங்கள் முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

--