இரு எம்.பிக்களது வீடுகள் தீக்கிரை சேதம்



 (காரைதீவு  நிருபர் சகா)


நாடாளாவிய ரீதியில் திங்கட்கிழமை (09) முதல் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தினால்  கடந்த இரண்டு நாட்களாக அம்பாறை மாவட்டத்தில் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான விமலவீர திசாநாயக்க மற்றும் வீரசிங்காவின் வீடுகள் தீக்கிரை தாக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டுமுள்ளன.

காலிமுகத்திடல், கோட்டாகோகம போராட்ட களத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தையடுத்து அம்பாறை மாவட்டத்திலும் இரண்டாவது நாளாக கடைகள் மூடப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றது.

பொத்துவில், திருக்கோயில் அக்கரைப்பற்று, நிந்தவூர் காரைதீவு சாய்ந்தமருது சம்மாந்துறை  கல்முனை, மருதமுனை அம்பாறை ஆகிய பிரதான நகரங்கள் உள்ளிட்ட பிரதேசங்கள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. 

எரிபொருள் நிரப்பு நிலையம், மருந்தகங்கள், அத்தியவசிய பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்களும் மூடப்பட்டுள்ளதை காண முடிகின்றது.

வைத்தியசாலைகளிலும் அத்தியவசிய சேவைகள் மட்டும் இடம்பெறுவதோடு பிரதேச செயலகங்கள், அரச, தனியார் வங்கிகள் மற்றும் தபால் திணைக்களத்தின் செயற்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

அக்கரைப்பற்று, கல்முனை, அம்பாறை ஆகிய பிரதேசங்களில் எவ்வித போக்குவரத்துகளும் இடம்பெறவில்லை, மக்கள் வீடுகளிலேயே தங்கியிருந்ததை காண முடிந்தது.

பொலிஸாரும், இராணுவத்தினரும் பிரதான நகரங்களில் விசேட ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை காணமுடிகின்றது.

எனினும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் நிலவும் அசாதாரண நிலை போலல்லாமல்  அம்பாறை மாவட்டத்தில் என்றிமில்லாதவாறு அமைதி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.