நாம் மௌனமாக இருப்பதாக நினைத்து விடவேண்டாம்


 



(க.கிஷாந்தன்)

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் எதிர்வரும் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பவுள்ளோம் - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

 

அட்டனில் இன்று (30) நடைபெற்ற கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

 

" அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்தப்போவதாக அறிவித்துவிட்டே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் மொட்டு கட்சிக்கு வாக்களித்த மக்களே இன்று அரசின் செயற்பாடுகளை கடுமையாக விமர்ச்சிக்கின்றனர். பொருட்களின் விலைகள் நாளாந்தம் உயர்வடைந்துவருகின்றன. சிலவேளை நாமும் அந்த பக்கம் சென்றிருந்தால் இந்நேரம் மக்களின் சாபத்துக்கு உள்ளாக வேண்டி இருந்திருக்கும்.

 

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டது. ஜனாதிபதியும் இது குறித்து அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். ஆனால் அவரின் உத்தரவைக்கூட கம்பனிகள் ஏற்பதாக தெரியவில்லை. மறுபுறத்தில் அடுத்த பேச்சுவார்த்தையில் வெற்றி நிச்சயம் என வீராப்பு பேசிய கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

 

தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே கம்பனிகளை ஒரு நிலைக்கு கொண்டுவரமுடியும். இதனை செய்வதற்கு மாற்று தரப்பினர் தயாராக இல்லை. சம்பள விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பவுள்ளோம்.  ஆயிரம் ரூபா வழங்கப்படும் என அரசாங்கமே அறிவித்தது. எனவே, அதற்கு அழுத்தம் கொடுத்துதான் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.

 

நாம் மௌனமாக இருப்பதாக நினைத்துவிடவேண்டாம். சம்பள விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம். நாம் விழிப்பாக இருந்திருக்காவிட்டால், தொழிலாளர்களை காட்டிக்கொடுத்துவிட்டு இந்நேரம் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருப்பார்கள்.

 

அதேவேளை, எமது ஆட்சியில் 7 பேர்ச்சஸ் காணியில் அமைந்த வீட்டை குருவிக்கூடு என விமர்சித்து, 20 பேர்ச்சஸ் காணியை பெற்றுக்கொடுக்கப்போவதாகவும், சிளப் வீடுகள் அமைக்கப்படும் சூளுரைத்தவர்கள், இன்று 10 பேர்ச்சஸே வழங்குவதற்கே நடவடிக்கை எடுத்துள்ளனர். " - என்றார்.