சின்னம்மாவின் மீள் வருகை


 


சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்து விடுதலை ஆனாலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு முதலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பிறகு விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தி கொண்டிருந்த சசிகலா, பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி புறப்பட்டார்.

இன்று காலை 10.30 மணியளவில் தமிழக எல்லைக்குள் நுழைந்த அவருக்கு, ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அதிமுகவின் எதிர்ப்பையும் மீறி, சசிகலாவின் காரில் அந்த கட்சியின் கொடி பொருத்தப்பட்டுள்ளது.

தமிழக - கர்நாடக எல்லையில் சசிகலா நுழையும்போது அதிமுக கொடியை பயன்படுத்த வேண்டாம் என காவல்துறை வலியுறுத்தியும் சசிகலா பயணித்த வாகனத்திலிருந்து கொடி அகற்றப்படவில்லை.

மேலும், தமிழக எல்லைக்குள் நுழைந்ததும் பெங்களூரில் இருந்து பயணித்த காரில் இருந்து இறங்கி சசிகலா, மற்றொரு காரில் ஏறி தமிழக எல்லைக்குள் பயணிக்கத் தொடங்கினார்.

அதிமுக கொடி கட்டப்பட்டுள்ள வாகனத்தில் சசிகலா
படக்குறிப்பு,

அதிமுக கொடி கட்டப்பட்டுள்ள வாகனத்தில் சசிகலா

தமிழக எல்லையில் நுழைந்ததும் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணித்தால் காவல்துறையின் கெடுபிடிக்கு உள்ளாக நேரிடும் என்பதால் சசிகலா வேறு காருக்கு மாறினாரா என்று அமமுகவின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனிடம் பிபிசி தமிழ் செய்தியாளர் மு. ஹரிஹரன் கேட்டபோது, "சசிகலா பெங்களூருவிலிருந்து கிளம்பிய காரின் குளிர்சாதன வசதியில் பிரச்சனை ஏற்பட்டதுவிட்டது. எனவே, தன்னை வரவேற்க வந்திருந்த கட்சி நிர்வாகி ஒருவரின் காருக்கு மாறி, அதில் சசிகலா சென்று கொண்டிருக்கிறார். அவரது கார் சரிசெய்யப்பட்டதும் அதில் பயணத்தை மேற்கொள்வார்" என்று கூறினார்.

சசிகலாவோடு டி.டி.வி. தினகரன் மற்றும் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் ஆகியோர் உள்ளனர். சுமார் பத்து வாகனங்கள் சசிகலா வரும் வாகனத்துடன் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், பெங்களூரில் இருந்து தமிழகம் வரும் சசிகலாவிற்கு வரவேற்பளிக்கவும் பேனர்கள் வைக்கவும் தமிழக - கர்நாடக எல்லை பகுதியான அத்திப்பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் அத்திப்பள்ளி அடுத்துள்ள ஜூஜூவாடி பகுதியில் சசிகலாவின் ஆதரவாளர்கள் மற்றும் அமமுக தொண்டர்கள் பலரும் குவிந்துள்ளனர். மேலும், சாலையின் நடுவே வாழை மரங்கள், கட்சிக்கொடிகள், சாலையோரங்களில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. செண்டைமேள இசையோடு சசிகலாவின் வருகைக்காக தொண்டர்கள் காத்திருக்கின்றனர் என்று அங்குள்ள பிபிசி தமிழின் செய்தியாளர் மு. ஹரிஹரன் கூறுகிறார்.