மலையகத்தில் தடுப்பூசி பெறுவதில் முதியோர் ஆர்வம் (க.கிஷாந்தன்)

 

கொவிட் -19 தடுப்புக்கான தடுப்பூசி ஏற்றும் பணி நுவரெலியா மாவட்டத்தில் இன்று (12.06.2021) நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய தினம் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

இதன்படி கொட்டகலை மற்றும் அட்டன் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.

கொட்டகலை மற்றும் அட்டன் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில், கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவு இனங்காணப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளுக்கு சுகாதார அதிகாரிகள் முன்னுரிமை வழங்கியிருந்தனர்.

காலையிலேயே தடுப்பூசி ஏற்றும் நிலையங்களுக்கு வந்திருந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டனர்.

நுவரெலியா மாவட்டத்துக்கு முதற்கட்டமாக 50 ஆயிரம் சினோ பாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக மேலும் 50 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.