கல்முனை;தனிமைப்படுத்தப்பட்ட சட்டம்- 9ஆவது நாள்


பாறுக் ஷிஹான்(
ෆාරුක් සිහාන්)


கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட  செயிலான் வீதியில் இருந்து வாடி வீட்டு வீதி வரை தனிமைப்படுத்தப்பட்ட நிலையில்  9 நாளான இன்று(6)  குறித்த  பிரதேச  வீதிகள் சில வெறிச்சோடி காணப்படுவதுடன் பொலிஸார் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்முனை பிரதேசத்தில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்திற்கொண்டு கடந்த  (28) இரவு 8.30 மணியில் இருந்து மறு அறிவித்தல் வரை மேற்குறித்த பகுதிகளில் உள்ள உள்ளக வீதிகள் பிரதான வீதிகளில்  போக்குவரத்து செய்வது முற்றாக தடை செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த பகுதியை ஊடறுத்து செல்கின்ற பிரதான வீதி தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில்  மூன்று  நாட்கள் மூடப்பட்டிருந்த நிலையில் பின்னர் குறித்த பிரதான வீதியில் இடப்பட்ட வீதி தடைகள் தளர்த்தப்பட்டு போக்குவரத்திற்கு திறக்கப்பட்டன.

இன்று கல்முனை பொதுச் சந்தை  இகல்முனை பஸார்  கல்முனை பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் பொதுப்போக்குவரத்தும் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

கல்முனை மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து எந்தவொரு பேருந்து சேவையும் இடம்பெறவில்லை என்பதை அவதானிக்க முடிந்தது.

தற்போது பிசிஆர் பரிசோதனைகள் மற்றும் அண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன்  இப்பகுதியை    கொரோனா பரவலில் இருந்து  கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும்,தொற்றாளர்களை இணங்காண்பதற்காகவும் இந்த தனிமைப்படுத்தல்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமையும்  குறிப்பிடத்தக்கது.