ஓங்சாங் சூச்சி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது

 மியான்மர் நாட்டில் ஆங் சாங் சூச்சி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் சமீபத்தில் நடந்த தேர்தலை அடுத்து அரசாங்கத்திற்கும் ராணுவத்திற்கும் இடையில் நிலவி வந்த பதட்டத்தை தொடர்ந்து இந்த தகவல் வெளிவந்துள்ளது.

நாட்டின் முக்கிய தலைவர்கள் கைதுசெய்யப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, மியான்மரில் ஓராண்டுக்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தொலைக்காட்சியின் மூலம் அந்த நாட்டின் ராணுவம் அறிவித்துள்ளது.

பர்மா என்றும் அழைக்கப்படும் மியான்மர் 2011இல் ஜனநாயக சீர்திருத்தங்கள் தொடங்கும் வரை ராணுவத்தால் ஆளப்பட்டது.

ஆங் சாங் சூச்சி கைது

மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்

முன்னதாக, மியான்மர் நாட்டின் என்.எல்.டி. கட்சியின் தலைவர் ஆங் சாங் சூச்சி கைது செய்யப்பட்டதாக அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்துக்கும் ராணுவத்துக்கும் இடையிலான பதற்றத்தினால் இந்த கைது நடத்திருக்கிறது. இப்பதற்றமான சூழல் ஆட்சிக் கவிழ்க்கப்படலாம் என்கிற அச்சத்துக்கு வலுசேர்த்திருந்தது.

கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில், நேஷனல் லீக் ஃபார் டெமாகிரசி (என்.எல்.டி) கட்சி ஆட்சியை அமைப்பதற்குத் போதுமாக இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் அந்த நாட்டு ராணுவமோ தேர்தலில் மோசடி நடந்ததாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது.

கடந்த 2011-ம் ஆண்டு வரை பர்மா என்றழைக்கப்பட்ட மியான்மர், ராணுவத்தின் பிடியில் இருந்தது. இதனால், சூச்சி பல ஆண்டுகளை வீட்டுக் காவலில் கழித்தார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மியான்மர் நாடாளுமன்றத்தின் கீழவை, இன்று (பிப்ரவரி 1, திங்கட்கிழமை) கூட இருந்தது. ஆனால் தற்போது அந்நாட்டு ராணுவம் தலையிட்டு அக்கூட்டத்தை ஒத்திவைக்க அழைப்புவிடுத்திருக்கிறது.

மியான்மரின் தலைநகரான நேபிடவ் மற்றும் யங்கூனின் சாலைகளில் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள் என பிபிசியின் தெற்காசிய செய்தியாளர் ஜானதன் ஹீட் கூறுகிறார்.

ஆங் சாங் சூச்சி, மியான்மரின் அதிபர் வின் மைன்ட் என பல தலைவர்கள் இன்று காலையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் என்.எல்.டி கட்சியின் செய்தித் தொடர்பாளரான மயோ நியுன்ட் கூறினார்.

"மியான்மர் மக்கள் எந்த வித மோசமான வழியிலும் எதிர்வினையாற்ற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். அவர்கள் சட்டத்தின் வழியில் நடக்க வேண்டும். நானும் கைது செய்யப்படலாம்" என்றார் மயோ.

ஆங் சாங் சூச்சி
படக்குறிப்பு,

ஆங் சாங் சூச்சி

தொலைபேசி மற்றும் அலைபேசி அழைப்பு சேவை மட்டுமின்றி இணைய சேவையும் துண்டிக்கப்பட்டிருப்பதாக பிபிசியின் பர்மீசிய சேவை கூறுகிறது.

மியான்மர் நாட்டின் பல்வேறு பிராந்தியத்தின் முதலைச்சர்களும் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர்களின் குடும்பத்தினர்கள் கூறுகிறார்கள்.

மியான்மரின் ஆயுதப் படையினர், அரசியலமைப்புச் சட்டத்தைக் கடைபிடிப்போம் என கடந்த சனிக்கிழமை உறுதியளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.Advertisement