Showing posts with label Sri lanka crime. Show all posts

 


கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் ஆகுரோயா ஆற்றில் காணாமல் போயிருந்த மாணவனை இன்று (14) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




நேற்று (13) நண்பகல் சுமார் 12.30 மணியளவில், பாடசாலையில் நடைபெற்ற பரீட்சையை எழுதி முடித்த 10 மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறி, ஓல்ரிம் பகுதியின் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் ஆகுரோயா ஆற்றில் நீராடச் சென்றுள்ளனர்.




இதன்போது, மாணவர்களில் ஒன்பது பேர் பாதுகாப்பாக கரை திரும்பிய நிலையில், ஒரே மாணவன் மட்டும் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டு நீரில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




இதனை தொடர்ந்து தீவிரமாகத் தேடியும் மாணவனின் உடலை நேற்று (13) கண்டறிய முடியவில்லை போதிய வெளிச்சம் இல்லாததால் இரவு தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று (14) நுவரெலியா பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதல் நடவடிக்கைகளின்போது காணாமல் போயிருந்த மாணவன் சடலமா மீட்கப்பட்டுள்ளார்.




இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவன் லிந்துலை பாடசாலையில் கல்வி கற்கும் மிளகுசேனை தோட்டத்தைச் சேர்ந்த பரமநாதன் கிஷோர் (15 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.




லிந்துலை திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தைப் பார்வையிட்டதன் பின்னர் மேற்படி சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 



அரச முறைப் பேருந்தில், பயணிகள் பயணத்தை பாதியிலே நிறுத்த வேண்டிய நிர்க்கதி தொடர்கின்றது.

கிழக்கில் பாவனையில் உள்ள பல பேருந்துகள், பயணிப்பதற்கு உகந்ததல்ல. மிகவும் பழமையானவை. பாரமரிக்கப்படுவதுமில்லை. பராமரித்தாலும் பலகாலம் சேவைக்கிட முடியாத நிலையில், உள்ளது.

இன்று காலை 6.45க்கு பொத்துவில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த அரசு முறை பேருந்து அக்கரைப்பற்று பகுதியில் வைத்து  பழுதடைந்ததால் பாதியில் பயணம் தடைப்பட்டு போனது.

 குறிப்பிட்ட இந்த பேருந்து, செயலிழந்தால், பள்ளி மாணவர்களும், அலுவலகப் பணியாளர்ககும், பொதுபயணிகளும் பல்வேறுபட்ட  சிரமங்களை  எதிர்கொள்ள நேரிட்டது.

கடந்த வாரம் மட்டக்களப்பிலிருந்து, வெளிச் சென்ற பேருந்தும் இடை நடுவில் பயணத்தை நிறுத்தியது

 கிழக்கு மாகாணம் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்தெடுக்கும் பிரதேசமாகும் இங்கு முறையான உயர்தரத்திலாலான புதிய சாலை பேருந்துகள் காணப்படுமாயின் பொத்துவில் முதல் திருமலை வரையிலான உள்நாட்டு பயணிகளிடன் சேர்த்து உல்லாச பயணிகளும் பெரிதும் அரச பேருந்து சேவையை  அதிகம் நாடி செல்லக்கூடிய வாய்ப்புகள் கிட்டும்.

இதனால் வருமானமும் பன்மடங்காக அதிகரிக்கப்படும் ஆனால் உண்மை நிலை வருந்தத்தக்கது. புராதனம் வாய்ந்த பேருந்துகளே பொதுப் போக்குவரத்து சேவையில், ஈடுபட்டு வருவதை பார்க்க முடிகிறது 

ஜனாதிபதி வினைத்திறனான பொதுப் போக்குவரத்துப் பற்றிப் பேசுகின்றார்.ஆனால், அவரது கருத்துக்கள் செயல் வடிவம் பெறுவதில்லை.


 


கட்டாரின் முன்னாள் மன்னர் (அமீர்) ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி தனது 74ஆவது வயதில் காலமானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.


அவரது மறைவால் கட்டார் நாடு பெரும் இழப்பை சந்தித்துள்ளதாகவும், அவரது ஆன்மாவுக்கு இறைவன் கருணை புரிய வேண்டும் எனவும் அமிரி திவான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி 1995 முதல் 2013 வரை கட்டாரின் அமீராக பதவி வகித்ததுடன், நாட்டின் நவீன வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


இன்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. 


. ஒட்டோ டீசல் விலை ரூ. 25 குறைந்து ரூ. 382 ஆகவும், பெட்ரோல் ஒக்டேன் 92 விலை லிட்டருக்கு ரூ. 20 குறைந்து ரூ. 414 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மற்ற வகை எரிபொருள்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை .


நூருல் ஹுதா உமர்

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் நீண்டகால தேவையாக இருந்து வந்த நவீன விஞ்ஞான ஆய்வுகூடம், நேற்று திறந்து வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம். றிஷாத் அவர்களின் தொலைநோக்குப் பார்வை, அயராத முயற்சி மற்றும் அர்ப்பணிப்புமிக்க தலைமையின் பலனாக இந்த முயற்சி வெற்றியளித்துள்ளது.

அதிபர் ஏ.ஜி.எம். றிஷாத் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில், கல்முனை கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கான பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எச். றியாஸா பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆய்வுகூடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

நிகழ்வில் விஞ்ஞானப் பாட ஆசிரிய ஆலோசகர் ஏ.ஜி.எம். ஜுலூல், பகுதித் தலைவர் இசட்.எம். நூறுல் அமீன், விஞ்ஞானப் பாட ஆசிரியை திருமதி மஜீட், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

ஆய்வுகூடத்தை நவீன வசதிகளுடன் உருவாக்குவதற்கு தேவையான உபகரணங்களை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை திட்டமிடல் பணிப்பாளர் டாக்டர் எம்.சி.எம். மாஹிர் மற்றும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் ஆகியோர் வழங்கி வைத்திருந்தனர்.

மேலும், அட்டாளைச்சேனை மற்றும் மட்டக்களப்பு கல்வியியற் கல்லூரிகளின் கட்டுறுப் பயிற்சி ஆசிரியப் பயிலுநர்களான எம்.எஸ்.எம். ஹப்ஸான், எம்.எம். மஃப்ஷான், ஜே.எச். ரிலா, ஏ.எச்.எம். ஷிமான், கதீஸா உம்மா மற்றும் ஏ.எஸ்.எப். ரிஸ்கா ஆகியோரின் அர்ப்பணிப்பான பங்களிப்பும் ஆய்வுகூடத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் விஞ்ஞான சுய ஆக்கங்கள் மற்றும் காட்சிப்படுத்தல்களும் இடம்பெற்றது.

 தலைநகர் டில்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மாலை 7.12 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 4.4 ஆகப் பதிவாகியுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நில அதிர்வுகளை உணர்ந்தவுடன், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர்.



சில வினாடிகள் நீடித்த இந்த அதிர்வுகள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ அல்லது பெரிய அளவிலான சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. டெல்லி மட்டுமின்றி ஜம்மு காஷ்மீர் மற்றும் மேலும் சில வட மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

(வி.ரி.சகாதேவராஜா)


சித்தர்களின் குரல்  கதிர்காம ஆயிரம் வேல் யாத்திரை எதிர்வரும் ஜூலை 10ம் திகதி வெள்ளிக்கிழமை உகந்தை மலையில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகும் 
என சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகதலைவர் சிவசங்கர் ஜீ உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

 
மேலும், இக் கதிர்காமத்திற்கான கானக வேல் யாத்திரை ஜூலை 15ம் திகதி புதன்கிழமை கதிர்காமத்தை சென்றடையும் என்பதையும் அதிகார பூர்வமாக அறிவித்தார்.

அதற்கு முன்னதாக, பாரம்பரிய முறைப்படி குறித்த வேல் யாத்திரை வேலோடுமலையில் இருந்து ஜுலை 02 ஆம் திகதி வேலோடுமலை முருகன் கோவில் ஆதீனகர்த்தா முருக பக்தர் தியாகராஜ சுவாமிகள் தலைமையில் சில பக்தர்களுடன் ஆரம்பமாகவுள்ளது.

எனினும் , அனைத்து அடியார்களும் கலந்து கொள்ளும் கானக வேல் யாத்திரை ஜுலை 10 ஆம் திகதி உகந்தமலை முருகன் கோவிலில் இருந்து தலைவர் சிவசங்கர் ஜீ தலைமையில் ஆரம்பமாகும்.

மகிமைகள் பொருந்திய இவ்வருட 2026 கதிர்காம ஆடி வேல் விழா உற்சவம் ஜூலை 15ம் திகதி புதன்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பிக்கப்பட்டு 30 ஆம் திகதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.

இது தொடர்பாக சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகதலைவர் சிவசங்கர் ஜீ மேலும் கூறுகையில்..

இலங்கை ஒரு பொக்கிஷ புண்ணிய பூமி. போகர் தொடங்கி இமயமலை கிரியா பாபாஜி வரை எத்தனையோ பல்லாயிரம் சித்த ரிஷிகள், யோகிகள், ஞானிகள் அவர்கள் கால் தேயத் தேய முருகனை தரிசிக்க நடந்த பாதை கதிர்காம பாத யாத்திரை.

குறித்த காட்டுப்பாதை.
 ஒவ்வொரு வருடமும் கதிர்காம திருவிழா காலங்களில் 15 நாட்கள் மட்டும் திறக்கப்படும். 

ஆதியில் நடந்த சித்த பெரு மக்கள் இங்கே ஆறு இடங்களில் தங்கி ஆறு வகையான சக்திகளை வனத்தில் விட்டு சென்றுள்ளார்கள் என வரலாறுகள், நம் முன்னோர்கள் சொல்கிறார்கள்.

முதல் நாள் தங்கும் "வண்ணாத்தி வெட்டை" என்ற கிணத்தடியில் "கருப்பண்ண சாமி" என்ற பாலாவடி கறுப்பையும், இரண்டாவது நாள் தங்கும் "குமுக்கன் ஆற்றங்கரையில்" வன தேவதைகளான "காளி" சக்திகளையும், மூன்றாவது நாள் தங்கும் அமானுஷ்ய பூமியான "நாவலடி" வனத்தில் பாதாள "பைரவ" சக்திகளையும்,
நான்காவது நாள் தங்கும் "யாள" ஆற்றங்கரையில் "நாக" சக்திகளையும்,"
ஐந்தாவது நாள் தங்கும் "வள்ளியாற்று" பாலத்தில் "ஜல தேவதையின்" சக்திகளையும் கடந்து,
ஆறாவது நாள் கதிர்காம மண்ணை அடைய நமக்குள் உள்ள "ஆறு ஆதார சக்கரங்களும் உயிர் பெற்று" மிக பெரிய யோகியாக உங்கள் உடல் மனம் உருவாகும்.

இதுதான் இந்த பாத யாத்திரையின் மூல ரகசியம்.ஒவ்வொரு காடுகளையும் கடக்கும் போதும், ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு இடத்திலும் தங்கும் போதும், அங்குள்ள பிரபஞ்ச சக்தி, தேவதா சக்தி நம் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும். முறையாக இந்த ரகசியங்களை எல்லாம் உணர்ந்து பயணியுங்கள்.
இது சுற்றுலா பாதை அல்ல..
நம்மை முழுமைப்படுத்தும் ஒரு பூரண யாத்திரை.
               
                  அனைத்து ஏற்பாடுகளும் சித்தர்களின் குரல் அமைப்பின் அன்பர்களினால் முன்னெடுக்க படுகிறது....
        ஆயிரம் பேருடன்,
        ஆயிரம் வேல்களுடன்,
        வேல் யாத்திரையாக.....
அனைத்து நாட்களும் எங்கள் சித்தர்களின் குரல் சமஸ்தான நளபாக சக்கரவத்திகளினால் மூன்று வேளையும் சாத்வீக உணவும், இரண்டு வேளையும் வழங்கப்பட இருக்கிறது.
தினமும் ஒவ்வொரு இடங்களிலும்,
சக்தி வாய்ந்த வேல் பூஜை,அபூர்வ வன மூலிகைகளினால் சர்வ வல்லமை வாய்ந்த 210  சித்தர்கள் வேள்வி, வன பூஜை, வன போஜனம்,மூலிகை குளியல்,ஒரு கோடி சண்முக பஞ்சாட்சர ஜெபம், கூட்டு வழிபாடுகள், நமது கர்ம வினைகளை கரைக்கும் அற்புதமான தியானங்கள், திருப்புகழ் பாராயணங்கள் என தொடரும்.
எங்களுடன் பயணிப்பவர்கள் ஜூலை 10ம் திகதி காலைக்குள் உகந்தைக்கு வரவும்.
இது சுற்றுலா பாதை அல்ல.. இறைவனே இயற்கையை நோக்கி நம்மை அழைத்து செல்லும் ஒரு புதுமையான ஆன்மீக யாத்திரை, பக்தி கலாச்சார  நெறிகளை கடைப்பிடிக்கவும்.அனைவரும் கட்டாயம் ஆறு நாட்களும் காவி உடையிலேயே வர வேண்டும்.பயணத்தின் வரும் அனைவர்க்கும் இரண்டு வேளை தேநீர், மூன்று வேளையும் அற்புதமான உணவு வழங்கப்படும்.
    (விரும்பியவர்கள் அன்னதானத்திற்கு விரும்பிய உதவிகளை செய்யலாம்)
வங்கி கணக்கு இலக்கம்:-
Nations trust bank (NTB)
V.Maheshwaran
Sithargalin kural patha yathra
Account No:- 200370056496   
Kalmunai branch
ஆறு நாட்களும் சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள் வேள்வி, "ஒரு கோடி சுப்பிரமணிய பஞ்சாட்சர ஜெபம்", ஆழ்நிலை தியானம்,  தினமும் அற்புதமான ஆன்மீக அறிஞர்களின் சொற்பொழிவு என ஒரு உயர்த்த பக்தி நிலைக்கு அழைத்து செல்லும் பயணம் இது.
அனைவரும் உங்களுக்குரிய  வேல், ஜெபமாலை, பிளேட், டம்ளர், அமர இரண்டு மீட்டர் பொலித்தீன் க்ளோத் என்பவற்றை கட்டாயம் கொண்டு வரவும்.

மேலதிக தகவல்களுக்கு:
தலைவர்: வேலோடு மலை வேல்சாமி தியாகராஜா ஐயா (+94 77 962 2206)
செயலாளர்: அருள் வரதன் ஐயா (+94 71 418 2513)
பொருளாளர்: வரதகணேஷ் ஐயா (+94 75 735 3626)
போசகர்: நமசிவாய சுவாமிகள் (+94 77 639 2368)
ஆலோசகர்; விபுலமாமணி சகாதேவராஜா ஐயா (+94 77 696 5343) ஆகியோரோடு தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

 


பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக  சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.


அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகரப்பகுதி உட்பட புறநகர் பகுதிகளில் இன்று(20) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


இதன் போது மோட்டார் சைக்கிள் ஆவணம் காப்புறுதி எதுவும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்துவது, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது  தலைக்கவசம் அணியாது செல்வது , ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது , அதிவேகமாக செல்வது ,மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் தலைக்கவசம் இன்றியும் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இன்றி பயணித்தமை  உள்ளிட்ட பொது போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 33 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் உட்பட அதனை ஓட்டிய சந்தேக நபர்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.


 

சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய  பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.


மேலும் இச்சோதனை நடவடிக்கையானது  கிழக்குப் பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேத முல்லவின் பணிப்புரைகமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி நெறிப்படுத்தலில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசார்  வழிகாட்டுதலில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்  டி.எஸ்.இந்திக தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.


அத்துடன் இவ் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரைகள் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழங்கியதுடன் சட்ட நடவடிக்கைகாக கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.


குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பல்வேறு பிரிவில் உள்ள பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



 பாறுக் ஷிஹான்

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.


பெறுபேறுகள் தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


இம்முறை அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி பெற்றவர்களின் எண்ணிக்கை 11,790 என குறிப்பிட்டார். 


மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களில் சித்தியடைந்த மாணவர்களின் வீதம் அதிகரித்துள்ளனர்.


அதனடிப்படையில், விஞ்ஞானத்தில் 70.1% மற்றும் கணிதத்தில் 72.03% மாணவர்கள் சித்தியடைந்துள்ளனரென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


 


ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பையில் இந்தியாவின் சீனியர் அணி விளையாடுவதைக் காண வேண்டும் என்ற இந்திய கால்பந்து ரசிகர்களின் கனவு இந்த முறை நிறைவேறவில்லை.


இருப்பினும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சில வீரர்கள் இந்த ஆண்டு உலகக் கோப்பையில் களம் இறங்குகிறார்கள்.


ஜூன் 11 அன்று தொடங்கிய இந்தத் தொடரை மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன, மேலும் இந்த முறை 48 நாடுகள் இதில் பங்கேற்றுள்ளன.


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு கால்பந்து வீரர்கள், பல்வேறு நாடுகளின் அணிகளில் விளையாடுவதைக் காணலாம்.


2006-ல் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பையில் பிரான்ஸ் அணிக்காக விளையாடிய முதல் இந்திய வம்சாவளி வீரர் என்ற பெருமையை விகாஷ் தோரசூ பெற்றார். ஆனால், அவரது சர்வதேச கால்பந்து செயல்பாடு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.


இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர்களான சர்பிரீத் சிங் (நியூசிலாந்து), நிஷான் வேலுப்பிள்ளை (ஆஸ்திரேலியா), தஹ்சீன் முகமது ஜம்ஷெத் (கத்தார்) மற்றும் சாமுவேல் முத்துசாமி (டிஆர் காங்கோ) ஆகியோர் உலகக் கோப்பையில் விளையாடுவதை இந்திய ரசிகர்கள் காண உள்ளனர்.


இந்த நால்வர் யார் என்று தெரிந்துகொள்வோம்.


சர்ப்ரீத் சிங் – நியூசிலாந்து

சர்பிரீத் 

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சர்பிரீத் நியூசிலாந்து அணிக்காக 24 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி மூன்று கோல்களை அடித்துள்ளார்.

1999 இல் ஆக்லாந்தில் பிறந்த சர்பிரீத், நியூசிலாந்து கால்பந்து அணியின் மிட்ஃபீல்டர் ஆவார்.


இவரது பெற்றோர் பஞ்சாபிலிருந்து நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தனர். இவருக்கு ஒரு மூத்த சகோதரனும் ஒரு சகோதரியும் உள்ளனர். இவர்களது குடும்பம் நியூசிலாந்தில் ஒரு மளிகைக் கடையை நடத்தி வந்தது.


சர்பிரீத் சிறுவயதில் பல விளையாட்டுகளை விளையாடினார், ஆனால் கால்பந்து தான் அவரது முதல் விருப்பமாக இருந்தது. 2015 இல், தனது 16 ஆவது வயதில், வெலிங்டன் பீனிக்ஸ் கால்பந்து கிளப்புக்காக சீனியர் பிரிவில் அறிமுகமானார்.


2018 ஆம் ஆண்டில், மும்பையில் நடந்த இன்டர்காண்டினென்டல் கோப்பையில் நியூசிலாந்து சீனியர் தேசிய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பைப் பெற்றார் சர்பிரீத் .


அந்தத் தொடரில் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணியை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தது. சர்பிரீத் அந்த இரண்டு கோல்களுக்கும் உதவினார் .


ஒரு வருடம் கழித்து, 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு, ஜெர்மனியின் பேயர்ன் முனிச் அணியின் திறனாய்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.


விரைவில் அவர் ஜெர்மனியின் உயர்மட்ட கால்பந்து லீக் ஆன பன்டெஸ்லிகாவில் பேயர்ன் முனிச் அணிக்காக அறிமுகமாகும் வாய்ப்பைப் பெற்றார்.


பன்டெஸ்லிகாவில் விளையாடிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் வீரர் என்ற பெருமையை சர்பிரீத் பெற்றார். அதைத் தொடர்ந்து அவர் ஐரோப்பிய கால்பந்து லீக்குகளில் உள்ள பல கிளப்புகளுக்காக விளையாடினார்.


தற்போது 27 வயதாகும் சர்பிரீத், நியூசிலாந்துக்காக 24 சர்வதேச போட்டிகளில் விளையாடி மூன்று கோல்களை அடித்துள்ளார். மேலும் கிளப் கால்பந்திலும் 34 கோல்களை அடித்துள்ளார்.


தஹ்சீன் முகமது ஜம்ஷெட் - கத்தார்

தஹ்சீன்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,தஹ்சீன், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2026 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் அறிமுகமானார்.

ஜூன் 16 அன்று 20 வயதை எட்டிய தஹ்சீன் முகமது ஜம்ஷெத், இந்த ஆண்டு உலகக் கோப்பையில் கத்தாருக்காக விங்கராக விளையாடவுள்ளார்.


தஹ்சீனின் தந்தை ஜம்ஷெத், கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலசேரியைப் பூர்வீகமாகக் கொண்டவர், அவரது தாய் ஷியாமா, வளப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர். இந்த குடும்பம் 2006 முதல் கத்தாரில் வசித்து வருகிறது.


ஜம்ஷெத் கோழிக்கோடு பல்கலைக்கழகத்துக்காக கால்பந்து விளையாடியுள்ளார், மேலும் தனது மகனின் பயிற்சியில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.


கத்தாரில் உள்ள ஆஸ்பியர் அகாடமியில் பயிற்சி பெற்ற தஹ்சீனுக்கு, இளம் வயதிலேயே அல்-துஹைல் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்காக விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. விரைவில் அவர் தேசிய அணியிலும் இடம் பிடித்தார்.


அவர் 2026 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.


தோஹாவில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற சர்ச்சைக்குரிய 2024 உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியிலும் அவர் களத்தில் இருந்தார்.


அந்தப் போட்டியில் கத்தார் அணி இந்தியாவை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது, ஆனால் நடுவரின் முடிவு விமர்சனத்துக்கு உள்ளானது.


அவர் சர்வதேச அளவில் இதுவரை எந்த கோலும் அடிக்கவில்லை.


நிஷான் வேலுப்பிள்ளை - ஆஸ்திரேலியா

நிஷான் ஆஸ்திரேலியாவில் பிறந்து மெல்போர்னில் வளர்ந்தார்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,நிஷான், ஆஸ்திரேலிய தேசிய அணியான 'சாக்கரூஸ்'-இல் ஒரு தாக்குதல் ஆட்டக்காரராக அறியப்படுகிறார்.

25 வயதான நிஷான் வேலுப்பிள்ளை, ஓர் ஆங்கிலோ-இந்திய தாய் மற்றும் இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மலேசியத் தந்தை ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.


நிஷான் ஆஸ்திரேலியாவில் பிறந்து மெல்போர்னில் வளர்ந்தார்.


கிளப் கால்பந்தில், அவர் மெல்போர்ன் விக்டரி அணிக்காக விளையாடுகிறார். ஆஸ்திரேலிய தேசிய அணியான சாக்கரூஸின் தாக்குதல் ஆட்டக்காரராக அவர் அறியப்படுகிறார்.


2024 ஆம் ஆண்டில், சீனாவுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பை அவர் பெற்றார், மேலும் அதே போட்டியில் அவர் தனது முதல் சர்வதேச கோலையும் அடித்தார்.


இதுவரை ஏழு சர்வதேசப் போட்டிகளில் மூன்று கோல்களை அடித்துள்ளார் நிஷான் .


சாமுவேல் முத்துசாமி - காங்கோ ஜனநாயகக் குடியரசு

சாமுவேல் பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சாமுவேல் 2019 முதல் காங்கோ ஜனநாயகக் குடியரசு அணிக்காக விளையாடி வருகிறார்.

சாமுவேல் முத்துசாமியின் தந்தை இந்தியத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் மற்றும் கரீபியன் பிராந்தியமான குவாடலூப்பைச் சேர்ந்தவர். அவரது தாய் காங்கோவை பூர்வீகமாகக் கொண்டவர். அவர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் பிறந்தார்.


ஃபிஃபா விதிகளின்படி, ஒரு வீரர் தனது பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியின் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும், ஆனால் அவர் அந்த நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும்.


2019 முதல் காங்கோ ஜனநாயகக் குடியரசு அணிக்காக விளையாடி வரும் சாமுவேல் முத்துசாமி, இதுவரை 57 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.


சர்வதேச அளவில் அவர் கோல்கள் எதுவும் அடிக்கவில்லை, ஆனால் கிளப் கால்பந்தில் 14 கோல்களை அடித்துள்ளார்.



இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 17 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள போதிலும், இன்றைய காலத்திலும் அதன் பாதிப்புகள் மக்கள் மத்தியில் இருந்த வண்ணமே காணப்படுகின்றது.

குறிப்பாக மனித புதைக்குழிகள், புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் அவ்வப்போது தோண்டப்பட்டு வருகின்ற பின்னணியில் தற்போது யாழ்ப்பாணத்தில் தோண்டப்பட்டு வரும் செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து ஜூன் 17 அன்று வரை சுமார் 360க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதியில் தோண்ட தோண்ட முறையற்ற விதத்தில் புதைக்கப்பட்ட சந்தேகத்துக்கிடமான மேலும் பல மனித எலும்புக்கூடுகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு தொடர்ந்து அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


செம்மணி மனிதப் புதைகுழி என்றால் என்ன?
யாழ்ப்பாணம் நகருக்குள் பிரவேசிக்கும் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள ஒரு இடமே செம்மணி பிரதேசமாகும்.

இந்த செம்மணி பகுதியில் 1999ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது அந்த இடத்தில் மனிதப் புதைகுழியொன்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

வட பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து (LTTE) யாழ்ப்பாணத்தை, இலங்கை அரசாங்கம் 1995ம் ஆண்டு கைப்பற்றியிருந்தது.

இந்த காலப் பகுதியில் யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் காணாமல் போனதாக கூறப்படும் தமிழர்கள் செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவ்வாறு வெளியான தகவல்களின் அடிப்படையில் 1999ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் அந்த இடத்தில் மனிதப் புதைகுழி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகளில் பல எலும்புக்கூடுகள் அந்த காலப் பகுதியில் மீட்கப்பட்டதுடன், அந்நடவடிக்கை இடைநடுவில் கைவிடப்பட்டது.

இவ்வாறான பின்னணியில், செம்மணி பகுதியிலுள்ள சித்துபாத்தி இந்து மயான பூமியின் அபிவிருத்தி பணிகளுக்கான நடவடிக்கை கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த இடத்தில் முறையற்ற விதத்தில் புதைக்கப்பட்ட சடலங்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழி 
படக்குறிப்பு,மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் உள்ளிட்ட பலரின் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (கோப்புப்படம்)
செம்மணியில் தோண்டப்படுவது உண்மையாகவே மனிதப் புதைகுழியா? அல்லது மயானமா?
செம்மணி - சித்துபாத்தி இந்து மயானம் என்ற போதிலும், அந்த இடத்தில் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ள விதம் முறையற்ற முறையில் காணப்படுவதாக, வழக்கறிஞர் வி.எஸ்.நிரஞ்ஜன் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

''இதுவொரு இந்து மயானம். இந்து மயானத்தில் சடலங்கள் புதைக்கப்படமாட்டாது. தகனம் செய்யப்படும். அவ்வாறு புதைக்கப்படுவதாக இருந்தாலும், அதற்கான முறையொன்று இருக்கின்றது. எந்த பக்கத்தில் தலை வைக்க வேண்டும், கையை எப்படி வைக்க வேண்டும், காலை எப்படி வைக்க வேண்டும் என்ற முறையொன்று இருக்கின்றது. இது அப்படியில்லை. ஒரு சடலத்துக்கு மேல் இன்னுமொரு சடலத்தை வைத்து, ஒரு பக்கத்தில் தலை, மறுபக்கத்தில் மற்றைய தலை உள்ளது, மேலும் கால்கள் மடிக்கப்பட்டு இருக்கின்றன, நீதிமன்றமே இதுவொரு குற்றப் பிரதேசமாக பிரகடனப்படுத்தியுள்ளது." என வி எஸ்.நிரஞ்ஜன் குறிப்பிடுகின்றார்.

சித்துபாத்தியின் இன்றைய நிலைமை என்ன?

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, அரசாங்கத்தின் உதவியுடன் சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

ஒரே இடத்தில் இரண்டு மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டதாக, வழக்கறிஞர் வி.எஸ்.நிரஞ்ஜன் தெரிவிக்கின்றார்.

''ஒரே இடத்தில் இரண்டு மனித புதைக்குழிகள் கண்டறியப்பட்டன. இரண்டாவது மனித புதைக்குழியில் 9 மனித எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. அதை அதன் பின்னர் தற்காலிகமாக நிறுத்திவிட்டோம். சட்டரீதியான முறையில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், சித்துபாத்தி இந்து மயான சபையினரும் அது சம்பந்தமாக சில அறிக்கைகளை சொன்னார்கள்." என்றார்.

இந்து மயானத்தில் வயது குறைந்தவர்களை அடக்கம் செய்வதற்கும், நீதிமன்றத்திலிருந்து வருகின்ற உடல்களை அடக்கம் செய்வதற்கும் என்று இந்த இடத்தை ஒதுக்கியிருந்ததாகவும், அந்த புதைக்குழி தான் இரண்டாவது புதைக்குழியாக வருகின்றமையினால், தாங்கள் தோண்டுகின்ற போது உரிய முறையில் சடலங்கள் புதைக்கப்பட்டிருந்ததாகவும் வழக்கறிஞர் வி.எஸ்.நிரஞ்ஜன் தெரிவித்தார்.

"அது ஒரு சட்டரீதியான முறையில் காணப்பட்டமையினால் அதை நாங்கள் இடையில் நிறுத்தி விட்டோம். முதலாவதாக கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் தான் தற்போது ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன" என அவர் குறிப்பிடுகின்றார்.

சித்துபாத்தி மனித புதைக்குழியிலிருந்து இதுவரை 366 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அவற்றில் 357 மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், எலும்புகள் அல்லாத பிற சாட்சி பொருட்கள் 119 அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் குறிப்பிடுகின்றார்.

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்காக 56 நாட்களுக்கான நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

'இதில் என்னுடைய அவதானத்தின் படி, சிறுவர்கள் மூன்றில் ஒரு பகுதியை விடவும் சற்று அதிகமாகவே இருக்கலாம், ஆனால் சரியான கணக்கு இப்போதைக்கு தெரியாது. உரிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் போது தான் அதை சரியாக சொல்ல முடியும். மன்னார் சதொச மனித புதைக்குழியிலிருந்து ஆகக்கூடுதலான 276 மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், இந்த தொகையை தற்போது இது மிஞ்சும் என்ற நிலைமை காணப்படுகின்றது." என அவர் குறிப்பிடுகின்றார்.

காணாமல் போனோரின் உறவினர்கள் என்ன சொல்கின்றார்கள்?
லீலா தேவி ஆனந்த நடராஜா பட மூலாதாரம்,Handout
படக்குறிப்பு,இனப்படுகொலை செய்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வழங்கும் தண்டனையில் இனியும் தமிழர்கள் மீது கை வைக்க நினைப்போருக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று லீலா தேவி ஆனந்த நடராஜா தெரிவித்துள்ளார்.
மனித புதைக்குழியிலிருந்து அகழ்வுகளை மேற்கொண்டு, அதிலிருந்து மீட்கப்படுவோருக்கு இறுதி கிரியைகளை செய்வதை விடவும், தமது உறவினர்களுக்கு இந்த நிலைமையை ஏற்படுத்திய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதே முக்கியமானது என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லீலா தேவி ஆனந்த நடராஜா தெரிவிக்கின்றார்.

அவ்வாறு தண்டனை வழங்கப்படும் பட்சத்திலேயே இவ்வாறான இனப் படுகொலைகள் இனியும் நடக்காது தடுக்க முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

'செம்மணியை மிகப் பெரிய மனித புதைக்குழியாக அடையாளப்படுத்தியதாக சொன்னால், அதில் ஒரு அர்த்தம் இருக்கின்றது, செம்மணியில் பெருமளவான மக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றது என்பது தான் நேரடியாகவே தெரியவருகின்ற கருத்து. அதை செய்தது யார் என்பதை நாங்கள் முதலில் அறிய வேண்டும்." என்றார் அவர்.

முன்னாள் ராணுவ அதிகாரியான சோமபால ராஜபக்ஸ சாட்சி சொல்ல முன்வந்துள்ளதாகவும், ஆனால் இன்று வரை அதற்கான நடவடிக்கைகளை எவரும் எடுக்கவில்லை என்றும் கூறிய அவர், பாதிக்கப்பட்ட மக்கள் என்ற விதத்தில் அது பெருமளவான கவலையளிக்கின்றது என்றும் லீலா தேவி ஆனந்த நடராஜா தெரிவிக்கின்றார்.

மனித புதைகுழியிலிருந்து மீட்கப்படுகின்ற எலும்புக்கூடுகளை ஆய்வு செய்து, அது யாருடைய உடல்கள் என்று கண்டறிவதில் என்ன பயன் இருக்கின்றது என்று அவர் கேள்வி எழுப்புகின்றார்.

"இதிலுள்ள எமது உறவுகளை கண்டுபிடித்து அவர்களுக்கான கிரியைகளை செய்ய வேண்டும் என்பது ஆசையில்லை. எமது உறவுகளுக்கு இவ்வாறான நிலைமையை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனையை வழங்க வேண்டும் என்ற எண்ணமே உள்ளது." என அவர் குறிப்பிடுகின்றார்.

அரசாங்கம் எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குகின்றது?
செம்மணி மனித புதைக்குழியை தொடர்ச்சியாக அகழ்ந்து, அதற்கான ஆய்வுகளை செய்வதற்கான நிதியை அரசாங்கம் வழங்கியுள்ளது.

சித்துபாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 27வது நாளாக இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டதுடன், தொடர்ச்சியாக 56 நாட்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாக, பெயர் தெரிவிக்க விரும்பாத உயர்மட்ட அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

நீதி அமைச்சரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நிலையில், நீதி அமைச்சர் உள்ளிட்ட உயர் மட்ட குழுவினர் விரைவில் சித்துபாத்தி மனித புதைக்குழியின் அகழ்வு பணிகளை ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான அனுமதி நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ள நிலையில், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் உள்ளிட்ட முக்கிய தரப்பினர் விரைவில் சித்துபாத்தி பகுதிக்கு சென்று எதிர்வரும் நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளதாகவும் பிபிசி தமிழிடம் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தொடரும் மனித புதைக்குழிகளின் அகழ்வுகள்?
வழக்கறிஞர் வி.எஸ்.நிரஞ்ஜன்பட மூலாதாரம்,Handout
படக்குறிப்பு,வழக்கறிஞர் வி.எஸ்.நிரஞ்ஜன்
இலங்கையில் 24க்கும் அதிகமான மனித புதைகுழிகள் அகழப்பட்டுள்ள போதிலும், அவற்றை உரிய முறையில் மேற்கொள்வதற்காக சட்டங்கள் இல்லை என, வழக்கறிஞர் வி.எஸ்.நிரஞ்ஜன் தெரிவிக்கின்றார்.

அவரது கூற்றுப்படி, இலங்கையில் இதுவரை 56க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள் இருக்கின்றன. அவற்றில் 24 மனித புதைகுழிகள் அகழப்பட்டுள்ளன.

திருகேதீஸ்வரம், சதொச, கொக்குத்தொடுவாய், செம்மணி ஆகிய மனித புதைகுழி அகழ்வுகளில் ஈடுபட்டவர் என்ற அடிப்படையில் இதில் இப்போது தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாகவும், பாரிய மனித புதைகுழிகள் தொடர்பான சட்ட வரையறையொன்று இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

"இங்கு எலும்பு மாத்திரமே இருக்கின்றது. அதற்கான சட்டமோ அல்லது சட்டக்கோவையோ இதுவரை உருவாக்கப்படவில்லை." என்றும் அவர் தெரிவித்தார்.

"எமது தண்டனை சட்டகோவையின் கீழ் உள்ள உடற்கூராய்வு என்ற சரத்துக்களின் கீழ் தான் இந்த விடயங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. எலும்புகளுடன் எடுக்கப்பட்ட பிற பொருட்களை ஆய்வு செய்வது காலத்தை கணிக்கக்கூடியதாக இருக்கும். மற்றையது இந்த சட்ட மருத்துவ அதிகாரிகளினால் அந்த எலும்பு எத்தனையாவது வயதில் இருக்கின்றது. ஆணா, பெண்ணா? இறப்புக்கனா காரணத்தை கண்டறிய முடியும் என்றால் இதை சொல்லிவிடுவார்கள். அதற்கான அறிக்கையை கொடுப்பார்கள். ஆனால் அது எந்த ஆண்டு இறந்தார்கள் என்பதை எவரும் சொல்ல மாட்டார்கள். அதை கண்டறிவதற்காக ஆய்வுகளை அமெரிக்காவின் ஃபுளோரிடாவுக்கு கொண்டு சென்றே செய்ய வேண்டும்." என அவர் தெரிவித்தார்.

சதொச மனித புதைக்குழிக்கு மாத்திரம் தான் அந்த ஆய்வுகளை செய்திருப்பதாக தெரிவித்த அவர், அது சரியான காலத்தைக் காட்டாது மாறாக, ஒரு கால எல்லையை மாத்திரமே காட்டும் எனவும் அவர் கூறினார். "அதனால் அதனூடாக நீதியை பெற்றுக்கொள்ள முடியுமா என்று சொல்ல முடியாது.' என வி.எஸ்.நிரஞ்ஜன் கூறுகின்றார்.

'காணாமல் போனோர் உறவினர்கள் இன்றும் தமது உறவுகளை தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் டிஎன்ஏ மாதிரிகளையும், எலும்பு கூடுகளிலுள்ள மாதிரிகளையும் ஒப்பிட்டு பார்த்தால், ஏதாவது எமக்கு பிரயோசனமானதாக இருக்கும். ஆனால், அதற்காக தொழில்நுட்ப வசதிகளும், அரசாங்கத்தின் நிதி பங்களிப்பும், வசதி வாய்ப்புக்களும், அதற்கான நிறுவன அமைப்புக்களும் இலங்கையில் இல்லை." என அவர் குறிப்பிடுகின்றார்.

 

புதன்கிழமை அன்று அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தமானது ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதைக் குறிக்கிறது.


அதே வேளையில், மற்ற அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகள் தொடரும்.


பிரான்சில் நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு நீண்ட செய்தியாளர் சந்திப்பில், இதனைத் தன்னுடைய நாட்டுக்குக் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகக் குறிப்பிட்டார்.


புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) புதன்கிழமை அன்று மின்னணு முறையில் கையெழுத்திடப்பட்டு, தற்போது முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக இரு நாடுகளும் பின்னர் உறுதிப்படுத்தின.


இருப்பினும், அமெரிக்க அதிகாரிகள் செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்ட உரையாடல்களின் படி, இரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுக்கும் டிரம்பின் இலக்கை அடைவதற்கான ஒரு விரிவான மற்றும் இறுதி அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு நாடுகளும் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.


,ஒப்பந்தத்திற்குப் பதிலாக இரானுக்கு அமெரிக்கா எந்தப் பணமும் தராது என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

இரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை வாங்கவோ, உருவாக்கவோ, அல்லது உற்பத்தி செய்யவோ முடியாது என்பதை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது என டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.


ஆனால், பேச்சுவார்த்தையின் போது அதிகாரிகளால் வாசிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் மூல உரையானது, ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட அந்தக் கூற்றுக்கு இணையானதாக இல்லை என தெரிகிறது.


அதற்குப் பதிலாக, போர்நிறுத்தத்தை நீட்டிக்கும் இந்த ஒப்பந்தம், அடுத்த 60 நாட்களுக்குள் நிரந்தர அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்காக இரு எதிரி நாடுகளுக்கும் இடையிலான முயற்சிகளைத் துரிதப்படுத்துவதாகத் தோன்றுகிறது.


இரானுக்கான 300 பில்லியன் டாலர் திட்டம் என்பது என்ன?

இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சிபட மூலாதாரம்,Iranian Foreign Ministry / Handout/Anadolu via Getty Images

படக்குறிப்பு,இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஜூன் 16 அன்று தெஹ்ரானில் இரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே எட்டப்பட்ட ஒப்பந்தம் குறித்து தூதர்கள் மற்றும் ராஜீய பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.

தற்போது, இந்த ஒப்பந்தத்தின் உரை, சர்வதேச அணுசக்தி முகமையின் மேற்பார்வையின் கீழ் இரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை குறைந்த சுத்திகரிக்கப்பட்ட தரத்துக்கு குறைக்கும் என்பதை மட்டுமே உறுதி செய்கிறது.


புதன்கிழமை, மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் இதனை இரானின் "ஒரு குறிப்பிடத்தக்க சலுகை" என்று குறிப்பிட்டார்.


ஆனால் இதைச் செய்வதற்கான வழிமுறை மற்றும் இதனுடன் தொடர்புடைய காலக்கெடு போன்ற தொழில்நுட்ப விவரங்கள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.


இந்த விவகாரங்களில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான முயற்சிகள், அடுத்த 60 நாட்கள் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் மேற்கொள்ளப்படும்.


இந்த பேச்சுவார்த்தைகள், வெள்ளிக்கிழமை முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்த கையெழுத்துக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக தொடங்கும்.


இரானுக்கு அமெரிக்கா எந்தப் பணமும் தராது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


2016 ஆம் ஆண்டில் ஒபாமா நிர்வாகத்தால் இரானுக்கு வழங்கப்பட்ட 1.7 பில்லியன் டாலர் தொகையை அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்து வந்ததால், இது அவருக்கு ஒரு முக்கிய பிரச்னையாக உள்ளது.


தனது அரசியல் பாரம்பரியத்தை மனதில் வைத்து, முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஒப்பந்தத்தை விட தனது இரான் ஒப்பந்தம் சிறந்தது என்பதைக் காட்ட டிரம்ப் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.


இரானுக்கு எதிராகத் தான் ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதை நிரூபிக்க, பணம் கொடுக்கும் இந்த விவகாரத்தையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.


ஆனால் ஒப்பந்த உரையின் படி, இரானை மறுசீரமைக்க உதவுவதற்காக குறைந்தபட்சம் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான இறுதி மற்றும் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு திட்டத்தை உருவாக்க, பிராந்திய கூட்டாளிகளுடன் அமெரிக்கா ஒத்துழைக்கும்.


டிரம்பின் ஒப்பந்தம் குறித்து ஏன் கேள்விகள் எழுப்பப்படுகின்றன?

இந்த ஒப்பந்தம் இரானுக்கு ஒரு டாலர் கூட வழங்குமாறு அமெரிக்காவைக் கட்டாயப்படுத்தவில்லை என்று மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.


ஆனால் ஒப்பந்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழி மிகவும் தெளிவற்றதாக உள்ளது, மேலும் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டால், எதிர்காலத்தில் அமெரிக்கா இரானுக்கு சில தொகையை வழங்குவதற்கான வாய்ப்பு இதில் உள்ளது.


இது டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோருக்கு ஒரு பெரிய அரசியல் பிரச்னையாக மாறக்கூடும்.


எந்தவொரு புதிய "முடிவற்ற போர்களையும்" தொடங்க மாட்டோம் என்று அவர்கள் இருவரும் தேர்தல் பிரசாரத்தின் போது உறுதியளித்திருந்தனர்.


மற்றொரு நாட்டின் விவகாரங்களில் தலையிடும் கொள்கையைக் கொண்ட 'மேக் அமெரிக்கா கிரேட் அகைன்' ஆதரவாளர்களும் இந்த ஏற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும்.


இரானுக்கான எந்தவொரு பொருளாதார உதவியும் அமெரிக்காவிலிருந்து நேரடியாக வராது என்றாலும் இந்த எதிர்ப்பு எழலாம்.


டிரம்பின் சொந்த குடியரசுக் கட்சிக்குள்ளும் கூட, இந்த ஒப்பந்தத்தின் மீதான விமர்சனங்கள் வேகமாக அதிகரித்துள்ளன.


நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த ஒப்பந்தம் மற்றும் இதனுடன் தொடர்புடைய நிச்சயமற்ற தன்மைகள் குறித்து டிரம்ப் நிர்வாகத்திடமிருந்து விரிவான தகவல்களையும் விளக்கங்களையும் கோரி வருகின்றனர்.


குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் சிலரும் இந்த ஒப்பந்தம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர், மேலும் முன்னணி குடியரசுக் கட்சி செனட் உறுப்பினர் ஒருவர் இதை வெளிப்படையாக விமர்சித்துள்ளார். டிரம்ப் இரானுக்கு பல சலுகைகளை வழங்கியுள்ளார், ஆனால் அதற்குப் பதிலாகப் போதிய பலனைப் பெறவில்லை என்று அவர் கூறியுள்ளார்.


பதவி விலகும் லூசியானா செனட் உறுப்பினர் பில் காசிடி, டிரம்ப் ஆதரித்த எதிர்ப்பாளருக்கு எதிரான முதன்மைத் தேர்தலில் தோல்வியடைந்தார்.


"இரான் அதன் அணுசக்தி லட்சியங்களிலிருந்து திறம்பட தடுக்கப்படவில்லை. மேலும், ஹோர்மூஸ் நீரிணையை மூடுவது அல்லது அச்சுறுத்துவது போன்ற உத்திகள் வேலை செய்கின்றன என்பதை இரான் கற்றுக்கொண்டுள்ளது, மேலும் எதிர்காலத்தில் இதை இரான் பயன்படுத்திக்கொள்ள முயலும்" என்று அவர் எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார்.


மேலும், "இது பல ஆண்டு காலங்களில் செய்யப்பட்ட மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கைத் தவறு" என்றும் அந்த குடியரசுக் கட்சித் தலைவர் கூறியுள்ளார்.


வேறு பல முக்கிய விவகாரங்களுக்கும் இந்த ஒன்றரை பக்க ஒப்பந்தத்தில் மிகக் குறைந்த இடமே ஒதுக்கப்பட்டுள்ளது.


ஹெஸ்பொலாவின் நிதி உதவியை நிறுத்த முடியுமா?

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் உள்ள பகைமை ஒழிப்பு பிரிவு ஹெஸ்பொலா அமைப்பிற்கும் பொருந்தும். 

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஹெஸ்பொலா அமைப்புக்கான நிதியுதவியைத் தடுப்பதும் டிரம்ப் நிர்வாகத்தின் ஒரு முக்கிய குறிக்கோள் ஆகும்.

போர் தொடங்கியபோது, இப்பிராந்தியத்தில் செயல்பட்டு வரும் ஹெஸ்பொலா போன்ற அதன் கூட்டாளிகள் அல்லது பிரதிநிதி குழுக்களுக்கு இரான் நிதியுதவி வழங்குவதைத் தடுப்பதே தனது முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று என்று டிரம்ப் கூறியிருந்தார்.


அமெரிக்காவுடன் இணைந்து போரைத் தொடங்கியிருந்த இஸ்ரேலுக்கும் இது ஒரு முக்கிய கவலையாக இருந்தது, மேலும் அது லெபனானில் இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலாவுக்கு எதிராக ஒரு தனி ராணுவ நடவடிக்கையையும் தொடங்கியிருந்தது.


இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் உள்ள பகைமை ஒழிப்பு பிரிவு ஹெஸ்பொலா அமைப்புக்கும் பொருந்தும். இருப்பினும், இதைத் தவிர இந்த ஒப்பந்தத்தில் அந்த அமைப்பைப் பற்றி வேறு எந்தக் குறிப்பும் பெரிதாக இல்லை.


அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள், ஹெஸ்பொலா மற்றும் பிராந்தியத்தில் உள்ள பிற பிரதிநிதி குழுக்களுக்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு இரானுக்கு அழுத்தம் கொடுக்குமா என்பதும் தெளிவாக இல்லை.


புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒப்பந்தத்தின் உரையில் இரானின் ஏவுகணைத் திட்டம் குறித்தும் விரிவாகக் குறிப்பிடப்படவில்லை.


போரின் தொடக்கத்தில் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் தங்களது முன்னுரிமைகளாகக் குறிப்பிட்ட முக்கிய விவகாரங்களில் இதுவும் ஒன்றாகும்.


இந்த வாரம் ஜெனீவாவில் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், ஒரு இறுதி மற்றும் விரிவான ஒப்பந்தத்துக்கு வழிவகுக்குமா என்பது இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது.


இந்த ஒப்பந்தம், இரு தரப்பினரும் 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தைகளை முடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது.


ஆனால் தேவைப்பட்டால் இந்த காலக்கெடுவை நீட்டிக்க முடியும் என்றும் அது கூறுகிறது.


இவ்வளவு குறுகிய காலத்தில் இன்னும் விரிவான மற்றும் நீடித்த ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்பதில் இரு நாடுகளுமே முழு நம்பிக்கையுடன் இல்லை என்பதை இது உணர்த்தக்கூடும்.


ஜி-7 உச்சிமாநாட்டில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, இரானுடன் நீடித்த அமைதி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து டிரம்ப் அதிக நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை.


" 60 நாட்களில் ஒரு ஒப்பந்தத்தை எட்டவில்லை என்றால், அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. நாங்கள் மீண்டும் குண்டுவீச்சைத் தொடங்குவோம்" என்று டிரம்ப் கூறியுள்ளார்.

 தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர் நலின் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு மீதான மேலதிக பரிசீலனையை 25ஆம் தேதி வரை ஒத்திவைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

சர்ச்சைக்குரிய கேரம் பலகை வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரால் அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை நிராகரிக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்த மனு, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் பி. குமரன் ரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


வழக்கின் விசாரணையின் போது, ​​பிரதிவாதிக்காக சட்டமா அதிபர் ராம்சி பாச்சாவின் அறிவுறுத்தலின் பேரில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி- அலி சப்ரி, இதே சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில் தனது கட்சிக்காரர் ஏற்கனவே தண்டிக்கப்பட்டுவிட்டார் என்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.


கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்றத்தின் விசாரணைத் தீர்ப்பாயம் தனது கட்சிக்காரருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


இருப்பினும், அதே குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சட்டமா அதிபர் மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார் என்பதை ஜனாதிபதி சட்ட ஆலோசகர் சுட்டிக்காட்டினார். ஒரே குற்றத்திற்காக இருமுறை சட்ட நடவடிக்கை எடுப்பது சட்டத்திற்கு முரணானது என்று அவர் வாதிட்டார்.


உயர் நீதிமன்ற விசாரணையின் போது தனது கட்சிக்காரர் இது தொடர்பாக ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளை எழுப்பியிருந்தபோதிலும், விசாரணை நீதிபதி அந்த ஆட்சேபனைகளை நிராகரித்துவிட்டார் என்று ஜனாதிபதி சட்டத்தரணி சப்ரி மேலும் தெரிவித்தார்.


அதன்படி, பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டு சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.


அதன்பிறகு, மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த மனு மீதான மேலதிக பரிசீலனையை 25ஆம் தேதி வரை ஒத்திவைத்தது. அந்நாளில், மனுதாரரின் கோரிக்கைகள் தொடர்பான அரசின் நிலைப்பாட்டை சட்டமா அதிபர் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், 14,000 கேரம் பலகைகளும் 11,000 தாரை பலகைகளும் சத்தோசா வலையமைப்பு மூலம் இறக்குமதி செய்யப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் அலுவலகங்களுக்கு விநியோகிக்கப்பட்டதாகவும், அதன் விளைவாக அரசுக்கு ரூ. 39 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளிலிருந்து இந்த வழக்கு உருவாகியுள்ளது.


இந்தச் சம்பவம் தொடர்பாக, சட்டமா அதிபர், முன்னாள் அமைச்சர் நலின் பெர்னாண்டோ மீது பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருந்தார்.

 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது பொது நூலகத்தின் ஏற்பாட்டில், கமு/கமு/ எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தின் தரம் 8 மாணவர்களுக்கான நூலக விழிப்புணர்வு மற்றும் வாசிப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். ஆரிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது பொது நூலகர் ஏ.எல்.எம். முஸ்தாக் மற்றும் நூலக அபிவிருத்தித் திட்டப் பணிகளை முன்னெடுத்து வரும் ஆர்.எம். ஹஸன் ஆகியோர் மாணவர்களிடையே உரையாற்றினர்.

மேலும், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் (NISD) பல்கலைக்கழக மாணவர்களான எல். நுஸ்லா ரிஸ்னி, எம்.கே.எப். ஸனா அப்ரி மற்றும் ஏ.என்.ஏ. அத்னாப் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியம், நூலகப் பயன்பாட்டின் நன்மைகள் மற்றும் அறிவுத் திறன் வளர்ச்சியில் வாசிப்பின் பங்கு குறித்து விளக்கமளித்தனர்.

நிகழ்வின் போது புரொஜெக்டர் வசதியுடன் பல்வேறு காட்சிப்படுத்தல்கள் இடம்பெற்றதுடன், மாணவர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் குழுச் செயற்பாடுகளும் நடத்தப்பட்டன. "வாழ்நாள் முழுவதும் எழுத்தே நண்பன்" எனும் தொனிப்பொருளில் 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளின் ஒரு அங்கமாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவதற்கும், நூலகங்களை திறம்பட பயன்படுத்தும் பண்பை வளர்ப்பதற்கும் முக்கிய பங்காற்றியதாக கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

முதல் முறையாக உலக கோப்பைக்கு தேர்வான ஒரு நாடு Cape Verde 


4 Euro Cup 

1 World Cup வாங்கின‌ ஸ்பெயினை ட்ரா பண்ண வச்சிட்டானுக 🔥


இந்த Goal Keeper வயசு 40


தனக்கு வந்த 13 Shot -களில் 

05 கோலை தடுத்துள்ளார்.


சவூதி லீக் உடனடியாக தூக்கிடுவானுக WC முடிஞ்சதும்!

 

sihanfarook

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600  பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுஸ்டிக்கும் முகமாக நிகழ்வு  வியாழக்கிழமை(11)  அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த  நினைவு தூபியில் நடைபெற்றது.


1990 ஜூன் 11 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட 600 காவல்துறை அதிகாரிகளின் நினைவாக  அமைதி என்ற பெயரில் இம்மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அம்பாறை பிரதேச  பதில்  உதவி பொலிஸ் அத்தியட்சகர்  நுவன் தந்தநாராயண  அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபரை   வரவேற்றார்.

குறித்த நிகழ்வின் போது  அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்ல   உள்ளிட்ட  பொலிஸ்  உயரதிகாரிகள்   பொலிஸார் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள்  பொதுமக்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக தமிழீழ விடுதலைப் புலிகளினால் 1990 ஆம் ஆண்டு கடத்திக் கொல்லப்பட்ட பொலிஸார் உட்பட யுத்தத்தினால் உயிர்நீத்த மற்றும்  கடந்த கால யுத்தம் உள்ளிட்ட இதர காரணங்களினால் மரணமடைந்த பொலிஸாரின்  குடும்பங்களின் நலன் குறித்து    இதன் போது ஆராயப்பட்டன.

இது தவிர முதலில், அனைத்து மத சடங்குகளும் நடைபெற்ற பின்னர், நிகழ்வின் ஆரம்பத்தில்  அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்லவினால்    பொலிஸ் கொடி அரை கம்பத்தில் ஏற்றப்பட்டதுடன்  உயிர்நீர்த்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு  மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.  

1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அம்பாறை மாவட்டத்தின்  கல்முனை ,பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, உள்ளிட்ட பல பொலீஸ் நிலையங்களை முற்றுகையிட்ட  புலிகள் சகல சிங்கள முஸ்லிம் பொலீசார்களையும் ஆயுதங்களையும் அள்ளிச் சென்றார்கள். அதன் பின்பு திருக்கோவில் பகுதியில் உள்ள ரூபஸ் குளம்  காட்டுப் பகுதியில் சகல பொலிசாரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.