தோட்டங்களை #அதானி நிறுவனம் கையகப்படுத்துமா?


 


தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் 1,000 ரூபாவாக அறிவித்து வர்த்தமானியை வௌியிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ‘சன்டே டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.


பெருந்தோட்ட கம்பனிகளுடன் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும், அடிப்படை சம்பளம் 725 ரூபாவாக வழங்குவதனூடாக தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1,000 ரூபாவை ஈட்ட முடியும் என தோட்ட நிறுவனங்கள் அண்மையில் வெளியிட்ட இறுதி பரிந்துரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.


எனினும், நாளாந்த அடிப்படை சம்பளம் 1,000 ரூபா வழங்கப்பட வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்திய நிலையில், சம்பள நிர்ணய சபையினூடாக இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு இடையில் இவ்வாறான முறுகல் நிலை காணப்படும் போது, குறைந்த வருமானத்தை ஈட்டும் தோட்ட நிறுவனங்களை அரசு கையேற்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ‘சன்டே டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.


அவ்வாறு கையேற்கும் குறைந்த வருமானம் பெறும் நிறுவனங்களை, கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் 49 வீத பங்கு தொடர்பில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள இந்தியாவின் அதானி நிறுவனம் பொறுப்பேற்குமென ஊகிப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது