இலங்கை அரசு மகிழ்ச்சி,தாலிபன்களின் சில அறிவிப்புகளுக்கு


 


தாலிபன்களின் சில அறிவிப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது. அந்த உறுதிப்பாட்டை தொடர்ந்தும் மதிக்குமாறும் தாலிபன்களை இலங்கை அரசு வலியுறுத்தியுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆட்சியை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்து ஓரிரு தினங்களில் இலங்கை அரசாங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.


பயங்கரவாதிகளுக்கு தாலிபன்கள், ஒரு மத்திய நிலையமாக இருப்பார்களாயினும், அதனை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.


இலங்கை வெளியுறவு அமைச்சகம் கூறியது என்ன?

தாலிபன்கள் பொதுமன்னிப்பு வழங்கியிருப்பதுடன், எந்த வெளிநாட்டினருக்கும் தீங்கு செய்ய மாட்டோம் என உறுதியளித்துள்ளமை குறித்து இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.


அதே வேளை, அந்த உறுதிப்பாட்டை தொடர்ந்தும் மதிக்குமாறு தாலிபன்களை இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொள்கின்றது என வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புத்தர் சிலையை உடைத்த தாலிபன் ஆட்சியை இலங்கை ஏற்கக்கூடாது - ரணில் விக்ரமசிங்க

தாலிபன்களின் ஆயுதங்கள் என்னென்ன? எங்கிருந்து கிடைத்தன? ராணுவம் அஞ்சியது ஏன்?

இஸ்லாமியப் பாரம்பரியத்தைப் பின்பற்றி ஆப்கானிஸ்தானில் பெண்கள் தொழில்களில் ஈடுபடலாம் மற்றும் பெண்கள் பாடசாலைகளுக்குச் செல்லலாம் என தாலிபன்கள் அளித்த உறுதிமொழி தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது.


இதேவேளை, ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து தாம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.


ஆப்கானிஸ்தானின் முன்னேற்றங்களை தாம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றதாகவும் இலங்கை கூறியுள்ளது.


இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்


ஆப்கானிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு மீள அழைத்து வருவதே தமது முதன்மையான கவலை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.


ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்கள் அங்கிருந்து வெளியேற விரும்பினால், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு அமெரிக்கா, ஐக்கிய பிரிட்டன், இந்தியா, பாகிஸ்தான் அரசாங்கங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு வெளிநாட்டு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உரிய தரப்பினரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதற்கான அனைத்து வசதிகளையும் வழங்க இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.


ஆப்கானிஸ்தான் தோல்வியால் வல்லரசு பட்டத்தை இழக்கிறதா அமெரிக்கா?

ஆஃப்கனில் அஞ்சி நடுங்கும் ஒருபாலுறவினர் - 'தாலிபனால் கண்ட இடத்திலேயே கொல்லப்படுவேன்'

ஆப்கானிஸ்தானில் மொத்தமாக 86 இலங்கையர்கள் உள்ளதாகவும், அவர்களில் 46 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.


அத்துடன், தற்போதைய நிலவரப்படி, 20 இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ளதுடன், வெளிநாட்டு அமைச்சு அவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.


இதற்கிடையில், 20 இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானில் தங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறுகின்றது