அம்பாரை மாவட்டத்தில், கட்டட நிர்மாணப் பொருட்கள் அனைத்தும் உச்ச விலையில்


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


கட்டிட நிர்மாணப் பொருட்கள் அனைத்தும்  கல்முனை மாநகர சபை எல்லையினுள்  நிர்ணய விலையில்  விற்பனை செய்யப்படாமையினால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

கொரோனா நிலைமையினால்  அசாதார சூழ்நிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கட்டிட நிர்மாணப் பொருட்களுக்கு என்றுமில்லாதவாறு திடீரென கடுமையான விலையேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி சிமேந்து ஒரு பக்கெட் 920 முதல் விற்பனை செய்யப்பட்ட நிலையில் செயற்கை தட்டுப்பாட்டினை சிலர் மேற்கொண்டு ரூபா 1200 முதல் 1650 வரை விற்பனை செய்துள்ளனர்.இது தவிர கம்பி வகைகளுக்கு கூட சாதாரணமாக ருபா 750 க்கு விற்பனை செய்து வந்த கம்பிகள் யாவும் 1000 முதல் 1150 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதை காணமுடிந்தது.

இவ்விடயம் தொடர்பாக  கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில்   இடம்பெற்ற மாநகர சபையின் பொறியியல், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் வருமான பரிசோதகர்களுடனான விசேட கலந்துரையாடலின்போது இவ்விடயம் குறித்து கூடிய அவதானம் செலுத்தப்பட்டு, மக்களுக்கு நிர்ணய விலையில் கட்டிட நிர்மாணப் பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
 
 
மேலும் இது பற்றி ஆராய்ந்தபோது,  இந்த விலையேற்றமானது அரசாங்கத்தின் அனுமதியுடன் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறித்த பொருட்களை விநியோகிக்கும் தரகர்களே தன்னிச்சையாக விலையேற்றம் செய்து,  கொள்ளை இலாபம் ஈட்டுகின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், அம்பாறை மாவட்ட கச்சேரியின் கட்டிட நிர்மாணப் பொருட்களுக்கான விலை நிர்ணயக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற நிர்ணய விலைக்கே கல்முனை மாநகர சபை எல்லையினுள் செங்கல், முண்டுக்கல், முக்கால் இஞ்சிக்கல், கட்டு மண், பூச்சு மண், அத்திவாரம் நிரப்பும், கிறவல் போன்றவை விற்பனை செய்யப்பட வேண்டும் என கல்முனை மாநகர சபையினால் கண்டிப்பான உத்தரவு விடுக்கப்படுகிறது.

அவ்வாறே சீமெந்து மற்றும் கம்பி போன்றவை உரிய கம்பனிகளால் குறிக்கப்பட்ட நிர்ணய விலைகளுக்கே விற்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்படுகிறது.

அதேவேளை, இப்பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் கட்டாயம் பற்றுச்சீட்டு வழங்க வேண்டும். நுகர்வோர் கட்டாயம் இப்பற்றுச்சீட்டைப் பெற்றுக் கொண்டே, குறித்த பொருட்களை பொறுப்பேற்றுச் செல்ல வேண்டும். பற்றுச்சீட்டு இல்லாமல் வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பொருட்கள், மாநகர சபையின் வருமானப் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்படும்.

மேலும், கட்டிட நிர்மாணப் பொருட்களை விநியோகிக்கும் தரகர்களும் வாகனங்களும் கல்முனை மாநகர சபையில் பதிவு செய்யப்பட்டு, அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் உரிய வாகனங்கள் கல்முனை மாநகர சபை எல்லையினுள் உட்பிரவேசிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மாநகர சபையின் உரிய கள உத்தியோகத்தர்களிடம் கட்டணம் செலுத்தி, பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.

பதிவு செய்யப்படாத வாகனங்களில் கொண்டு வரப்படும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு, சம்மந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறே பதிவு செய்யபடாத தரகர்கள் யாராவது கல்முனை மாநகர சபை எல்லையினுள் வியாபாரத்தில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகர சபையின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்களினால் இவ்வாகனங்களின் கொள்ளளவு அளவீடு செய்யப்பட்டு, குறித்த வாகனங்களில் காட்சிப்படுத்தப்படும். இக்கொள்ளளவுக்கு ஏற்பவே கல், மணல், கிறவல் போன்றவற்றின் விலைகளும் நிர்ணயிக்கப்படும்.

கட்டிட நிர்மாணப் பொருட்கள் எதுவாயினும் அவற்றை பதுக்கி வைப்பதும் நிர்ணய விலைக்கு மேலதிகமாக விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டால், நுகர்வோர் அதிகார சபையும் மாநகர சபையும் இணைந்து பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் சம்மந்தப்பட்டோரைக் கைது, சட்ட நடவடிக்கைக்குட்படுத்தி, அதிகபட்ச தண்டப்பணம் விதிக்கப்படும்.

அதேவேளை, உள்ளூரில் சீமெந்து பக்கட் ஒன்றை வாகனத்தில் ஏற்றிச் செல்வதற்கான அதிகபட்ச கூலியாக 30 ரூபா மாத்திரமே அறவீடு செய்யப்பட வேண்டும். மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகர சபை எச்சரிக்கை விடுக்கின்றது.அத்துடன் கல்முனை மாநகர சபை எல்லையினுள் கட்டிட நிர்மாணப் பொருட்கள் அனைத்தும்இ நிர்ணய விலையிலேயே விற்கப்பட வேண்டும் எனவும் மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகர சபை அறிவித்துள்ளது.