"எந்தவொரு நாட்டின் வான் எல்லைக்குள் எது நுழைந்தாலும் அது தாக்குதலாகவே கருதப்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏவுகணை போன்ற வடிவத்துடன் ஒரு பொருள் பக்கத்து நாட்டில் விழுந்தால் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பாதுகாப்பு விதிகளும் சட்டங்களும் கூறுகின்றன. பாகிஸ்தான் அப்படி செய்யாதது, புத்திசாலித்தனமான முடிவு மட்டுமின்றி ஒரு விவேகமான முடிவாகும்," என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
2022ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி பாகிஸ்தானின் மியான் சன்னுவில் வெடிமருந்து நிரப்பப்படாத காலியான இந்திய ஏவுகணை கலன் (பிரமோஸ் போன்ற வடிவிலானது) "தற்செயலாக" விழுந்த பிறகு, பாகிஸ்தான் "தீர்க்கமாக சிந்தித்து வெளிப்படுத்திய எதிர்வினையை" பாராட்ட இந்திய கொள்கை ஆராய்ச்சி மையத்தின் மூத்த உறுப்பினரான சுஷாந்த் சிங்கின் பயன்படுத்திய வார்த்தைகள் இவை.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தானை பாராட்டிய ஒரே இந்தியர் சுஷாந்த் சிங் மட்டுமல்ல. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றமான உறவுகள், சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் அணுசக்தி திறன்களை கருத்தில்கொள்ளும்போது, இந்த 'தற்செயலான ஏவுகணை' சம்பவம், இரு நாடுகளுக்கும் இடையே மோதலுக்கு வழி வகுத்திருக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஆனால் இப்படி நடக்கவில்லை. பாகிஸ்தான் அரசுக்கே இதன் பெருமை சாரும் என்று பல இந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் ராணுவ நிபுணர்களும் கூறுகின்றனர். குறிப்பாக இந்தியா இதை ஏற்றுக்கொள்ள இரண்டு நாட்கள் எடுத்துக்கொண்ட சூழ்நிலையில் இது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
பாகிஸ்தானின் கானேவால் மாவட்டத்தில் உள்ள மியான் சன்னு நகரில் மார்ச் 9ஆம் தேதி எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. அதிவேகமாக பறந்துவந்த பொருள் ஒன்று உள்ளூர் குடியிருப்பு பகுதி மீது விழுந்தது.
பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறையின் (ISPR) தலைமை இயக்குநர் ஜெனரல் மேஜர் பாபர் இஃப்திகார், மார்ச் 10 அன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் "மியான் சன்னுவில் விழுந்த அதிவேகப் பொருள் அநேகமாக இந்திய ஏவுகணையாக இருக்கலாம்" என்று கூறினார்.
அடுத்த நாள், மார்ச் 11 ஆம் தேதி, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில், "வழக்கமான பராமரிப்பு பணியின் போது தொழில்நுட்பக் கோளாறால் ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டது" என்று ஒப்புக்கொண்டது. மேலும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
"ஒரு பெரிய நகரத்தை நோக்கி ஏவுகணை சென்றிருந்தால் என்ன ஆகியிருக்கும்?"
இது குறித்து புது டெல்லியில் உள்ள கொள்கை ஆராய்ச்சி மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் சுஷாந்த் சிங் பிபிசியிடம் பேசினார்.
"இந்த ஏவுகணை ஒரு பெரிய நகரத்தை நோக்கிச் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதுதான் இப்போது விவாதத்தின் மையமாக உள்ளது. அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை," என்று குறிப்பிட்டார்.
பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது என்று சுஷாந்த் கூறினார்.
"அப்படி இருந்தபோதிலும், எல்லைக்கு அப்பாலில் இருந்து வந்த ஏவுகணை தற்செயலாக ஏவப்பட்டதா இல்லையா என்பதை எந்த பாதுகாப்பு அமைப்பும் கணிக்க முடியாது."என்கிறார் அவர்.
"எந்தவொரு நாட்டின் வான் எல்லைக்குள் எது நுழைந்தாலும் அது தாக்குதலாகவே கருதப்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏவுகணை போன்ற வடிவத்துடன் ஒரு பொருள் பக்கத்து நாட்டில் விழுந்தால் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பாதுகாப்பு விதிகளும் சட்டங்களும் கூறுகின்றன. பாகிஸ்தான் அப்படி செய்யாதது, புத்திசாலித்தனமான முடிவு மட்டுமின்றி ஒரு விவேகமான முடிவாகும்," என்று அவர் குறிப்பிட்டார்.

Post a Comment
Post a Comment