சென்னை மாநகரத்துக்கு இன்று 382-வது பிறந்த நாள்


 


சென்னை மாநகரத்துக்கு இன்று 382-வது பிறந்த நாள். சிறு மீனவக் கிராமமாக இருந்த சென்னபட்டணம் ஆங்கிலேயர்களின் வரவால் அடையாளம் பெற்று, இன்றைக்கு உலகப் பெருநகரங்களில் ஒன்றாகப் பரிணமித்திருக்கிறது. ‘வந்தாரை வாழவைக்கும்’ சென்னை நகரின் வரலாறு, நம்ப முடியாத ஆச்சர்யங்கள் கொண்டது. ‘சென்னை தின’த்தில் மட்டும் அல்லாமல், ஆண்டுதோறும் பேசினாலும் வற்றாத வரலாற்றுக் களஞ்சியம்தான் ‘மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்’. சென்னை பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த வேளையில், சென்னையின் ஸ்பெஷல் அடையாளங்கள் சிலவற்றைக் காணலாம்!


சென்னை குறித்து உங்களுக்கு எந்தளவு தெரியும்? வாங்க, இந்தக் கேள்விகளுக்கு ஜாலியா பதில் சொல்லுங்க!


எஸ்பிளனேடு எல்லை ஸ்தூபி


சென்னையில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகை தொடங்கியபோது, புனித ஜார்ஜ் கோட்டையை ஒட்டி இந்தியர்கள் வாழ்ந்த பகுதி கறுப்பர் நகரம் என்றழைக்கப்பட்டது. பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு 1760-ல் இந்தக் கறுப்பர் நகரம் முழுமையாக இடிக்கப்பட்டது. அங்கிருந்த மக்கள் முத்தியால்பேட்டை, பெத்தநாயக்கன்பேட்டை பகுதிகளில் குடியேறினர். புதிய கறுப்பர் நகரமாக உருவெடுத்த இந்தப் பகுதியின் எல்லைகளைக் குறிக்கும் வகையில், 1772-ம் ஆண்டு கறுப்பர் நகரத்தைச் சுற்றி ஆறு ஸ்தூபிகள் நிறுவப்பட்டன. அவற்றில் ஐந்து அழிந்துவிட, 1 ஜனவரி 1773 என்ற தேதி பொறிக்கப்பட்டிருக்கும் ஒரே ஒரு ஸ்தூபி மட்டும் மிஞ்சியது. வரலாற்றின் சாட்சியமாக, பாரிமுனை ‘டேர் மாளிகை’ கட்டடத்தின் ஓரத்தில் அது நின்றுகொண்டிருக்கிறது. ‘டேர் மாளிகை’க்கு முன்பு இந்த இடத்தில் இருந்த கட்டடத்தில்தான் அமெரிக்கத் தூதரகப் பணிகள் நடைபெற்றன.



மெட்ராஸ் உயர் நீதிமன்றம்


இந்தியாவின் இரண்டாவது பழைமையான உயர் நீதிமன்றம் இது. 1862 முதல் முப்பது ஆண்டுகள் கடற்கரை ரயில் நிலையத்துக்கு எதிரிலிருந்த கட்டடத்தில் உயர் நீதிமன்றம் இயங்கிவந்தது. 1892 ஜூலை 12 அன்று தற்போதைய கட்டடத்தில் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்தோ-சார்செனிக் பாணியில் அமைந்த இந்தக் கட்டடத்தை நிர்மாணிக்க, அந்தக் கால மதிப்பீட்டில் ரூ. 13 லட்சம் செலவானது. சென்னையின் தனிச் சிறப்புவாய்ந்த அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மெட்ராஸ் உயர் நீதிமன்ற வளாகம் முதலாம் உலகப் போரில் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளானது என்பதை உங்களால் நம்பமுடிகிறதா? ஜெர்மனியின் எம்டன் போர்க் கப்பல், 1914 செப்டம்பர் 22 அன்று சென்னை நகரைத் தாக்கியது. எம்டன் கப்பல் வீசிய குண்டு ஒன்று, மெட்ராஸ் உயர் நீதிமன்ற வளாகத்தில் விழுந்து, கட்டடத்தின் மதில் சுவரை இடித்துத் தரைமட்டமாக்கியது. இந்தச் சம்பவத்தைக் குறிக்கும் பலகை ஒன்றை உயர் நீதிமன்ற சுவற்றில் இன்றும் பார்க்கலாம்!



இடம், பொருள், ஆவல்: ஏழரை லட்சம் தமிழர்களின் உயிரைக் காப்பாற்றிய கால்வாய்!

Also Read

இடம், பொருள் ஆவல்: ஏழரை லட்சம் தமிழர்களின் உயிரைக் காப்பாற்றிய கால்வாய்!


ராயபுரம், சென்ட்ரல், எழும்பூர், கடற்கரை ரயில் நிலையங்கள்


இந்தியாவின் இரண்டாவது பழைமையான ரயில் நிலையம்; தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் என பழம்பெருமைகளைத் தாங்கி இன்றும் கம்பீரமாக நிற்கிறது ராயபுரம் ரயில் நிலையம். தென்னிந்தியாவின் முதல் ரயில் ஜூன் 1856-ல் ராயபுரத்திலிருந்துதான் இயக்கப்பட்டது. இந்தியாவின் முதல் ரயில் பாதையான மும்பை-தானே ரயில்நிலையங்கள் அவற்றின் உண்மையான வடிவத்தை இழந்துவிட்டதால், ராயபுரம் ரயில் நிலையம் ஒட்டுமொத்த துணைக்கண்டத்திலேயே பழைமையான ரயில் நிலையமாக இன்று விளங்குகிறது.

இங்கு போக்குவரத்து நெரிசைக் குறைப்பதற்காக, 1873-ல் பார்க் டவுனில் ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது தான், இன்றைய சென்ட்ரல் ரயில் நிலையம். மெட்ராஸ் ரயில் கம்பெனியில் முதன்மை ரயில் நிலையமாக 1907-ல் மாறிய சென்ட்ரல் ரயில் நிலையக் கட்டடத்தை வடிவமைத்தவர் ஜார்ஜ் ஹார்டிங்.


சென்ட்ரல் ரயில் நிலையம் அதன் தொடக்க ஆண்டுகளில்...

எழும்பூர் ரயில் நிலையத்தின் பணிகள், 1905-ல் தொடங்கி 1908-ல் முடிக்கப்பட்டன. அந்தக் கால மதிப்பீட்டில் ரூ.17 லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையத்துக்கு முதலில் ராபர்ட் கிளைவ் பெயரை வைக்க நினைத்தார்கள். ஆனால், பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பினால் எழும்பூர் என்ற பெயர் வைக்கப்பட்டது.

சென்னையின் போக்குவரத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று மின்சார ரயில்கள். நகரில் ஒரு எல்லையிலிருந்து மற்றொரு எல்லைக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் பயணிக்க உதவும் இந்த மின்சார ரயில் திட்டத்துக்கான யோசனை 1923-ல் உருவானது; இதற்கான பணிகளை மேற்கொண்ட தென் இந்திய ரயில்வே, 1930 டிசம்பர் 27 அன்று, இங்கிலாந்திலிருந்து 25 மின்சார ரயில் பெட்டிகளைக் கொண்டுவந்தது. இதைத் தொடர்ந்து 1931 ஏப்ரல் 2 அன்று கடற்கரை முதல் தாம்பரம் வரை முதல் மின்சார ரயில் பயணமானது.


சென்னைப் பல்கலைக்கழகம்


இந்தியாவின் மிகப் பழைமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னைப் பல்கலைக்கழகம் 1857-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இன்றைக்கு சேப்பாக்கம் மெரினா, கிண்டி, தரமணி, மதுரவாயல், சேத்துப்பட்டு என ஆறு வளாகங்களைக் கொண்டு இயங்கிவரும் சென்னைப் பல்கலைக்கழகம் 87 துறைகளின் கீழ் இயங்கும் 230 படிப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், சினிமா ஆளுமைகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் என பல்துறை ஆளுமைகளை உருவாக்கியிருக்கிறது. மிக முக்கியமாக இந்திய மொழிகளிலேயே முதல்முறையாக, தமிழில் பேரகராதி ஒன்றை உருவாக்கிய பெருமை சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு உண்டு. ஏழு பாகங்களாக வெளிவந்தது இது. முதல் பாகம் 4,351 பக்கங்களோடு, ஒட்டுமொத்தமாக 1,24,405 வார்த்தைகளைக் கொண்டிருந்தது பிரமிக்கத்தக்க சாதனை.


சென்னைப் பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழகம்

ரிப்பன் மாளிகை


சென்னையின் ஏராளமான பழைமைகளைப் போலவே, சென்னை மாநகராட்சியும் பழம்பெருமை வாய்ந்த ஒன்றுதான். பிரிட்டனுக்கு வெளியே காமன்வெல்த் தேசங்களில் அமைந்த நகர நிர்வாக அமைப்புகளில் இரண்டாவது மிகப் பழைமையான நகர நிர்வாக அமைப்பு சென்னை மாநகராட்சிதான். 1688 செப்டம்பர் 29 அன்று தொடங்கப்பட்டது. நிலையான இடமின்றி, பல்வேறு இடங்களில் இயங்கிவந்த சென்னை மாநகராட்சிக்கு தனி கட்டடம் கட்ட நினைத்தார்கள். 1909 டிசம்பர் 11 அன்று ரிப்பன் மாளிகைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அன்றைய மதிப்பீட்டில் ரூ. 7.5 லட்சம் செலவில், 4 ஆண்டுகளில் உருவான இந்த ரிப்பன் மாளிகையை வடிவமைத்தவர் ஜி.டி.எஸ்.ஹார்ஸ். பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த, உள்ளாட்சியில் சுயாட்சியின் தந்தை என்று போற்றப்பட்ட ரிப்பன் பிரபு நினைவாக இதற்குப் பெயர் சூட்டினார்கள்.



இடம்... பொருள்... ஆவல்: தங்கச்சாலை - சென்னையில் பணம் அச்சடிக்கப்பட்ட தெரு இதுதான்!


இடம்... பொருள்... ஆவல்: தங்கச்சாலை - சென்னையில் பணம் அச்சடிக்கப்பட்ட தெரு இதுதான்!

தியாகராய நகர்


சென்னை மாகாணத்தில் நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்தபோது, சென்னை நகர திட்டமிடல் சட்டம் 1920-ன் படி நவீன நகரப் பகுதி ஒன்றை உருவாக்க முடிவெடுக்கப்பட்டது. முதலமைச்சராக இருந்த பனகல் அரசர் தலைமையில், 1923 முதல் 1925 வரையிலான ஆண்டுகளில் சென்னையின் மையத்தில் புதிய நகரப் பகுதி உருவானது. நீதிக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான பிட்டி தியாகராய செட்டியின் பெயரால், இந்தப் புதிய நகரப் பகுதி தியாகராய நகர் என்று பெயரிடப்பட்டது. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பஜார்களில் ஒன்றாக ‘பாண்டி பஜார்’ இங்குதான் அமைந்திருக்கிறது. நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.பி.ஏ. சௌந்தரபாண்டியன் நினைவாக இதற்குப் பாண்டி பஜார் என்று பெயரிடப்பட்டது.


தியாகராய நகர் அன்று


மவுண்ட் ரோடு


நெடிதுயர்ந்த கட்டடங்களும், பரபரக்கும் வாகனங்களுமாக இன்றைக்குக் காட்சியளிக்கும் அண்ணா சாலை எனப்படும் மவுண்ட் ரோட்டில் ஒரு காலத்தில் தோட்டங்களுக்கு மத்தியில் அமைந்த வீடுகள் அமைந்திருந்தன. அப்போது மவுண்ட் ரோடு இன்றிருக்கும் வடிவத்தில் இல்லை. 1724-ல் சைதாப்பேட்டை மர்மலாங் பாலம் கட்டப்பட்ட பிறகு, மவுண்ட் ரோட்டின் தொடக்க கால வடிவம் உருப்பெறத் தொடங்கியது. சார்லஸ் மெக்கார்ட்னி என்பவர் சென்னையின் ஆளுநராக இருந்த காலகட்டத்தில் மவுண்ட் ரோடு சென்னையின் பிரதான சாலையாக பரிணமிக்கத் தொடங்கியது. சுமார் 12 கி.மீ நீளும் இந்த மவுண்ட் ரோடு, வணிக அலுவலகங்களும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களுமாக நிறைந்து இன்றைக்குச் சென்னையின் இதயமாக விளங்குகிறது. இந்திய தேசத்தின் நில அளவைப் பணிகள் 1802 ஏப்ரல் 10 அன்று, பிரிட்டிஷ் நில அளவையாளர் கார்டினல் வில்லியம் லாம்டனால் செயின்ட் தாமஸ் மவுண்ட்டில் இருந்துதான் தொடங்கப்பட்டது.


மவுண்ட் ரோடு


இடம், பொருள், ஆவல்: ஒரு சிப்பாய் மெட்ராஸின் கவர்னரான கதை!

எல்.ஐ.சி கட்டடம்


அந்தக் கால சினிமாக்களில் 'ஹீரோ சென்னைக்கு வந்துவிட்டார்' என்பதை உணர்த்த எல்.ஐ.சி கட்டடத்தையே காட்டுவார்கள். கட்டப்பட்ட காலத்தில் இந்தியாவின் உயரமான கட்டடம்; சென்னையின் முதல் வானளாவிய கட்டிடம்; நியூயார்க்கில் அமைந்திருக்கும் ஐ.நா சபை கட்டடத்தை மாதிரியாகக் கொண்டு உருவான கட்டிடம் எனப் பல பெருமைகளைத் தாங்கி நிற்கும் எல்.ஐ.சி. கட்டடம் மவுண்ட் ரோட்டில் 1959 ஆகஸ்ட் 23 அன்று திறக்கப்பட்டது. கட்டடங்களின் உயரம் 40 மீட்டர்களைத் தாண்டக் கூடாது என்ற கட்டுப்பாடு சென்னையில் நிலவிவந்த சூழலில், சென்னையின் தனித்த வானளாவியக் கட்டடமாக அதுவே கோலோச்சியது. முன்பு மெட்ராஸ் பப்ளிஷிங் ஹவுஸ் என்ற பதிப்பகம் இயங்கிவந்த இடத்தில் உருவான 14 மாடிகளைக் கொண்ட எல்.ஐ.சி., இன்றுவரை சென்னையின் பிரதான அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.


எல்.ஐ.சி


ஏ.வி.எம் ஸ்டுடியோ


70 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் உலகின் ஐந்து ஸ்டுடியோக்களில் ஒன்றாக ஏ.வி.எம். ஸ்டுடியோ திகழ்கிறது; இப்போதும் பயன்பாட்டில் உள்ள இந்தியாவின் பழைய சினிமா ஸ்டுடியோவும் இதுதான். 1946-ல் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரால் தொடங்கப்பட்ட இந்த ஏ.வி.எம். படத் தயாரிப்பு நிறுவனம், சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவின் பெருமிதமாகத் திகழ்கிறது. சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், வைஜெயந்தி மாலா, கமல் ஹாசன், ரஜினிகாந்த், ராஜ்குமார் என இந்திய சினிமாவின் முகங்களாக மாறிய கலைஞர்களை ஏ.வி.எம். அறிமுகப்படுத்தியது. ஏ.வி.எம். ஸ்டுடியோவின் வாசலில் நிற்கும் ஏ.வி.எம் உலக உருண்டையைச் சுற்றித்தான் தமிழ் சினிமா ஒரு காலத்தில் சுழன்றுகொண்டிருந்தது என்றால் அது மிகையல்ல!



ஏ.வி.எம் ஸ்டுடியோ