6 வயதுக் குழந்தையும் சட்டம் வேண்டும்

 


ஹாங்காங்கின் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்படி, ஆறு வயதுள்ள குழந்தைகளும் தங்கள் பள்ளிகளில் குற்றங்கள் குறித்துப் படிக்க வேண்டும்.

அந்நாட்டின் புதிய கல்வி விதிகளின்படி, குழந்தைகளின் நடத்தையைக் கண்காணிக்குமாறு பள்ளிகளிடம் கோரப்பட்டுள்ளது. மேலும் யாரேனும் ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குகின்றனரா என்பதையும் பள்ளிகள் கண்காணிக்க வேண்டும்.

இந்த தேசியப் பாதுகாப்புச் சட்டம், கடந்த ஜூன் மாதம் சீனாவால் அமல்படுத்தப்பட்டது. மேலும் அந்நாட்டில் நடைபெற்று வரும் ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டங்கள் இதனால் முடிவுக்கு வரும் எனச் சீனா தெரிவித்துள்ளது.

பிரிட்டன் ஆளுகையில் இருந்த ஹாங்காங் 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கென பிரிட்டன், சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, 1997 முதல் 50 ஆண்டுகளுக்கு 'ஒரு நாடு, இரு அமைப்பு' என்ற ஏற்பாடு நீடிக்கும். இந்த ஏற்பாட்டின்படி ஹாங்காங் 50 ஆண்டுகளுக்கு பல சுதந்திரங்களை அனுபவிக்கும்.

சீனா இயற்றியுள்ள புதிய சட்டம் ஹாங்காங் 50 ஆண்டுகளுக்கு அனுபவிக்கவேண்டிய அந்த சுதந்திர உரிமைகளைப் பறிப்பதாக இருக்கும் என்கிறார்கள் விமர்சகர்கள்.

ஹாங்காங் போராட்டத்தில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஹாங்காங் கல்வித் துறை வியாழனன்று, தேசியப் பாதுகாப்பு சட்டம் என்றால் என்ன என்பதை விளக்கும் அனிமேஷன் காணொளி ஒன்றை வெளியிட்டு அதனுடன் சில விதிமுறைகளையும் பள்ளிகளுக்கு அறிவித்தது.

அந்த சட்டத்தின்படி நாட்டிடமிருந்து விலகிச் செல்ல நினைப்பது, அரசை அகற்ற நினைப்பது, வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பு வைப்பது ஆகியவை குற்றமாகும். மேலும் இதற்கு அதிகபட்ச சிறை தண்டனை வழங்கப்படும்.

அந்த அனிமேஷன் காணொளியில் ஆந்தை ஒன்றும், இரு மாணவர்களும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் குறித்து விவரிக்கின்றனர். மேலும் இது, "ஹாங்காங்கின் வளர்ச்சிக்கும் நீண்டகால வளமைக்கும்" தேவையானது என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.Advertisement