நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு பலவழிகளிலும் அழுத்தங்கள்


 (க.கிஷாந்தன்)

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு பலவழிகளிலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும். நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா நகரிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.

 

அட்டனில் இன்று (8.1.2021) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

 

" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தையும் எவ்வித இணக்கப்பாடும் இன்றி, திகதி குறிப்பிடப்பாடமலேயே  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது விடயத்தில் இழுபறி தொடர்கின்றது. அதற்கு இடமளிக்கமுடியாது. விரைவில் தீர்வு எட்டப்படவேண்டும்.

 

குறிப்பாக அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியை பட்ஜட் ஊடாக பிரதமர் வழங்கினார். எனவே, இதற்கு அரசாங்க மட்டத்திலான தலையீடு அவசியம். கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக இதனை செய்யமுற்படுவது பொருத்தமற்ற செயற்படாகும்.

 

சம்பளம் மட்டுமல்ல, கூட்டு ஒப்பந்தத்தில் இதர பல நலன்புரி விடயங்களும் உள்ளன. எனவே, தொழில் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டுமெனில் அந்த ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டிதான் வாதிடவேண்டும்.

 

அரசாங்கத்தில் உறுதியளிக்கப்பட்ட அடிப்படை நாட் சம்பளம் என்ற உறுதிமொழியை நிறைவேற்ற முழுமையான அரசாங்கத்தின் பங்களிப்பு அவசியம் என்பதனை நினைவூட்டுகின்றோம். ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு சில கம்பனிகள் இணக்கம் வெளியிட்டுள்ளன என்று கூறப்படுகின்றது. அவ்வாறான கம்பனிகளிடம் நிர்வாகம் ஒப்படைக்கப்படவேண்டும்.

 

அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படாவிட்டால் கம்பனிகளின் முகாமைத்துவ உரிமை மீள்பரிசீலனை செய்யப்படும் என்று பிரதமர் அறிவித்தார். இதன்படி இழுத்தடிக்கும் நிர்வாகங்களிடமிருந்து முகாமைத்துவத்தை பறித்து, முடியும் என்ற கம்பனிகளுக்கு வழங்கவேண்டும்.

 

எங்களை பொருத்தவரை அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா அவசியம். அதற்கான அழுத்தங்கள் தொடர்ந்தும் பிரயோகிக்கப்படும். நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா நகரிலும் போராட்டம் முன்னெடுக்கப்படும். " - என்றார்.Advertisement