தனது மனைவி சுனந்தா புஷ்கர் தற்கொலை வழக்கில், சசி தரூர் விடுவிப்பு#iNDIA. 

2014ஆம் ஆண்டில் தனது மனைவி சுனந்தா புஷ்கர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், ஐ.நா முன்னாள் அதிகாரியுமான சசி தரூரின் மீது டெல்லி காவல்துறையினர் குற்றம்சாட்டியிருந்த வழக்கில் அவர் எல்லா குற்றச்சாட்டுகளில் இருந்தும் இன்று (2021, ஆகஸ்ட் 18) விடுவிக்கப்பட்டுள்ளார். டெல்லி சிறப்பு நீதிமன்றம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


வழக்கில் இருந்து தான் விடுவிக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சசி தரூர், "ஏழரை ஆண்டுகளாக நான் நரக வேதனையை அனுபவித்தேன். உங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் நீதிபதி அவர்களே," என்று தமது உணர்ச்சியை வெளிப்படுத்தினார்.


சுனந்தா புஷ்கரின் மரணம், தற்கொலையாக இருக்கலாம் என தொடக்கத்தில் கருதப்பட்டாலும், பின்னர் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால், சந்தேக நபர் என்று யாரையும் புலனாய்வுத்துறையினர் குறிப்பிடவில்லை.


இந்த நிலையில், 2014இல் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக சசி தரூர் மீது குற்றம்சாட்டிய டெல்லி காவல்துறை, தனது மனைவியை அவர் கொடுமைப்படுத்தியதாக குற்றப்பத்திரிகையில் கூறியிருந்தது.


ஆனால், தனக்கு எதிரான "அபத்தமான குற்றச்சாட்டுக்களை" "தீவிரமாக" எதிர்க்கப் போவதாக சஷி தரூர் கூறி வந்தார்.


இந்தியாவின் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரான சசி தரூர், துபாயைச் சேர்ந்த பெண் தொழில் அதிபரான சுனந்தா புஷ்கரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.


2014 ஜனவரி 17ஆம் தேதி டெல்லியின் பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சுனந்தா இறந்து கிடந்தார்.


தற்கொலை எண்ணத்துக்கான காரணம் என்ன- விடுபடுவது எப்படி?

தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதாக யாராவது சொன்னால் என்ன செய்வது?

அவரது மரணத்துக்கு சில நாட்களுக்கு முன்பு, சசி தரூர் பாகிஸ்தான ஊடகவியலாளர் மெஹர் தரார் என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாக, சசி தரூரின் ட்விட்டர் கணக்கில் இருந்தே தகவல்கள் பரவத்தொடங்கின. இந்தத் தகவல்களை தான் பிரசுரித்ததாக சுனந்தா ஒப்புக்கொண்டார். ஆனால், பின்னர் அதை அவர் மறுத்தார்.


இந்த நிலையில், சுனந்தா புஷ்கர் இறந்த பிறகு அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி புகார் தெரிவித்தார். பொதுவெளியிலும் தமது ட்விட்டர் பக்கம் வாயிலாகவும் சசி தரூரை சுப்பிரமணியன் சுவாமி பகிரங்கமாக குற்றம்சாட்டினார். டெல்லி காவல்துறை ஆணையருக்கும் இது தொடர்பாக அவர் கடிதங்களை அனுப்பினார்.


இந்த வழக்கில் மனைவியை துன்புறுத்தியதாகவும் தற்கொலைக்கு தூண்டியதாகவும் சசி தரூர் மீது டெல்லி காவல்துறையினர் 2014ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.


ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்

இந்த வழக்கு விசாரணையின்போது, சசி தரூர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகால் பாஹ்வா, "ஆரம்பத்தில் இருந்தே டெல்லி காவல்துறையினர் இந்த வழக்கில் தவறான தகவல்கள் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை ஜோடித்தனர்," என்று வாதிட்டார்.


சுனந்தா புஷ்கரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் சசி தரூர் என்றும் அவரை தற்கொலைக்கு தூண்டியது சசி தரூர் தான் என்பதையும் நிரூபிக்க காவல்துறையிடம் ஆதாரங்கள் இல்லை என்றும் அவரது சார்பில் வாதிடப்பட்டது.


சுனந்தா புஷ்கர் உயிரிழந்தபோது சசி தரூர் இந்திய மத்திய இணை அமைச்சராக இருந்தார்.அவருக்கு அரசு குடியிருப்பு ஒதுக்கப்பட தகுதி இருந்தபோதும், பல மாதங்களாக ஐந்து நட்சத்திர விடுதியில் தமது மனைவியுடன் சசி தரூர் தங்கியிருந்தார். அவர் அமைச்சராக பதவி வகித்த காலத்தில், ஆடம்பர செலவுக்கும் விருந்து நிகழ்ச்சிகளுக்கும் அரசு பணத்தை செலவிடுவதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், அவரது மனைவி இறந்த விவகாரத்தில் அவருக்கு காஃபியில் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் தகவல் பரவியது.


யார் இந்த சசி தரூர்?

சசி தரூர்


லண்டனில் பிறந்து இந்தியாவில் வளர்ந்தவர் சசி தரூர். 1956ஆம் ஆண்டு, மார்ச் 9ஆம் தேதி பிறந்த இவர், டெல்லி செயின்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பும், அமெரிக்காவின் டஃப்ட்ஸ் பல்கலையில் சர்வதேச விவகாரங்கள் துறையில் மேல்படிப்பையும் முடித்தவர். அந்த காலகட்டத்தில் 22 வயதில் இந்த துறையில் மேல்படிப்பை முடித்த இளம் நபராக சசி தரூர் அறியப்பட்டார்.


1978இல் ஐ.நா அவையில் சேர்ந்த அவர், 2007ஆம் ஆண்டுவரை அதில் சேவையாற்றினார். கடைசியாக அவர் அங்கு உதவிச்செயலாளர் பதவியில் மக்கள் தகவல் தொடர்புப் பணியை கவனித்தார். 2006ஆம் ஆண்டில் ஐ.நா பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடந்தபோது, அதில் போட்டியிடுவதற்காக தமது ஐ.நா பணியில் இருந்து விலகினார் சசி தரூர்.


மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, இந்தியர் என்பதால் சசி தரூரை இந்தியா ஆதரித்தது. ஆனால், போதிய ஆதரவு இல்லாததால், போட்டியில் இரண்டாம் நிலையில் இருந்த சசி தரூர் பின் வாங்கினார்.


இதைத்தொடர்ந்து தாயகம் திரும்பிய அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2009 மக்களவை தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தது. அதில் அவர் வெற்றி பெற்றார். தொடர்ந்து 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தல்களிலும் அவர் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


19 புத்தகங்களின் எழுத்தாளர்

சசி தரூர், நுனிநாக்கில் ஆங்கிலப்புலமையும், பிறர் டிக்ஷனரியை வைத்துத் தேடிப் படித்தாலும் அர்த்தம் சரியாகக் கிடைக்காத வகையில் அதீத ஆங்கில உச்சரிப்பு வார்த்தை ஜாலத்தையும் கொண்டவர். தனது தாய்மொழியான மலையாளத்தை விட ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தியில் பேச்சாற்றல் மிக்கவர் சசி தரூர்.


அவர் இந்தியா தொடர்புடைய வரலாறு, கலாசாரம், வெளியுறவுக் கொள்கை உள்ளிட்டவை தொடர்புடைய 19 புத்தகங்களை எழுதியிருக்கிறார். பல்வேறு வெளிநாட்டு நாளிதழ்களிலும் கட்டுரையாளராக தமது எழுத்துத் திறனை வெளிப்படுத்தி வருபவர்.


தனி வாழ்வில் எப்படி?


சசி தரூரின் முதல் மனைவியின் பெயர் திலோத்தமா முகர்ஜி. அவரது பெற்றோரில் ஒருவர் வங்கமொழி பேசுபவர், மற்றொருவர் காஷ்மீரி. கல்லூரி காலத்தில் திலோத்தமாவும் சசி தரூரும் இணை பிரியாக காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். இந்த ஜோடி 1981இல் திருமணம் செய்து கொண்டனர்.


திருமணத்துக்குப் பிறகு சசி தரூரின் கடைசி பெயரை தமது பெயருடன் திலோத்தமா இணைத்துக் கொண்டு திலோத்தமா தரூர் என தன்னை அழைத்துக் கொண்டார்.


இந்த தம்பதிக்கு கனிக்ஷ், இஷான் என்ற இரட்டையர் 1984இல் பிறந்தனர். இதில் இஷான் தற்போது வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் வெளிவிவகாரங்கள் எழுத்தாளராக பணியாற்றுகிறார். கனிஷ்க், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மனிதாபிமானப்பிரிவு பேராசிரியர் ஆக இருக்கிறார்.


திலோத்தமாவுடனான திருமண உறவை 2007இல் முறித்துக் கொண்ட சசி தரூர், தன்னுடன் ஐ.நா அவையில் பணியாற்றி வந்த கிறிஸ்டா கைல்ஸை சசி தரூர் திருமணம் செய்து கொண்டார். அவர் கனடாவைச் சேர்ந்தவர்.


ஆனால், ஐ.நா அவை பொதுச் செயலாளர் தேர்தலில் தமக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்காதால் இந்தியா திரும்ப திட்டமிட்டிருந்த சசி தரூர், விரைவாகவே கிறிஸ்டாவை விவாகரத்து செய்தார்.


இதைத்தொடர்ந்து இந்தியா வந்த அவருக்கு தொழிலதிபரான சுனந்தா புஷ்கருடன் தொடர்பு ஏற்பட்டது. திருமணமாகாமல் இருவரும் இணைந்து வாழ்ந்தது அவரது அரசியல் வாழ்க்கையில் சர்ச்சையாக பேசப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 2010ஆம் ஆண்டில் தமது மூதாதையர் வாழ்ந்த கேரளாவின் எலவஞ்சேரி கிராமத்தில் சுனந்தா புஷ்கரை சசி தரூர் திருமணம் செய்து கொண்டார்.


ஜனவரி 16, 2014 அன்று, சுனிந்தா புஷ்கர் மற்றும் பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹர் தாரர் ஆகியோர் சசி தரூருடனான உறவு தொடர்பாக அவரவர் ட்விட்டரில் பக்கங்கள் வாயிலாக மோதிக் கொண்டனர்.


மெஹரை ஐஎஸ்ஐ முகவர் என்றும் தன்னை பின்தொடர்ந்ததாகவும் சுனந்தா குற்றம்சாட்டினார். அவரது குற்றச்சாட்டுகளை 'அபத்தமானது' என்று மெஹர் மறுத்தார். சில மணி நேரங்களில், சுனந்தாவின் சமூக ஊடக பக்கத்தில் இருந்து அந்த ட்வீட்கள் நீக்கப்பட்டன. அதற்கு மறுநாளே டெல்லி சாணக்கியபுரியில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் மர்மமான முறையில் சுனந்தா இறந்து கிடந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, எய்ம்ஸில் அவரது உடல்கூராய்வுக் குழுவில் இடம்பெற்ற மருத்துவர்கள், இது திடீர், இயற்கைக்கு மாறான மரணம் என்று தோன்றுகிறது. அவரது உடலில் காயத்தின் அடையாளங்கள் இருந்தன மற்றும் அவளது வயிற்றில் அழுத்தத்தில் இருந்து விடுபடும் மருந்து கலந்திருப்பதற்கான தடயங்கள் காணப்படுவதாக சந்தேகம் எழுப்பினர். இந்த வழக்கு டெல்லி காவல்துறையின் தனிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதேவேளை எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் குப்தா பிரேத பரிசோதனை அறிக்கையை கையாளுவதற்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறினார். இதையடுத்து இந்த வழக்கு பரவலான கவனத்தை பெற்றது.


புஷ்கரின் உடலில் பதினைந்து இடங்களில் காயங்கள் இருந்ததாக சுதிர் குப்தா கூறினார், பெரும்பாலானவை மரணத்திற்கு பங்களிக்கவில்லை. ஆனால், ஒரு ஊசி போட்ட அறிகுறி மற்றும் சில கடித்த அடையாளங்கள் சந்தேகத்தைத் தூண்டியது. அவளது வயிற்றில் அதிக அளவு அல்பிரஸோலம் மருந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லி காவல்துறையின் அப்போதைய ஆணையராக இருந்த பி.எஸ்.பஸ்ஸி புஷ்கர் தற்கொலை செய்யவில்லை, ஆனால் கொலை செய்யப்பட்டதாக தோன்றுகிறது என்றார். அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்தது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி.


இதற்கிடையில், சுனந்தாவின் உள்ளுறுப்பு மாதிரிகள் பரிசோதனைக்காக வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்டன. அந்த மாதிரிகள், அனுமதிக்கப்பட்ட அளவில்தான் உறுப்புகளில் கதிர்வீச்சு இருந்துள்ளது. அது சுனந்தாவின் மரணத்தை ஏற்படுத்தவில்லை என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃபிஐயின் தடயவியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.


இப்படிச்சென்ற வழக்கின் போக்கு, தற்போது சுனந்தா புஷ்கரின் மரணத்தில் சசி தரூருக்கு தொடர்பு இல்லை எனக் கூறி அவரை விசாரணை நீதிமன்றம் விடுவிக்க வழிவகுத்துள்ளது.