ந்தாப்பணத்தில் பெருந்தோட்டக்கம்பனிகள் கை வைத்துள்ளன (க.கிஷாந்தன்)

 

தொழிலாளர்களை தனிமைப்படுத்தி, தொழிற்சங்கங்களை முடக்கும் நோக்கிலேயே சந்தாப்பணத்தில் பெருந்தோட்டக் கம்பனிகள் கை வைத்துள்ளன. இதற்கு எதிராக போராடுவோம். இது தொடர்பில் தொழில் ஆணையாளரிடமும் முறையிடப்பட்டுள்ளது - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

அட்டனில் (10.05.2021) அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

 

“ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் கிடைத்தாலும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீரவில்லை. தோட்ட நிர்வாகங்களின் அழுத்தங்கள், கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. தொழில் சுமைகளை அதிகரித்து, தொழிலாளர்களை நசுக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. குறிப்பாக 20 கிலோ கொழுந்து பறித்தால்தான் ஒரு நாள் பெயர் வழங்கப்படும் என கட்டளையிடப்பட்டுள்ளது.   தொழிலாளர்கள் அனுபவித்துவந்த சலுகைகள், நிர்வாகங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

 

அதுமட்டுமல்ல தோட்டத் தொழிலாளர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தொழிலாளர்கள், செலுத்தும் சந்தாப்பணத்தை அறவிடுவதை கம்பனிகள் நிறுத்தியுள்ளன. தொழிலாளர்கள் தொடர்பில், தொழிற்சங்கங்கள் தலையிடக்கூடாது என்பதே இதன் நோக்கமாகும்.  இதனை நாம் எதிர்க்கின்றோம். இவ்விடயம் உட்பட 10 பிரச்சினைகளை பட்டியலிட்டு, தொழில் ஆணையாளருக்கு மலையக மக்கள் முன்னணி கடிதம் அனுப்பியுள்ளது.

 

தொழிற்சங்கங்களை அடக்கி, தொழிலாளர்களை தனிமைப்படுத்துவதற்காக சந்தாப்பணத்தில் கைவைத்துள்ள கம்பனிகளுக்கு எதிராக போராடுவோம். தொழில் ஆணையாளர் தீர்வை பெற்றுத்தருவார் என நம்புகின்றோம்.

 

அதேவேளை, இரசாயன உரப்பயன்பாட்டுக்கு எடுத்த எடுப்பிலேயே தடை விதித்தமை தவறு. இதனால் பல துறைகள் பாதிப்படையக்கூடும். மாற்றுவழியை அடையாளம் காணப்பட்ட பின்னர் தீர்மானமொன்றுக்கு சென்றிருக்கலாம். அதனைவிடுத்து அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு தவறு.” - என்றார்.