அம்பாரை மாவட்டத்தில் உரம், கிருமிநாசினி தட்டுப்பாடு


 \




வி.சுகிர்தகுமார் 0777113659
 


  விவசாய செய்கைக்கான பசளை மற்றும் கிருமிநாசினிகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தி தம்மை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்பாரை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் சேதனப்பசளை அம்பாரை மாவட்ட விவசாய நிலங்களுக்கு அதிகம் பொருந்தாது. அவ்வாறு பாவிப்பதானாலும் இரசாயனப்பசளையோடு கலந்து படிப்படியாகவே நிலத்தை சேதனப்பசளை மூலம் வளப்படுத்தி பாவனையினை அதிகரிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
அம்பாரை மாவட்ட விவசாயிகள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு கூறினர்.
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச விவசாயிகள் 2021 சிறுபோகத்தில் உரம் ,களை நாசினி ,கிருமி நாசினி தட்டுப்பாட்டினால் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
காலா காலமாக யூரியா பசளை போட்டு விவசாயம் செய்து வந்த எங்களுக்கு எங்களது நிலத்துக்கு சேதன பசளை சரிவராது யூரியா பசளையே தேவை எனவும் கூறுகின்றனர்.
 2021 சிறு போகத்தில் அரசாங்கத்தினால வழங்கப்பட்ட இரசாயன மானிய உரம் தந்த போதும் அது தங்களுக்கு போதுமானதாக இல்லை எனவும் சேதன பசளையையும் முறையாக கிடைப்பதில்லை என்பதோடு அதை பாவித்து பார்க்கையில் சேதனப்பசளைக்கு வளர்ச்சி போதாமல் குன்றிக்காணப்படுவதாகவும்  விவசாயிகள் கவலை வெளியிட்டனர்.
இதேநேரம் வழமையாக தேவைப்படும் உரத்தை வெளிச்சந்தைகளில் வர்த்தகர்களிடம் இருந்து பணம் செலுத்தி பெற்று வந்ததாகவும்  இப்போகத்தில் சேதனப்பசளை பாவிக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்ததால் இரசாயனப் பசளைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு   வர்த்தகர்கள் உரத்தை பதுக்கி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டனர். மேலும்  1500 ரூபாவுக்கு விற்கவேண்டிய 50 கிலோ உரப்பையை 5 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்வதாகவும் இதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து பசளை ,கிருமி நாசினி,களை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
தற்போது  நெற்செய்கையில் அறக்கொட்டி நோய், மஞ்சள் நிற நோய் போன்ற நோய் தாக்கங்கள்; ஏற்பட்டு  இலைகள் சிவந்து வய்க்கோல் நிறத்துக்கு மாறிவருவதாகவும் அதற்குரிய நாசினிகளை பெறுவதும் கடினமாக உள்ளதாக தெரிவித்தனர்.
நாசினிகளுக்கான தட்டுப்பாடு மற்றும் தேடிப் பெற இயலாத நிலமை காரணமாக கூடிய விலைக்கு விற்பனை செய்கின்றனர்.  இப்படியான நிலையால்; விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.